தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்வாத் நிகழ்வில், பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த சம்வாத் நிகழ்வில், இணைவதை தமக்கான கௌரவமாககா கருதுவதாகத் தெரிவித்த திரு மோடி, இந்தியா, ஜப்பான், தாய்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களும் தனிநபர்களும் பங்கேற்பது இந்த நிகழ்வை சாத்தியமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தமது நண்பர், திரு ஷின்சோ அபே 2015-ல் நடைபெற்ற உரையாடலின் போது முன்வைத்த யோசனையின் அடிப்படையில் சம்வாத் உருவானதாகப் பிரதமர் தெரிவித்தார். இதற்குப் பின், பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள சம்வாத் நிகழ்வு விவாதத்தை, உரையாடலை, ஆழமான புரிதலை வளர்த்துள்ளது என்று அவர் கூறினார்.
வளமான கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள தாய்லாந்தில் சம்வாத் நிகழ்வு நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த திரு மோடி, ஆசியாவின் தத்துவார்த்த, ஆன்மீக பாரம்பரியங்களைப் பகிர்ந்து கொள்வதில் அழகிய உதாரணமாக தாய்லாந்து விளங்குகிறது என்றார்.
இந்தியா – தாய்லாந்து இடையே பகிரப்பட்ட ஆழமான கலாச்சார உறவுகளை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேல், ராமாயணமும், ராமாக்கெயினும் இரு நாடுகளுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். புத்த பகவான் இந்நாடுகளை இணைப்பதாகவும் அவர் கூறினார். பகவான் புத்தரின் புனிதமான எச்சங்கள் இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு சென்ற ஆண்டு அனுப்பப்பட்ட போது லட்சக்கணக்கானவர்கள் அவற்றுக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்தியா – தாய்லாந்து இடையே பல துறைகளில் துடிப்புமிக்க கூட்டாண்மை இருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை செயல்பாடும், தாய்லாந்தின் மேற்கு நோக்கிய கொள்கை செயல்பாடும், ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன என்றார். இவை பரஸ்பர முன்னேற்றத்தையும் வளத்தையும் ஊக்குவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் மற்றுமொரு வெற்றிகரமான அத்தியாயத்தை இந்த மாநாடு குறிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
ஆசியாவின் நூற்றாண்டு பற்றி பேசுகின்ற சம்வாத்தின் மையப் பொருள் பற்றி எடுத்துரைத்த திரு மோடி, ஆசியாவின் பொருளாதார உயர்வை அவ்வப்போது மக்கள் எடுத்துரைக்கின்றனர் என்றும் ஆசிய நூற்றாண்டு என்பது வெறுமனே பொருளாதார மாண்பு மட்டுமல்ல என்றும் அது சமூக மதிப்பு சார்ந்ததும் ஆகும் என்றும் குறிப்பிட்டார். பகவான் புத்தரின் போதனைகள், அமைதியான முற்போக்கான, சகாப்தத்தை உருவாக்க உலகுக்கு வழிகாட்டுகின்றன என்பதை வலியுறுத்திய அவர், புத்தரின் ஞானம், மனிதர்களை மையப்படுத்திய எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாகக் குறிப்பிட்டார்.
சம்வாத் நிகழ்வின் முக்கிய மையப் பொருள்களில் ஒன்றான மோதலைத் தவிர்ப்பது குறித்து பேசிய பிரதமர், ஒரு பாதை மட்டுமே சரியானது, மற்றவை தவறானது என்ற மாறுபட்ட கருத்தினால்தான் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையில் பகவான் புத்தரின் போதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். சிலர் தங்கள் சொந்த கருத்துக்களை நிலைநிறுத்த வாதிடுகிறார்கள். ஒரு பக்கத்தை மட்டுமே உண்மை என்று பார்க்கிறார்கள். ஒரே பிரச்சனையில் பல கண்ணோட்டங்கள் இருக்கலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்த ரிக்வேதக் கருத்துக்களையும் மேற்கோள் காட்டிய பிரதமர், உண்மையை வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும் என்பதை ஒப்புக்கொண்டால் மோதலைத் தவிர்க்கலாம் என்றார்.
மோதலுக்கான மற்றொரு காரணத்தை எடுத்துரைத்த திரு மோடி, கருத்து வேறுபாடுகள், தூரத்திற்கு வழி வகுக்கிறது என்றும் தூரம், பின்னர் முரண்பாடாக மாறுகிறது என்றும் கூறினார். இதனை எதிர்கொள்ள தம்மபதத்தின் ஸ்லோகம் ஒன்றை எடுத்துரைத்த அவர், ஒவ்வொருவரும் நோய்க்கும் இறப்புக்கும் அஞ்சுகிறார்கள். மற்றவர்களின் உணர்வை நம்முடையதாக அறிந்துகொண்டால், துன்புறுத்தலோ, வன்முறையோ, நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார். இந்த வார்த்தைகள் பின்பற்றப்பட்டால் மோதலை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
சீரான சமநிலையிலான அணுகுமுறைக்குப் பதிலாக அளவுக்கு மிஞ்சிய நிலைகளை எடுப்பது உலகின் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது என்று திரு மோடி கூறினார். கடுமையான கருத்துகள் மோதலுக்கு வழிவகுக்கின்றன என்றும் சூழல் நெருக்கடியை உண்டாக்குகிறது என்றும் மன அழுத்தம் தொடர்பான சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சவால்களுக்கான தீர்வு பகவான் புத்தரின் போதனைகளில் உள்ளன என்பதை வலியுறுத்திய அவர், நடுநிலைப் பாதையைப் பின்பற்றி கடுமையான நிலைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். சீர்திருத்தக் கொள்கை இன்று பொருத்தமானதாக உள்ளது என்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இது வழிகாட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
தற்கால முரண்பாடுகள், மக்களையும் தேசங்களையும் கடந்து நிற்கின்றன. இயற்கையுடனான முரண்பாடு சமூகத்தில் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். இது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுக்கிறது என்றும் நமது புவிக்கோளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சவாலுக்கான தீர்வு தம்மபதத்தின் கோட்பாடுகளில் வேரூன்றி உள்ள, பகிரப்பட்ட ஆசிய பாரம்பரியங்களில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்து மதம், புத்தமதம், ஷிண்டோயிசம் மற்றும் இதர ஆசிய பாரம்பரியங்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கான பாடத்தை நமக்கு கற்ப்பிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தி முன்மொழிந்த தர்மகர்த்தா(அறங்காவலர் )முறையை எடுத்துரைத்த திரு மோடி, முன்னேற்றத்திற்கான வளங்களாக இயற்கை பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, எதிர்கால தலைமுறைகளுக்கான நமது பொறுப்பையும், எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இத்தகைய அணுகுமுறை ஆதார வளங்களை வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது, பேராசைக்கு அல்ல என்பதை எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேற்கு இந்தியாவின் சிறிய நகரமான வாத் நகரிலிருந்து தாம் வந்திருப்பது பற்றி குறிப்பிட்ட திரு மோடி, இது புத்தமதம் பற்றி படிப்பதற்கு மிகச் சிறந்த இடமாக இருந்தது என்றார். இந்திய நாடாளுமன்றத்தில் வாரணாசி தொகுதியை தாம் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் இதில் சாரநாத் இடம் பெற்றிருப்பதாகவும் கூறிய பிரதமர், இங்குதான் பகவான் புத்தர் தமது முதலாவது கருத்துரையை வழங்கினார் என்று குறிப்பிட்டார். பகவான் புத்தருடன் தொடர்புடைய இடங்கள் நமது பயணத்தை சிறப்பாக வடிவமைத்தது அழகிய ஒற்றுமையாக அமைந்து என்று குறிப்பிட்டார்.
இந்திய அரசின் கொள்கைகள் பகவான் புத்தரைப் பிரதிபலிப்பதாக கூறிய பிரதமர், புத்தமத சுற்றுலாவானது முக்கியமான புத்தமத தலங்களை இணைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார். இந்த சுற்றுலாப் பாதைக்குள் பயணம் செய்ய புத்தபூர்ணிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குஷி நகர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டது சர்வதேச புத்தமத யாத்ரீகர்களுக்கு பயன் அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார். புத்தகயாவில் அடிப்படைக் கட்டமைப்பு விரிவாக்க முயற்சிகள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார்.இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்களுக்கும் அறிஞர்களுக்கும் துறவிகளுக்கும் பகவான் புத்தரின் பூமிக்கு வருகை புரியுமாறு அழைப்புவிடுத்தார்.
நாளந்தா மகாவிகார் என்பது வரலாற்றில் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, சில நூற்றாண்டுகளுக்கு முன் முரண்பாடுள்ள சக்திகளால் அது அழிக்கப்பட்டது என்றும் தற்போது அது கற்றல் மையமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது இந்தியாவின் மீள்திறனை எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறினார். பகவான் புத்தரின் கருணையுடன் நாளந்தா பல்கலைக்கழகத்தின் முந்தைய புகழ், மீண்டும் வரும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். பகவான் புத்தர் தமது போதனைகளை எடுத்துரைத்த பாலி மொழியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறிய திரு மோடி, இந்த மொழியின் இலக்கியங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். புத்த மதத்தின் அறிஞர்கள் பயனடைவதற்காக ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்து தொன்மையான மூலப்பிரதிகளை அடையாளம் கண்டு பட்டியலிடுவதற்கு ஞானபாரத இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பகவான் புத்தரின் போதனைகள் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த 10 ஆண்டுகளில் பரவலாக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்த திரு மோடி, ஆசியாவை வலுப்படுத்துவது புத்த தம்மத்தின் பங்கு என்ற மையப் பொருளில் முதலாவது ஆசிய புத்தமத உச்சிமாநாட்டை இந்தியா அண்மையில் நடத்தியதாக அவர் கூறினார். முன்னதாக, முதலாவது உலகளாவிய புத்தமத உச்சிமாநாடு இந்தியாவில் நடத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். நேபாளத்தில் உள்ள லும்பினியில், புத்தமத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டும் பெருமையை தாம் பெற்றதாக பிரதமர் குறிப்பிட்டார். இங்கு அருங்காட்சியகம் கட்டுவதற்கு இந்தியா பங்களிப்பு செய்வதாக அவர் கூறினார். மங்கோலிய அரசு மூலம் பகவான் புத்தர்-மங்கோலிய கஞ்சூர் என்ற 108 தொகுப்புகள் மறுபதிப்பு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு வகையான மதங்களின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வட்டமேசை மாநாடாக சம்வாத் மாநாடு நடைபெறுவதை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தினார். இந்த மேடையிலிருந்து மதிப்புமிகு கருத்துகள் உருவாகும் என்று நம்பிக்கைத் தெரிவித்த அவர், இது மேலும் இணக்கமான உலகத்தை வடிவமைக்கும் என்றார். இந்த மாநாட்டை நடத்துவதற்காக தாய்லாந்து அரசுக்கும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றின் சகாப்தத்தை நோக்கிய பயணத்திற்கு தம்மஒளியானது வழிகாட்டுவது தொடரும் என்ற நம்பிக்கையுடன் பிரதமர் திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
—-
TS/SMB/KPG/DL
Sharing my remarks during SAMVAD programme being organised in Thailand. https://t.co/ysOtGlslbI
— Narendra Modi (@narendramodi) February 14, 2025