Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு.கேசுபாய் பட்டேலின் மறைவையொட்டி பிரதமர் விடுத்த இரங்கல் செய்தியின் மொழியாக்கம்


இன்று, குஜராத் மற்றும் நாட்டின் பெரும் புதல்வர் நம்மை விட்டுச் சென்று விட்டார். நமது அன்புக்குரிய கேசுபாய் பட்டேலின் மறைவுச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேசுபாய் பட்டேல் எனக்கு தந்தையைப் போன்றவராவார். அவரது மறைவு எனக்கு பேரிழப்பாகும். இந்த வெற்றிடம் எப்போதும் நிரப்ப இயலாததாகும். அவரது அறுபதாண்டு பொது வாழ்க்கையில், தேசியவாதம், நாட்டு நலன் என்ற ஒரே லட்சியத்தை மட்டுமே அவர் கொண்டிருந்தார்.

கேசுபாய் பெரும் ஆளுமைத் திறம் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். ஒரு புறம், அவர் மிகவும் மென்மையும், பணிவும் கொண்ட நடத்தையுடையவராக இருந்தார். மறுபுறம், முடிவுகளை எடுத்த அவரது உறுதிப்பாடு மிகவும் வலிமையானதாகும். சமுதாயத்துக்காக அவர் தமது வாழ்வை அர்ப்பணித்தார். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவுக்காகவும் அவர் தொண்டாற்றினார். அவரது ஒவ்வொரு முயற்சியும் குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே இருந்தது. ஒவ்வொரு குஜராத்தியையும் முன்னேற்றுவதாகவே அவர் எடுத்த முடிவுகள் அமைந்திருந்தன.

மிகவும் எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நமது கேசுபாய், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் இன்னல்களை நன்கு உணர்ந்திருந்தார். விவசாயிகளின் நலனே அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக அவர் எடுத்த முடிவுகள் மற்றும் மேற்கொண்ட கொள்கைகள் அனைத்திலும், விவசாயிகளின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுத்து வந்தார். கிராமவாசிகள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோருக்காக அவர் ஆற்றிய தொண்டுகள் மிகச்சிறந்தவை. தேசிய நலன், பொதுப் பணியில் அர்ப்பணிப்பு என தமது வாழ்க்கை முழுவதும் அவர் மேற்கொண்ட பணிகள் பல தலைமுறைகளையும் ஈர்த்து, ஊக்குவிக்கக்கூடியவை.

குஜராத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கேசுபாய் நன்கு தெரிந்தவராக இருந்தார். அவர், ஜனசங்கத்தையும், பிஜேபியையும் குஜராத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் சென்று, ஒவ்வொரு மண்டலத்திலும் அதை வலிமைப்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது, அவர் எவ்வாறு இருந்தார் என்பது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைத்து விதமான முயற்சிகளுடன் அவர் போராடினார்.

என்னைப் போன்ற ஏராளமான சாதாரணத் தொண்டர்களுக்கும் கேசுபாய் வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தார். நான் பிரமராக ஆன பின்னரும், தொடர்ந்து அவருடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தேன். எப்போதெல்லாம் குஜராத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவரைச் சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

சில வாரங்களுக்கு முன்பு, சோம்நாத் அறக்கட்டளையின் மெய்நிகர் கூட்டத்தின் போது, அவருடன் மிக நீண்ட உரையாடலை நான் மேற்கொண்டேன். அப்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இந்தக் கொரோனா தொற்று காலத்தில், தொலைபேசி மூலம் பல முறை அவருடன் பேசியுள்ளேன். அவரது உடல்நிலை குறித்து நான் அடிக்கடி விசாரிப்பது வழக்கம். அமைப்பு ரீதியிலும், போராட்ட காலத்திலும், நிர்வாக ரீதியிலும் சுமார் 45 ஆண்டுகளாக அவரை நான் மிக நெருக்கமாக அறிவேன். இன்று அவரைப் பற்றிய பல்வேறு சம்பவங்களும், நிகழ்வுகளும் எனது மனதில் நீங்காத நினைவுகளாய் நிழலாடுகின்றன.

இன்று என்னைப் போலவே ஒவ்வொரு பிஜேபி தொண்டரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கேசுபாயின் குடும்பத்தினருக்கும், அவரது நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்துடன் விடாமல் தொடர்பில் உள்ளேன்.

கடவுளின் பாதங்களில் கேசுபாய்க்கு ஒரு இடம் கிடைப்பதற்கு நான் பிரார்த்திக்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் உறங்கட்டும்.

ஓம் சாந்தி!!!