Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டேராடூனில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

டேராடூனில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்


டேராடூனில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திருநரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் (கிழக்கு புற விரைவுச்சாலை சந்திப்பிலிருந்து டேராடூன் வரை), தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்திலிருந்து ஹல்கோவா, சஹரன்பூரை பாத்ராபாத், ஹரித்வாருடன் இணைக்கும் கிரீன்ஃபீல்டு திட்டம், ஹரித்வார் சுற்று சாலை திட்டம், டேராடூன்-பவோன்டா சாஹிப் (ஹிமாச்சலப் பிரதேசம்) சாலை திட்டம், நாஜிபாபாத்-கோட்த்வார் சாலை விரிவாக்க திட்டம் மற்றும் லக்‌ஷ்மண் ஜூலாவுக்கு அருகே கங்கை ஆற்றின் குறுக்கே பாலம் ஆகியவை இவற்றில் அடங்கும். டேராடூனில் குழந்தைகளுக்கு உகந்த நகரத் திட்டம், டேராடூனில் நீர் வழங்கல், சாலை மற்றும் வடிகால் அமைப்பு மேம்பாடு, ஸ்ரீ பத்ரிநாத் தாம் மற்றும் கங்கோத்ரி-யமுனோத்ரி தாம் ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஹரித்வாரில் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அப்பகுதியின் நீண்டகால பிரச்சினையான நிலச்சரிவுகளை எதிர்கொண்டு பயணத்தை பாதுகாப்பாக ஆக்குவதில் கவனம் செலுத்தும் வகையிலான ஏழு திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை-58-ல் தேவ்பிரயாக்கில் இருந்து ஸ்ரீகோட் வரையில் மற்றும் பிரம்மபுரி முதல் கொடியாலா வரையில் சாலை விரிவாக்க திட்டம், யமுனை ஆற்றில் கட்டமைக்கப்பட்டுள்ள 120 மெகவாட் நீர் மின்சார திட்டம், டேராடூனில் இமாலய கலாச்சார மையம் மற்றும் அதி நவீன வாசனை பொருட்கள் மற்றும் நறுமண ஆய்வகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், உத்தரகாண்ட் வெறும் நம்பிக்கையின் மையம் மட்டுமல்ல, கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று கூறினார். அதனால் தான், மாநிலத்தின் வளர்ச்சி என்பது மத்திய மற்றும் மாநிலத்தின் ‘இரட்டை இயந்திர அரசாங்கத்தின்’ முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், வாஜ்பாய் அவர்கள் இந்தியாவில் இணைப்பு வசதிகளை அதிகரிக்க ஒரு இயக்கத்தை தொடங்கினார் என்று பிரதமர் கூறினார். ஆனால், அதன் பிறகு 10 ஆண்டுகளாக நாட்டின் மற்றும் உத்தரகாண்டின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கும் வகையில் ஒரு அரசு இருந்தது என்று பிரதமர் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “10 ஆண்டுகளாக நாட்டில் உள்கட்டமைப்பு என்ற பெயரில் ஊழல்கள், மோசடிகள் நடந்தன. நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட இரண்டு மடங்கு உழைத்ததோடு இன்றும் அவ்வாறே செய்து வருகிறோம்,” என்றார். மாற்றியமைக்கப்பட்டுள்ள பணி முறை குறித்துப் பேசிய பிரதமர், “இன்று, நவீன உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நோக்கத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது. இன்றைக்கு இந்தியாவின் கொள்கை ‘கதிசக்தி’, அதாவது இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகமாக வேலை செய்ய வேண்டும்,” என்றார்.

இணைப்பு வசதிகளின் நன்மைகள் குறித்துப் பேசிய பிரதமர், கேதார்நாத் துயரச் சம்பவத்திற்கு முன்பு 2012-ல் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசனம் செய்ததாகக் கூறினார். அந்தக் காலத்தில் இது ஒரு சாதனை. அதேசமயம், கொரோனா காலம் தொடங்குவதற்கு முன்பு, 2019-ம் ஆண்டில், கேதார்நாத்தை பார்வையிட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர். “கேதார்தாமின் புனரமைப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், அங்குள்ள மக்களுக்கு பணி மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான பல வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டியது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். அது தயாரானதும், தில்லியில் இருந்து டேராடூனுக்கு பயணிக்க எடுக்கும் நேரம் கிட்டத்தட்ட பாதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். “நமது மலைகள் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் கோட்டைகள் மட்டுமல்ல, அவை நமது நாட்டின் பாதுகாப்பின் கோட்டையும் கூட. மலையகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது நாட்டின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக, பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்தவர்களுக்கு, இந்த எண்ணம் கொள்கை-சிந்தனையில் எங்கும் இல்லை”, என்றார் அவர்.

வளர்ச்சியின் வேகத்தை ஒப்பிட்ட பிரதமர், 2007 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் உத்தரகாண்டில் 7 ஆண்டுகளில் 288 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை மட்டுமே மத்திய அரசு உருவாக்கியது என்று சுட்டிக்காட்டினார். அதேசமயம், தற்போதைய அரசு தனது ஏழு ஆண்டுகளில் உத்தரகாண்டில் 2 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது.

எல்லையோர மலைப் பகுதிகளின் உள்கட்டமைப்புப் பணிகளில் முந்தைய அரசுகள் தேவையான அளவு தீவிரமாக செயல்படவில்லை என்று பிரதமர் சாடினார். எல்லையில் சாலைகள் அமைக்க வேண்டும், பாலங்கள் கட்ட வேண்டும், ஆனால் இதில் கவனம் செலுத்தவில்லை, என்றார் அவர். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம், நவீன ஆயுதங்கள், பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்றும், இது ராணுவத்தை ஒவ்வொரு நிலையிலும் மனச்சோர்வடையச் செய்தது என்றும் திரு மோடி கூறினார். “இன்றைய அரசு உலகில் எந்த ஒரு நாட்டின் அழுத்தத்திற்கும் அடிபணியாது. தேசத்திற்கே எப்போதும் முன்னுரிமை என்ற தாரகமந்திரத்தைப் பின்பற்றுபவர்கள் நாங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

வளர்ச்சிக் கொள்கைகளில் ஜாதி, மதம் மற்றும் பாகுபாடுகளை மட்டுமே கடைபிடிக்கும் அரசியலை பிரதமர் விமர்சித்தார். மக்களை வலுவாக இருக்க விடாமல், அவர்களின் தேவைகளுக்காக அரசை சார்ந்திருக்க வைக்காத வக்கிர அரசியலையும் அவர் தாக்கினார். வித்தியாசமான பாதையை பின்பற்றிய தமது அரசாங்கத்தின் சிந்தனையை பிரதமர் வெளிப்படுத்தினார். “இது கடினமான பாதை, ஆனால் இது நாட்டின் நலனுக்கானது, நாட்டு மக்களின் நலனுக்கானது. இது அனைவருடன், அனைவரின் நலனுக்கான பாதை. நாங்கள் எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், பாரபட்சமின்றி அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாக கொள்ளாமல் மக்கள் சேவைக்கு முன்னுரிமை அளித்தோம்,” என்றார் அவர். நாட்டைப் பலப்படுத்துவதே எங்களது அணுகுமுறையாக உள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அமிர்த காலத்தின் போது, நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தின் வேகம் நிறுத்தப்படாது, தளர்ந்துவிடாது. மாறாக, நாம் அதிக நம்பிக்கையுடனும் உறுதியுடனும் முன்னேறுவோம்” என்று உறுதியளித்து பிரதமர் கூறினார்.

கீழ்காணும் உணர்ச்சிப்பூர்வ இந்தி கவிதையுடன் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். 

***************