Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டெல்லி கரியப்பா மைதானத்தில் நடந்த என்சிசி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்.


டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் என்சிசி பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

கலாச்சார நிகழ்ச்சியை பார்வையிட்ட திரு மோடி, சிறந்த என்சிசி மாணவர்களுக்கான விருதுகளை வழங்கினார். என்சிசி மற்றும் மகளிர் சக்தி, மரியாதை ஓட்டம் மூலம் ஜான்சியில் இருந்து டெல்லி வரை மெகா சைக்ளோத்தான் போட்டியை அவர் நிறைவு செய்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், முன்னாள் என்.சி.சி மாணவர் என்ற முறையில், என்.சி.சி மாணவர்களுக்கு மத்தியில் இருக்கும்போது பழைய நினைவுகள், நினைவுக்கு வருவது இயல்பானது என்றார்.

“என்சிசி மாணவர்களுக்கு மத்தியில் இருப்பது ஒரே பாரதம், உன்னத பாரதம் உணர்வை எடுத்துக்காட்டுகிறது”, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பதைக் கவனித்த பிரதமர் கூறினார். என்சிசியின் செயல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்த அவர், இன்றைய நிகழ்வு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்றார்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் அரசால் அபிவிருத்தி செய்யப்படும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட கிராமங்களின் பஞ்சாயத்துகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுயஉதவி குழுக்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னிலையில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேரணியானது ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற உணர்வை வலுப்படுத்துவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். 2014ஆம் ஆண்டு இந்த பேரணியில் 10 நாடுகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் இருந்ததாகவும், இன்று அந்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரலாற்று சிறப்புமிக்க 75வது குடியரசு தினம் மகளிர் சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு வகையிலும் இந்தியாவின் மகள்கள் செய்த சாதனைகளை நாடு எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார். விழாவில் விருது பெற்ற மாணவர்களை அவர் பாராட்டினார். வதோதரா மற்றும் காசியில் இருந்து வந்த சைக்கிள் குழுக்களை அங்கீகரித்தார். அவர் இரண்டு இடங்களிலிருந்தும் எம்.பி.யாக இருந்ததை குறிப்பிட்டார்.

சமூகத்தில் கலாச்சார ஏற்பாடுகள் மற்றும் அமைப்புகளுடன் பெண்களின் பங்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலகட்டங்களை நினைவுகூர்ந்த பிரதமர், நிலம், கடல், காற்று, விண்வெளி என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் மகள்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதை இன்று உலகம் காண்கிறது என்று கூறினார்.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பெண்களின் உறுதியை எடுத்துரைத்த அவர், இது ஒரே இரவில் கிடைத்த வெற்றியல்ல, கடந்த 10 ஆண்டுகளின் அர்ப்பணிப்பு முயற்சியின் பலன் என்றும் கூறினார். “இந்திய மரபுகளில் மகளிர் எப்போதும் சக்தியாகக் கருதப்படுகிறார்கள்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார், ஆங்கிலேயர்களை நசுக்கிய ராணி லட்சுமி பாய், ராணி சென்னம்மா மற்றும் ராணி வேலு நாச்சியார் போன்ற துணிவு மிக்க வீராங்கனைகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் மகளிர் சக்தியின் ஆற்றலை அரசு தொடர்ந்து பலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட துறைகளில் பெண்கள் நுழைவதில் உள்ள அனைத்து தடைகளும் நீக்கப்பட்டதாகக் கூறிய அவர், பாதுகாப்படையில் பெண்களுக்கான நிரந்தர ஆணையம் மற்றும் கட்டளைப் பதவிகள் மற்றும் போர் முனைகள் போன்றவற்றின் மூலம் முப்படைகளிலும் முன்னணி வரிசையில் மகளிர் நியமிக்கப்பட்டதை எடுத்துக்காட்டினார்.

“அக்னிவீரராக இருந்தாலும் சரி, போர் விமானிகளாக இருந்தாலும் சரி, பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது” என்று பிரதமர் கூறினார். சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய ஆயுதப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் மாநில காவல்துறையில் அதிக பெண்களை நியமிக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

சமூகத்தின் மனநிலையில் இந்த நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், மற்ற துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் வங்கி மற்றும் காப்பீட்டை உறுதி செய்வதில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அல்லது சுய உதவிக் குழுக்கள் போன்ற துறைகளிலும் இதே கதைதான்” என்று அவர் மேலும் கூறினார்.

பெண்களின் பங்கேற்பால் திறமையாளர்களின் களத்தில் எண்ணிக்கை அதிகரிப்பது வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக்கத்தைக் குறிப்பதாக கூறினார். “உலகம் முழுவதுமே இந்தியாவை “விஸ்வ மித்ரா” என்று பார்க்கிறது என்ற பிரதமர் மோடி, இந்தியாவின் பாஸ்போர்ட்டின் வலிமையை சுட்டிக்காட்டினார். “இந்திய இளைஞர்களின் திறமை மற்றும் வலிமையில் பல நாடுகள் வாய்ப்புகளைக் காண்கின்றன” என்று அவர் குறிப்பிட்டார்..

அடுத்த 25 ஆண்டுகளில் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்கை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் இளைஞர்களுக்கான தனது தொலைநோக்கு பார்வையை சுட்டிக்காட்டினார். இதயத்தில் இருந்து பேசிய பிரதமர் மோடி, “இந்த மாற்றத்துக்கான சகாப்தம், வரவிருக்கும் 25 ஆண்டுகளில், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு முதன்மையாக பயனளிக்கும், மோடிக்கு அல்ல,” என்று கூறினார்.

“இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் முதன்மைப் பயனாளிகள் இளைஞர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, “இந்தச் சகாப்தத்தின் மிகப் பெரிய பயனாளிகள் உங்களைப் போன்ற இளைஞர்கள்” என்று குறிப்பிட்ட அவர், தொடர்ச்சியான கடின உழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நீங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க முயற்சி செய்யுங்கள் என்றார்.

கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றிப் பிரதிபலித்த பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் பெரிய அளவில் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் உந்துதலை ஏற்படுத்தும் வகையில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில்  இளைஞர்கள்  திறமை மற்றும் வலிமையை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நவீனமயமாக்கும் நோக்கில், புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பள்ளி இயக்கம் போன்ற முன்முயற்சிகள் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். கடந்த தசாப்தத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை கல்வி தொடர்பான நிறுவனங்களில் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில், இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார். பல மாநிலங்களில் புதிய ஐஐடி மற்றும் எய்ம்ஸ் நிறுவப்பட்டதோடு, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் குறிப்பிடத்தக்க வகையில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதைப்பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், இளம் திறமையாளர்களுக்கு பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மேப்பிங் போன்ற துறைகளில் வாய்ப்புகளை அளிப்பதற்கான அரசின் அர்ப்பணிப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார். “இந்த முயற்சிகள் அனைத்தும் உங்கள் நலனுக்காக, இந்திய இளைஞர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார வலுவூட்டலை நோக்கி தனது உரையைத் தொடர்ந்த பிரதமர் மோடி, “மேக் இன் இந்தியா” மற்றும் “தற்சார்பு இந்தியா” இயக்கங்களைக் குறிப்பிட்டு, இந்திய இளைஞர்களின் விருப்பங்களுடன் அவை இணைந்திருப்பதை குறிப்பிட்டார். “இந்த பிரச்சாரங்கள் உங்களைப் போன்ற இளைஞர்களுக்காகவும், புதிய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.” .

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு சான்றாக, டிஜிட்டல் பொருளாதாரத்தின் அதிவேக வளர்ச்சி மற்றும் இளைஞர்கள் மீது அதன் ஆழமான தாக்கத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். “கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் நமது இளைஞர்களுக்கு புதிய பலமாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

உலகளவில் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலாக இந்தியா உருவெடுத்துள்ளதை ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி, இளைஞர்களிடையே உள்ள தொழில் முனைவு உணர்வைப் பாராட்டினார். இந்தியாவில் மொபைல் உற்பத்தி மற்றும் மலிவு விலையில் இணையவசதி மற்றும் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒளி இழை கம்பி இணைப்பு ஆகியவற்றின் வளர்ச்சியையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இ-வணிகம், ஆன்லைன் ஷாப்பிங், ஹோம் டெலிவரி, இணையவழி கல்வி மற்றும் ஆன்லைன் சிகிச்சை ஆகியவற்றின் விரிவாக்கம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்களை வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் லட்சக்கணக்கான பொதுச் சேவை மையங்கள், ஏராளமான இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகின்றன என்றும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட கொள்கை உருவாக்கம் மற்றும் தெளிவான முன்னுரிமைகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். எல்லைக் கிராமத்தை கடைசி கிராமம் என்று அழைக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பேசினார். இப்போது இந்த கிராமங்கள் ‘முதல் கிராமங்கள்’ துடிப்பானகிராமங்கள்’ என்று குறிப்பிட்ட அவர்,  வரும் நாட்களில் இந்த கிராமங்கள் பெரிய சுற்றுலா மையங்களாக மாறும் என்றார்.

இளைஞர்களிடம் நேரடியாக உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்தார், தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்க அழைப்பு விடுத்தார். “எனது இந்தியா அமைப்பில்” பதிவு செய்து, வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கான யோசனைகளை பங்களிக்குமாறு அவர் இளைஞர்களை வலியுறுத்தினார்.

தனது உரையின் முடிவில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, அவர்கள் எதிர்காலத்தில் வெற்றிபெற வாழ்த்தினார். “நீங்கள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தின் சிற்பிகள்” என்று அறிவித்த அவர், இளைஞர்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், திரு. ராஜ்நாத் சிங், என்சிசி தலைமை இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர், திரு அஜய் பட், முப்படைகளின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி, ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதரி, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலர் திரு கிரிதர் அரமனே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்நிகழ்வில் அமிர்த தலைமுறையின் மற்றும் அதிகாரமளித்தலை வெளிப்படுத்தும் அமிர்த காலத்தில் என்சிசி’ எனும் கருப்பொருளில் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. வசுதைவ குடும்பகத்தின் உண்மையான இந்திய உணர்வில், 24 வெளிநாடுகளைச் சேர்ந்த 2,200க்கும் மேற்பட்ட என்சிசி கேடட்கள் மற்றும் இளம் கேடட்கள் இந்த ஆண்டு பேரணியில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக, 400க்கும் மேற்பட்ட துடிப்பான கிராமங்களின் பஞ்சாயத்துகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு சுயஉதவி குழுக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் என்சிசி பிரதமர் பேரணியில் கலந்து கொண்டனர்.

*****

ANU/AD/BS/DL