Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்


பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மத்திய இணையமைச்சர்  டாக்டர் .எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தமது தமிழ் சகோதர சகோதரிகள் மத்தியில் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். “புத்தாண்டு என்பது பண்டைய பாரம்பரியத்தில் நவீனத்துவத்தின் திருவிழா. இத்தகைய பழமையான தமிழ் கலாச்சாரம் , ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது” என்று பிரதமர் கூறினார். தமிழ் மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தமது ஈர்ப்பையும் உணர்வுப்பூர்வமான பற்றையும் வெளிப்படுத்தினார். குஜராத்தில் உள்ள தமது பழைய சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மக்கள் அதிக அளவில் இருப்பதையும்,  அவர்களது அளப்பரிய அன்பையும் நினைவுகூர்ந்த பிரதமர், தமிழ் மக்கள் தம்மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி தெரிவித்தார்.
செங்கோட்டையில் இருந்து தாம் அறிவித்த ஐந்து உறுதிமொழிகளில் ஒன்றைப்பற்றி  நினைவு கூர்ந்த திரு மோடி, ஒருவருடைய பாரம்பரியத்தில் பெருமை – பழமையான கலாச்சாரம் காலத்தால் முற்பட்டது என்று கூறினார். “உலகத்தைப் போலவே தமிழ்ப் பண்பாடும், மக்களும் நித்தியமானது. சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையிலிருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்திலிருந்து சிங்கப்பூர் வரை; தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுடன் எடுத்துச் செல்வதை நீங்கள் காண்பீர்கள்,” என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர், “பொங்கலாக இருந்தாலும் சரி, புத்தாண்டாக இருந்தாலும் சரி, அவை உலகம் முழுவதையும் ஈர்த்துள்ளன.  உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். தமிழ் இலக்கியமும் பரவலாக மதிக்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகம் பல அடையாளப் படைப்புகளை நமக்குக் கொடுத்திருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். 
சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் மக்களின் அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் வளர்ச்சியில் தமிழ் மக்களின் பங்களிப்பையும் சுட்டிக் காட்டினார். சி.ராஜகோபாலாச்சாரி, கே.காமராஜ், டாக்டர் கலாம் போன்ற பெரியோரை நினைவு கூர்ந்த அவர், மருத்துவம், சட்டம், கல்வித் துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது என்றார்.

உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடு இந்தியா என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய ஆதாரங்கள் உட்பட அதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன என்றார். உத்திரமேரூரில் உள்ள 11-12 நூற்றாண்டுகள் பழமையான கல்வெட்டு பற்றி அவர் குறிப்பிட்டார். இது பண்டைய காலங்களிலிருந்து ஜனநாயக நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் விவரிக்கிறது. இந்தியாவை ஒரு தேசமாக வடிவமைத்த தமிழ் கலாச்சாரத்தில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன, என்று பிரதமர் கூறினார். காஞ்சிபுரத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில், சதுரங்க வல்லபநாதர் கோயில் ஆகியவற்றின் வளமான பண்டைய பாரம்பரியம் வியக்கத்தக்க அளவில் நவீனகாலத்துக்கும்  பொருத்தமானவை என்று அவர் தெரிவித்தார். 
செழுமையான தமிழ் கலாச்சாரத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பை பிரதமர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் மேற்கோள் காட்டியதையும், யாழ்ப்பாணத்தில் நடந்த கிரஹப்பிரவேச விழாவில் கலந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர்  திரு மோடி ஆவார்.  அவரது பயணத்தின் போதும் அதன் பின்னரும் அங்குள்ள தமிழர்களுக்காக பல நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. “தமிழ் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் இந்த உணர்வு என்னுள் புதிய ஆற்றலை நிரப்புகிறது” என்று பிரதமர் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமத்தின் வெற்றி குறித்து பிரதமர் பெரு மகிழ்ச்சியைத்  தெரிவித்தார். “இந்த நிகழ்ச்சியில், பழமை, புதுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை ஒரே நேரத்தில் கொண்டாடியுள்ளோம்” என்று பிரதமர் கூறினார். சங்கமத்தில் தமிழ் புத்தகங்கள் மீதான மோகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “இந்தி பேசும் பிராந்தியத்தில், இந்த டிஜிட்டல் யுகத்தில், தமிழ் புத்தகங்கள் இப்படி விரும்பப்படுகின்றன, இது நமது கலாச்சாரத் தொடர்பைக் காட்டுகிறது. தமிழ் மக்கள் இல்லாமல் காசிவாசிகளின் வாழ்க்கை முழுமையடையாது, நான் காசி வாசியாகிவிட்டேன், காசி இல்லாமல் தமிழ் மக்களின் வாழ்க்கையும் முழுமையடையாது என்று நான் நம்புகிறேன். சுப்பிரமணிய பாரதியின் பெயரில் புதிய இருக்கையையும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையில் தமிழர் ஒருவருக்கு இடத்தையும் வழங்கியுள்ளதை திரு மோடி சுட்டிக்காட்டினார். 
தமிழ் இலக்கியம் கடந்த கால ஞானத்துடன் எதிர்கால அறிவுக்கு ஆதாரமாக இருப்பதால் அதன் வலிமையை பிரதமர் எடுத்துரைத்தார். பழங்கால சங்க இலக்கியங்களில் ஸ்ரீ அன்னாவின் குறிப்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “இந்தியாவின் முன்முயற்சியால் இன்று உலகம் முழுவதும் நமது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிறுதானிய பாரம்பரியத்துடன் இணைந்துள்ளது. மீண்டும் ஒருமுறை உணவுத் தட்டில் தினைக்கு இடம் கொடுத்து மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உறுதி  எடுக்க வேண்டும் என்று கூட்டத்தினரை அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ் கலை வடிவங்களை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவித்தல் மற்றும் அவற்றை உலகளவில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். “இன்றைய இளம் தலைமுறையினரிடையே  பிரபலமாக இருப்பவர்கள், அந்த அளவுக்கு அதிகமாக அடுத்த தலைமுறைக்கு இதனை எடுத்துச் செல்வார்கள் . எனவே, இக்கலை குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாகும்,” என்றார் பிரதமர். “சுதந்திர அமிர்த காலத்தில், நமது தமிழ் பாரம்பரியத்தை அறிந்து, அதை நாட்டுக்கும் உலகுக்கும் எடுத்துரைப்பது நமது பொறுப்பு. இந்த பாரம்பரியம் நமது ஒற்றுமை மற்றும் ‘தேசம் முதலில்’ என்ற உணர்வின் அடையாளமாகும். தமிழ் கலாச்சாரம், இலக்கியம், மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறிய பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

******

AD/PKV/DL