தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், ‘இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்‘ என்று பாராட்டினார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் திறனை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், “14 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி. துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்றார். புதிய முனையம், துறைமுகத்தில் தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது வ.உ.சி. துறைமுகம் தொடர்பாக தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதில் அவர் திருப்தி தெரிவித்தார். முனையத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று, பாலின பன்முகத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பாகும், அதன் ஊழியர்களில் 40% பெண்கள், இது கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் முக்கிய பங்காற்றியுள்ளதை ஒப்புக் கொண்ட திரு மோடி, “மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்களுடன், தமிழ்நாடு கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டார். துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க, வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்க, இந்தியா ரூ. 7,000 கோடிக்கு மேல் முதலீடு செய்வதாகவும், வ.உ.சி துறைமுகத்தின் திறன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார். “இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது” என்று திரு மோடி உறுதிபடக் கூறினார்.
உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட இந்தியாவின் பரந்த கடல்சார் இயக்கம் குறித்து திரு மோடி பேசினார். “நிலையான மற்றும் முன்னோக்கு சிந்தனை வளர்ச்சிக்கான பாதையை இந்தியா உலகுக்குக் காட்டுகிறது,” என்று கூறிய அவர், வ.உ.சி துறைமுகம் ஒரு பசுமை ஹைட்ரஜன் மையமாகவும், கடல் காற்றாலை மின்சக்திக்கான நோடல் துறைமுகமாகவும் அங்கீகரிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். பருவநிலை மாற்றத்தின் உலகளாவிய சவால்களை சமாளிப்பதில் இந்த முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.
“புதிய கண்டுபிடிப்புகளும், ஒத்துழைப்பும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப்பெரிய பலம்” என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முனையத் திறப்பு, கூட்டு வலிமைக்கு ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார். சாலைகள், நெடுஞ்சாலைகள், நீர்வழிகள் மற்றும் வான்வழிகள் ஆகியவற்றின் பரந்த வலைப்பின்னலுடன், இந்தியா தற்போது நன்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய திரு மோடி, இது உலகளாவிய வர்த்தகத்தில் நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது என்றார். “உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு முக்கியப் பங்குதாரராக மாறி வருகிறது, இந்த வளர்ந்து வரும் திறன், நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த உத்வேகம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் என்றும், இந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் நம்பிக்கை தெரிவித்து திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2055370)
MM/AG/KR
Sharing my remarks during inauguration of new international container terminal at Thoothukudi port.https://t.co/MSYb6KQBjY
— Narendra Modi (@narendramodi) September 16, 2024