Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ்நாட்டின் சென்னையில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாட்டின் சென்னையில்  பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


தமிழ்நாட்டின் சென்னையில் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக பிரதமர் சென்னை சர்வதேச விமானை நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தின் பகுதி ஒன்றை திறந்துவைத்தார். சென்னை – கோவை வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

PM India

திட்டங்களைத் தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தமிழ்நாடு, வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் தாயகமாகும், மொழி மற்றும் இலக்கியத்தின் பூமியாகும் என்று கூறினார்.  நமது விடுதலைப் போராட்ட வீரர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த மாநிலம் தேசப்பற்று மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் மையமாக திகழ்கிறது என்று கூறினார். தமிழ்ப்புத்தாண்டு விரைவில் வரவிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புதிய ஆற்றல், நம்பிக்கை, விருப்பங்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கான தருணம் இது என்று கூறினார். “பல புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் இன்றிலிருந்து மக்களுக்கு பயன்படும் என்று கூறிய அவர், அவற்றில் சில அதன் தொடக்கங்களைக் கண்டுள்ளன” என்று கூறினார்.  ரயில்வே, சாலைகள், விமானப்போக்குவரத்துத் தொடர்பான புதிய திட்டங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தியா வேகமும், அளவும் கொண்ட உள்கட்டமைப்புப் புரட்சியைக் கண்டு வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இது 2014-ஆம் ஆண்டு பட்ஜெட்டைவிட 5 மடங்கு அதிகம் என்று அவர் கூறினார். ரயில் உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு சாதனை அளவாகும் என்று அவர் தெரிவித்தார். வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், 2014-ஆம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம், ரயில்வே மின்மயமாக்கல் ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளன என்று  கூறினார்.  மின்மயமாக்கல் 600 கிலோ மீட்டரிலிருந்து 4,000 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது போல, விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 74-லிருந்து சுமார் 150 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அது வர்த்தகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக திகழ்கிறது என்றார். 2014-ஆம் ஆண்டு முதல் துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனும், இருமடங்காக அதிகரித்துள்ளது என்றார் அவர்.

PM India

நாட்டின் சமூக  மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2014-லில் 380-லிருந்து தற்போது 660-ஆக உயர்ந்துள்ளது என்றார். கடந்த 9 ஆண்டுகளில், நாட்டில் செயலிகளின் எண்ணிக்கை மும்மடங்காகி உள்ளது என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலகின் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். உலகிலேயே குறைந்த விலையில், கைபேசி இணையசேவை வழங்கும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.  சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு 6 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு கண்ணாடி இழை கேபிள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்று நகர்ப்புற பயனாளிகளைவிட கிராமங்களில் அதிக அளவில் இணையதள பயன்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

PM India

பணிக்கலாச்சாரம் மற்றும் தொலைநோக்குப் பார்வையில் புகுத்திய மாற்றத்தின் பலனாக மாபெரும் மாற்றங்களை பரிசாக பெற்றுள்ளோம் என்று கூறினார்.  உள்கட்டமைப்பு திட்டங்கள் என்பது காலதாமதம் என்றில்லாமல், விரைவான  நடைமுறையாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதற்கு பணிக் கலாச்சாரத்தில்  மேற்கொண்ட மாற்றமே  காரணம் என்றார். வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வேண்டியதைக் கவனத்தில் கொண்டு, பணியாற்றினால் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்  இலக்கை அடைய முடியும் என்று தெரிவித்தார். முந்தைய அரசுகளின் கண்ணோட்டங்களை ஒப்பிட்டுப் பேசிய பிரதமர்,  உள்கட்டமைப்பு வசதிகள் என்பதை வெறும் சிமெண்ட், செங்கல் என்ற கோணத்தில் பார்க்காமல், மனிதகுலத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, கனவுகளை நிறைவேற்றுவதாகக் கருதவேண்டும் என்றார்.

PM India

இன்று தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்களை உதாரணம் காட்டி பேசிய அவர், விருதுநகர் மற்றும் தென்காசி பருத்தி விவசாயிகளை  மற்ற சந்தைகளுடன் இணைக்கும் சாலைத்திட்டங்கள், சென்னை- கோவை இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை நுகர்வோருக்கான சிறிய தொழில்களை இணைக்கும் பாலமாக திகழ்வதுடன், சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், உலக நாடுகளை  தமிழ்நாட்டுக்கு நெருங்கி வர செய்வதாக பட்டியலிட்டார். இந்தத் திட்டங்கள், இங்குள்ள இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதலீடுகளை ஈர்க்கும் என்றும் தெரிவித்தார். வாகனங்கள் வேகம் பெறுவதுடன், மக்களின் கனவுகளை நிறைவேற்றும் செயல்களும் வேகம் பெறுவதாகவும், இதன் மூலம் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றும் கூறினார். இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

PM India

மத்திய அரசை பொருத்தவரை தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு பிரதான முக்கியத்தும் அளிக்கப்படுவதாக கூறிய அவர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ரயில்வே உள்கட்டமைப்புக்கு ரூ.900 கோடிக்கும் குறைவான தொகை சராசரியாக ஒதுக்கப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 800 கிலோ மீட்டராக இருந்தாகவும், இந்த தூரம் 2014-ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டராக மாற்றியமைக்கப்பட்டு இருப்பதையும்  நினைவு கூர்ந்தார். மேலும் கடந்த 2014-15-ம் நிதியாண்டு ரூ.1,200 கோடி அளவுக்கு செலவிடப்பட்ட தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடு, 2022-23-ம் நிதியாண்டில் 6 மடங்காக அதிகரித்து ரூ.8,200 கோடியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

PM India

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முக்கியத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதை நினைவுகூர்ந்த அவர், இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் பாதுகாப்பு தொழில் வழித்தடம், பிஎம் மித்ரா ஜவுளி மெகா தொழில் பூங்காக்கள், பெங்களூரு- சென்னை விரைவுச் சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாகப் பட்டியலிட்டார். சென்னை அருகே  பன்முனைய  தளவாட பூங்கா, பாரத்மாலா திட்டத்தின் கீழ், மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை சாலைப்பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் நேரடியாக பலன்பெறும் என்று குறிப்பிட்ட பிரதமர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், அதிகரித்து வரும் விமான பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். இந்த முனையத்தின் வடிவமைப்பு தமிழ் கலாச்சாரத்தின் எழிலை  பிரதிப்பலிப்பதாகவும், அதன் மேற்கூரை, தரைதளம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள சுவரோவியங்கள், தமிழ்நாட்டை பல கோணங்களில் சித்தரிப்பதாகவும் கூறினார்.  மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விமான நிலையம், நவீன காலத்தின் தேவைக்கேற்றப்படி கட்டுப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்கள், பசுமை தொழில் நுட்பத்தை உள்ளடக்கிய எல்இடி,  சூரிய மின்சக்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்ட சென்னை- கோவை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை, சுதேசி இயக்கத்தை வலியுறுத்திய கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவதரித்த மண்ணின் இந்திய தயாரிப்பிற்கான கௌரவமாகத் திகழ்வதாகவும் திரு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஜவுளித்துறையாகட்டும், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை நிறுவனங்களாகட்டும் கோயம்புத்தூர் தொழில்துறையின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது. தற்போதைய நவீன இணைப்பு வசதிகள் அப்பகுதி மக்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. வந்தே பாரத் விரைவு ரயில் சேவை வாயிலாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பயண நேரம் ஆறு மணி நேரம் மட்டுமே. சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில்துறையின் மையங்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். மதுரையை மேற்கோள் காட்டிய பிரதமர், தமிழ்நாட்டில் கலாச்சார தலைநகராகவும், உலகின் மிகத் தொன்மையான நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது என்றார். இன்றைய திட்டங்கள், தொன்மையான நகரத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்.

இறுதியாக இந்தியாவின் வளர்ச்சி இயந்திரத்திற்கு தமிழ்நாடும் முக்கியப் பங்காற்றுகிறது. உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, வருவாய் அதிகரிப்பதன் மூலம், தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வளரும்போது இந்தியாவும் வளரும் என்று பிரதமர் கூறினார்.

தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர். பாலு மற்றும் தமிழ்நாட்டு மாநில அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

பிரதமர் ரூ. 3,700 கோடி மதிப்பீட்டிலான சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து மற்றும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை நகரில் 7.3 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்டச் சாலையையும், தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை – 744-ன் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.2400, கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே இணைப்பை அதிகப்படுத்தும். மேலும், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் கோவில் மற்றும் கேரளாவிலுள்ள சபரிமலை ஆகியவற்றிற்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு சௌகரியமான பயணத்தை உறுதிப்படுத்தும்.

ரூ.294 கோடி மதிப்பீட்டில்   திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கிலோமீட்டர் நீளத்திற்கான இரயில் பாதை மற்றும் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சமையல் மற்றும் தொழில்துறைக்குப் பயன்படுத்தும் உப்பை நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அகஸ்தியம்பள்ளியிலிருந்து கொண்டுவரும் வகையில் பயனளிக்கும்.

தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் இரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி இடையே இரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோயம்புத்தூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இரயில் பயணிகள் பயனடைவர்.

***

SM/PKV/ES/GS/KPG/SG/RS/DL