முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வதைத் தடுக்க
முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படும்
“அனைவரோடும் இணைந்து, அனைவருக்குமான வளம், அனைவரது நம்பிக்கையையும் பெறுவது” என்பதே பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தாரக மந்திரம் ஆகும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) இரண்டாவது அவசர சட்டம் 2019 ( 2019-ம் ஆண்டின் 4வது அவசர சட்டம்) க்குப் பதிலாக முன்வைக்கவுள்ள முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
தாக்கம்:
இந்த மசோதா பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் முஸ்லீம் பெண்களுக்கு பாலின ரீதியான நீதியை வழங்குவதாகவும் அமையும். திருமணமான முஸ்லீம் பெண்களின் உரிமைகளையும் இந்த மசோதா பாதுகாப்பதோடு அவர்களின் கணவர்கள் முத்தலாக் சொல்வதன் மூலம் விவாகரத்து செய்வதையும் தடுக்கும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
விளைவுகள்:
முத்தலாக் முறையை பயன்படுத்துவதை இந்த மசோதா செல்லாத ஒன்று எனவும் சட்டவிரோதமானது எனவும் அறிவிக்க தீர்மானிக்கிறது.
இத்தகைய குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கவும் இந்த மசோதா வகைசெய்கிறது.
திருமணமான பெண்களுக்கும் அவர்களை சார்ந்துள்ள குழந்தைகளுக்கும் ஜீவனாம்சத் தொகை வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
இவ்வாறு முத்தலாக் சொல்லப்பட்ட திருமணமான முஸ்லீம் பெண்மணியோ அல்லது அவருக்கு ரத்த ரீதியான அல்லது திருமணம் மூலமான உறவினர் எவரொருவரும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் இத்தகைய குற்றம் பற்றிய தகவலை தெரிவித்தாரெனில் அத்தகைய குற்றத்தை பிணையில் விடவியலாத ஒரு குற்றமாகவும் ஆக்க இந்த மசோதா திட்டமிட்டுள்ளது.
முத்தலாக் சொல்லப்பட்ட முஸ்லீம் பெண் வற்புறுத்தினால் குற்றவியல் நீதிபதியின் அனுமதியுடன் இந்தக் குற்றம் மேலும் வலுவுடையதாக ஆக்கப்படும்.
குற்றவியல் நீதிபதி எவரொருவரும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்குவதற்கு முன்பாக இவ்வாறு முத்தலாக் சொல்லப்பட்ட திருமணமான முஸ்லீம் பெண்மணியின் கருத்தைக் கேட்க வேண்டும் என்றும் இந்த மசோதா வரையறை செய்கிறது.
முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) இரண்டாவது அவசர சட்டம் 2019 ( 2019-ம் ஆண்டின் 4வது அவசர சட்டம்) போன்றதாகவே இந்த முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019-ம் அமைகிறது.