தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது” என்பதாகும். தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.
மியான்மரிலும், தாய்லாந்திலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். இந்தக் குழுவை வெற்றிகரமாக வழிநடத்திச் சென்றதற்காகப் பிரதமர் ஷினவத்ராவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா இடையே பிம்ஸ்டெக் முக்கிய பாலமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், பிராந்திய ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்தும் தளமாக பிம்ஸ்டெக் மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்த விஷயத்தில், பிம்ஸ்டெக் அமைப்பின் நிகழ்ச்சி நிரலையும், திறனையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிம்ஸ்டெக்கில் நிறுவனம் மற்றும் திறன் கட்டமைப்பில் இந்தியா தலைமையிலான பல்வேறு முன்முயற்சிகளைப் பிரதமர் அறிவித்தார். பேரிடர் மேலாண்மை, நீடித்த கடல்சார் போக்குவரத்து, பாரம்பரிய மருத்துவம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் இந்தியாவில் பிம்ஸ்டெக் சிறப்பு மையங்களை அமைப்பது ஆகியவை இதில் அடங்கும். இளைஞர்களின் திறனை மேம்படுத்த போதி (மனித வள உள்கட்டமைப்புக்கான ஒழுங்கமைக்கப்பட்ட மேம்பாட்டுக்கான பிம்ஸ்டெக்) என்ற ஒரு புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார். இதன் கீழ் தொழில் வல்லுநர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தூதர்கள் மற்றும் பிறருக்கு பயிற்சியும், உதவித்தொகையும் வழங்கப்படும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் பிராந்திய தேவைகளை மதிப்பிடுவதற்கு இந்தியாவின் ஒரு முன்னோட்ட ஆய்வையும், பிராந்தியத்தில் புற்றுநோய் பராமரிப்புக்கான திறன் வளர்ப்பு திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார். பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்த அழைப்பு விடுத்த பிரதமர், பிம்ஸ்டெக் வர்த்தக சபையை நிறுவவும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிம்ஸ்டெக் வர்த்தக உச்சி மாநாட்டை நடத்தவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த மண்டலத்தை ஒன்றிணைக்கும் வரலாற்று, கலாச்சார உறவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், மக்களுக்கு இடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளையும் அறிவித்தார். இந்த ஆண்டு பிம்ஸ்டெக் தடகளப் போட்டிகளையும், 2027-ம் ஆண்டு முதல் பிம்ஸ்டெக் விளையாட்டுப் போட்டிகளையும் இந்தியா நடத்துகிறது. பிம்ஸ்டெக் பாரம்பரிய இசை விழாவும் இங்கு நடைபெறும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களை நெருக்கமாக கொண்டு வர இளம் தலைவர்கள் உச்சிமாநாடு, ஹேக்கத்தான், இளம் தொழில்முறை பார்வையாளர்கள் திட்டம் ஆகியவற்றை பிரதமர் அறிவித்தார்.
உச்சிமாநாடு பின்வருவனவற்றை ஏற்றுக்கொண்டது:
i. உச்சி மாநாட்டு பிரகடனம்
ii.பிம்ஸ்டெக் பாங்காக் தொலைநோக்குத் திட்டம் 2030 ஆவணம், இது இந்த மண்டலத்தின் கூட்டு வளத்திற்கான செயல்திட்டத்தை விவரிக்கிறது.
iii. பிம்ஸ்டெக் கடல்சார் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்- இது கப்பல்கள், பணியாளர்கள் மற்றும் சரக்குகளுக்கு தேசிய ஒப்புதல் மற்றும் உதவிக்கு வழிவகுக்கும். சான்றிதழ்கள் / ஆவணங்களை பரஸ்பரம் அங்கீகரித்தல்; கூட்டு கப்பல் ஒருங்கிணைப்புக் குழு; சர்ச்சைக்கான தீர்வு நடைமுறை.
iv. பிம்ஸ்டெக் அமைப்பின் எதிர்கால வழிகாட்டுதலுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பிம்ஸ்டெக் நிபுணர்கள் குழுவின் அறிக்கை.
—-
(Release ID: 2118696)
TS/SMB/AG/SG