டேராடூனில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து தேசத்திற்கு அர்ப்பணித்தார். உத்தராகண்ட்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அந்த மாநிலத்தை 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் கொண்ட மாநிலமாக அவர் அறிவித்தார்.
இதற்கான நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், டேராடூனுக்கும், தில்லிக்கும் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் தொடக்க விழாவில் உத்தராகண்டில் இருந்து பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த ரயில் நாட்டின் தலைநகரை உத்தராகண்ட் என்ற தெய்வீக பூமியுடன் இணைப்பதாகக் கூறினார். இதன் மூலம் இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரம் மேலும் குறைக்கப்படும் என்றும், இந்த ரயிலில் உள்ள வசதிகள் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கான தமது பயணம் குறித்து பேசிய பிரதமர், உலகம் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்று குறிப்பிட்டார். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், வறுமையை எதிர்த்துப் போராடுவதிலும் இந்தியா உலகிற்கு நம்பிக்கை ஒளியாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியா, கொவிட் தொற்று பாதிப்பை திறமையாக சமாளித்ததுடன், உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயல்படுத்தியதையும் அவர், சுட்டிக்காட்டினார்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வர விரும்பும் இன்றைய சூழ்நிலையில் உத்தராகண்ட் போன்ற அழகான மாநிலங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சுற்றுலா மேம்பாட்டில் வந்தே பாரத் சேவை உத்தராகண்ட் மாநிலத்திற்கு பெரிய அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே தாம் மேற்கொண்ட கேதார்நாத் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ‘இந்தப் பத்தாண்டுகள் உத்தராகண்டின் ஆண்டுகளாக இருக்கும்’ என்று இயல்பாக கூறியதை நினைவு கூர்ந்தார். சட்டம் ஒழுங்கு நிலைமையை இந்த மாநிலம் சிறப்பாக வைத்திருக்கும் அதே வேளையில், மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை அவர் பாராட்டினார். உலகின் ஆன்மீக உணர்வின் மையமாக இந்த தெய்வீக பூமி திகழும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த மாநிலத்தின் திறன்களை உணர்ந்து உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சார்தாம் புனிதத்தளங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து சாதனையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஹரித்வாரில் பாபா கேதார், கும்பம், அர்த்த கும்பம் மற்றும் கன்வார் யாத்திரைகளுக்கு வரும் பக்தர்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு மாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு இந்த அளவுக்கு பக்தர்கள் வருவது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். உத்தரா கண்ட் மாநிலத்திற்கு இது ஒரு மகத்தான பரிசு என்றும் அவர் கூறினார். மிகப்பெரிய பணிகளை எளிதாக மேற்கொள்ள இரட்டை என்ஜின் அரசு தேவை எனவும், இங்குள்ள இரட்டை என்ஜின் அரசு, இரட்டை சக்தி மற்றும் இரட்டை வேகத்துடன் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
உத்தராகண்ட் வளர்ச்சிக்கான நவரத்தினா எனப்படும் 9 முக்கிய அம்சங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் கூறினார். முதல் ரத்னம் என்பது, கேதார்நாத்–பத்ரிநாத் தலத்திற்கு ரூ.1300 கோடியில் புத்துயிர் அளிக்கும் பணி என்று அவர் கூறினார். இரண்டாவதாக, கௌரிகுண்ட்–கேதார்நாத் மற்றும் கோபிந்த் காட்–ஹேம்குண்ட் சாஹிப்பில் ரூ.2500 கோடியில் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்படுவது என்று அவர் குறிப்பிட்டார். மூன்றாவதாக, மானஸ் கந்த் மந்திர் மாலா திட்டத்தின் கீழ் குமாவோனின் பழமையான கோவில்களை புதுப்பித்தல் என அவர் தெரிவித்தார். நான்காவதாக, மாநிலத்தில் 4000-க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் சுற்றுலா தங்குமிடங்களை மேம்படுத்தும் பணி என அவர் கூறினார். ஐந்தாவது ரத்தினம் என்பது, 16 சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது என்று அவர் கூறினார். ஆறாவதாக, உத்தராகண்டில் சுகாதார சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்து உதம் சிங் நகரில் எய்ம்ஸ் செயற்கைக்கோள் மையம் அமைக்கப்படும் பணிகளை அவர் குறிப்பிட்டார். ஏழாவதாக 2000 கோடி ரூபாய் மதிப்பில் தெஹ்ரி ஏரி மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவது என அவர் தெரிவித்தார். எட்டாவதாக, யோகா மற்றும் சாகச சுற்றுலாவின் தலைநகராக ஹரித்வார் ரிஷிகேஷை வளர்ச்சியடைய செய்வதாகவும், இறுதியாக, தனக்பூர் பாகேஷ்வர் ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும, ஒன்பது நவரத்தினத் திட்டங்களைப் பிரதமர் விளக்கினார்.
மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு புதிய உத்வேகத்துடன் இந்த நவரத்னாக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான சார் தாம் மகாபரியோஜனா திட்டப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். தில்லி – டேராடூன் விரைவுச் சாலை, பயணத்தை வேகமாகவும், எளிதாகவும் மாற்றும் என அவர் கூறினார். உத்தரதாகண்டில் கம்பி வழித்தட இணைப்பு குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். பர்வத மாலா திட்டம், வருங்காலத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் தன்மையை மிகச் சிறப்பாக மாற்றப் போகிறது என பிரதமர் தெரிவித்தார். 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரிஷிகேஷ் – கரன்பிரயாக் ரயில் திட்டம் 2 அல்லது 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் உத்தராகண்டின் பெரும்பகுதிக்கு போக்குவரத்து இணைப்பை வழங்கும் என்றும் இதன் மூலம் முதலீடு, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் உதவியுடன் உத்தராகண்ட் மாநிலம், சுற்றுலா, சாகச சுற்றுலா, திரைப்பட படப்பிடிப்புக்கான தளங்கள், திருமணங்களுக்கான ஏற்ற இடங்கள் ஆகியவற்றின் மையமாக உருவாகி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாகவும், வந்தே பாரத் விரைவு ரயில் அத்தகையை பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். குடும்பத்துடன் வருபவர்கள் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புவதாக அவர் கூறினார். வந்தே பாரத் ரயில் போக்குவரத்துக்கான சிறந்த வழிமுறையாக மாறி வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியா, தமது உள்கட்டமைப்புத் திறனை அதிகப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியில் மேலும் பல உச்சங்களை எட்ட முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த கால அரசுகள் முறைகேடுகளில் ஈடுபட்டதுடன், வாரிசு அரசியலை ஊக்குவித்ததாக அவர் குறைகூறினார். உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அந்த அரசுகள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் அதிவேக ரயில்கள் தொடர்பாக முந்தைய அரசுகள் பெரிய வாக்குறுதிகளை வழங்கியபோதிலும், ரயில்வே கட்டமைப்பில் இருந்து ஆளில்லா ரயில்வே கேட்-களை அகற்றுவதில் கூட, அவை வெற்றி பெறவில்லை என பிரதமர் கூறினார். ரயில் பாதைகள் மின்மயமாக்கலில் அந்த அரசுகளின் நிலை இன்னும் மோசமாக இருந்தது என அவர் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் மூன்றில் ஒரு பகுதி ரயில் பாதைக் கட்டமைப்பு மட்டுமே மின்மயமாக்கப்பட்டு இருந்ததாகவும் வேகமாக செல்லும் ரயிலை அப்போது நினைத்துப் பார்க்க முடியாத நிலை இருந்தது எனவும் பிரதமர் தெரிவித்தார். ரயில்வேத்துறையை முற்றிலும் மாற்றியமைப்பதற்கான அனைத்து பணிகளும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கியது என்று பிரதமர் கூறினார். நாட்டின் முதல் அதிவேக ரயிலின் கனவை செயல்படுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், பாதியளவு அதிவேகத்தில் செல்லும் ரயில்களுக்கான முழு கட்டமைப்பும் தயார்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 2014-ஆம் ஆண்டுக்கு முன் ஆண்டுக்கு சராசரியாக 600 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுதோறும் 6 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார். தற்போது, நாட்டின் 90 சதவீதத்துக்கும் அதிகமான ரயில்வே பாதை கட்டமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். உத்தராகண்டில், ரயில் பாதை கட்டமைப்பு 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு சாதனை எட்டப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
சரியான எண்ணம், கொள்கை மற்றும் அர்ப்பணிப்புடன் வளர்ச்சிப் பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உயர்வு உத்தராகண்ட் மாநிலத்திற்கு நேரடியாகப் பலனளித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மாநிலத்திற்கான சராசரி ரயில்வே நிதி ஒதுக்கீடு ரூ.200 கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 25 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். போக்குவரத்து இணைப்பு இல்லாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மலைப்பாங்கான
இந்த மாநிலத்தில் சிக்கல்களை சந்தித்ததாக அவர் கூறினார். போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், வரும் தலைமுறையினருக்கு முந்தையை கால சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க இந்த அரசு விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார். எல்லைப்பகுதிகளுக்கு எளிதில் சென்றைடைவதற்கு நவீன போக்குவரத்து இணைப்பு பெரிதும் பயன்படும் என்றும், தேசத்தை காக்கும் வீரர்கள் எந்த வகையிலும் சிரமத்திற்கு ஆளாகக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க இரட்டை என்ஜின் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இந்த மாநிலத்தின் விரைவான வளர்ச்சி இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார். நாட்டின் வளர்ச்சி வேகம் இத்துடன் நிற்கப் போவதில்லை. என்று கூறிய அவர், நாடு இப்போது தான் வேகத்தைத் தொட்டுள்ளது என்று தெரிவித்தார். வந்தே பாரத் விரைவு ரயில்களின் வேகத்துடன் இணைந்து முழு நாடும் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் இந்த முன்னேற்றம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
இது உத்தராகண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்படும் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையாகும். உலகத் தரத்திலான வசதிகளுடன் சிறப்பான பயண அனுபவத்தை இந்த ரயில் வழங்கும். குறிப்பாக, அம்மாநிலத்திற்கு சுற்றுலா செல்வோருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், கவாச் தொழில் நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், பொதுப்போக்குவரத்தில் தூய எரிசக்தி பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில் ரயில்வே, நாட்டில் உள்ள ரயில்பாதைகளை முழுமையாக மின்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து அம்மாநிலத்தில் ரயில் பாதைகள் அனைத்தும் நூறு சதவீத மின்மயமாக்கப்பட்ட வழித்தடங்களாக மாறியுள்ளன. மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளில் செல்லும் ரயில்கள், அதிக வேகத்துடன் செல்வதுடன், அவற்றின் இழுவைத்திறனும் அதிகரிக்கும்.
******
AD/PLM/RS/KPG
Delighted to flag off the Delhi-Dehradun Vande Bharat Express. It will ensure 'Ease of Travel' as well as greater comfort for the citizens. https://t.co/NLpcRCHvQW
— Narendra Modi (@narendramodi) May 25, 2023
उत्तराखंड के सभी लोगों को वंदे भारत एक्सप्रेस ट्रेन की बहुत-बहुत बधाई। pic.twitter.com/WlCnbFasyV
— PMO India (@PMOIndia) May 25, 2023
आज पूरा विश्व, भारत को बहुत उम्मीदों से देख रहा है। pic.twitter.com/j50caAFyQU
— PMO India (@PMOIndia) May 25, 2023
सरकार का पूरा जोर, विकास के नवरत्नों पर है। pic.twitter.com/Q2ZdzBIjvh
— PMO India (@PMOIndia) May 25, 2023