Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

“டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்


”டிஜிட்டல் இந்தியா” தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இன்று காணொளி கருத்தரங்கு மூலம் “டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.  மத்திய மின்னணுவியல் மற்றும் ஐடி அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் மற்றும் கல்வி இணையமைச்சர் திரு சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோரும் இந்த காணொளி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதம மந்திரி புத்தாக்கங்கள் மீதான பெருவிருப்பத்தை இந்தியா வெளிப்படுத்தி இருப்பதோடு அத்தகைய புத்தாக்கங்களை மிக விரைவாக ஏற்று நடைமுறைப்படுத்தும் திறன் உள்ளதையும் வெளிப்படுத்தி உள்ளது.  டிஜிட்டல் இந்தியா என்பது இந்தியாவின் சங்கல்பம் ஆகும்.  சுயசார்பு இந்தியாவுக்கான கருவியாக டிஜிட்டல் இந்தியா இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் உருவாகி வரும் வலிமையான இந்தியருக்கான ஆதார சாட்சியாக டிஜிட்டல் இந்தியா விளங்குகிறது. பிரதம மந்திரி தனது முழக்கமான “குறைந்தபட்ச அரசாங்கம் – அதிகபட்ச அரசாள்கை” என்பதை எடுத்துரைத்ததோடு எவ்வாறு டிஜிட்டல் இந்தியா சாதாரண குடிமகனுக்கும் அதிகாரம் அளிக்கிறது என்பதையும் விளக்கினார். அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான இடைவெளி, அமைப்பு மற்றும் அலுவலகங்கள், பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் அதிகாரம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு டிஜிலாக்கர் எவ்வாறு உதவியது என்பதை உதாரணத்துடன் அவர் எடுத்துக்காட்டினார். நாட்டில் எங்கிருந்து வேண்டுமென்றாலும் பள்ளிக்கூட சான்றிதழ்கள், மருத்துவ ஆவணங்கள் மற்றும் இதர சான்றிதழ்களை டிஜிலாக்கர் மூலம் சேமித்து வைக்க முடியும். ஓட்டுநர் உரிமம் பெறுதல், பிறப்புச் சான்றிதழ், மின்கட்டணம் செலுத்துதல், தண்ணீர் கட்டணம் செலுத்துதல், வருமான வரி தாக்கல் செய்தல் முதலானவை இப்போது எளிதானதாகவும் வேகமானதாகவும் மாறி உள்ளன. கிராமங்களி்ல் மின்னணு பொதுச்சேவை மையங்கள் (CSC) மக்களுக்கு உதவுகின்றன. டிஜிட்டல் இந்தியா மூலம்தான் ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை போன்ற முன்னெடுப்புகள் சாத்தியமாகி உள்ளன.  இந்த முன்னெடுப்பை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்காக உச்சநீதிமன்றத்தை அவர் பாராட்டினார்.

டிஜிட்டல் இந்தியாவானது பயனாளிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ள முறை குறித்து பிரதம மந்திரி திருப்தி தெரிவித்தார். ஸ்வநிதி திட்டத்தின் பலன்களைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் ஸ்வமித்வா திட்டத்தின் மூலம் உரிமை இன்மை என்ற பிரச்சனை தீர்க்கப்படுவதையும் எடுத்துக்காட்டினார்.  மேலும் தொலைதூர மருத்துவ வசதி தொடர்பான இ-சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.  தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் கீழ் திறன்மிக்க பிளாட்ஃபார்மை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதையும் எடுத்துரைத்தார்.

கொரோனா காலகட்டத்தில் இந்தியா முன்னெடுத்த டிஜிட்டல் தீர்வுகள் இன்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதாகவும் விவாதத்துக்கான மையப் பொருளாகவும் உள்ளன என்று பிரதமர் கூறினார்.  தொற்றோடு தொடர்புடையவர்களைத் தடம் கண்டறியும் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் செயலிகளில் ஒன்றான ஆரோக்கிய சேது எண்ணற்றவர்களைத் தொற்றில் இருந்து தடுத்து உள்ளது.  தடுப்பூசிக்கான இந்தியாவின் “கோவின் செயலி“ மீது பல நாடுகள் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன என்றும் அவர் கூறினார். தடுப்பூசி செலுத்தப்படும் நடைமுறையைக் கண்காணிப்பதற்கான அத்தகைய ஒரு உபகரணம் நமது தொழில்நுட்ப நேர்த்திக்கான ஒரு நிரூபணமாக உள்ளது.

டிஜிட்டல் இந்தியா என்பது அனைவருக்குமான வாய்ப்பு, அனைவருக்குமான வசதி, அனைவரும் பங்கேற்றல் என்று பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா என்றால் அரசு அமைப்போடு அனைவரும் தொடர்பு கொள்ள முடியும் என்று அர்த்தம் ஆகும்.  டிஜிட்டல் இந்தியா என்றால் வெளிப்படையான, யாரையும் புறக்கணிக்காத அமைப்பு ஆகும்.  மேலும் ஊழலுக்கு எதிரானதாகவும் இது இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா என்றால் நேரம், உழைப்பு மற்றும் பணத்தைச் சேமித்தல் ஆகும். டிஜிட்டல் இந்தியா என்றால் விரைவான லாபம், முழுமையான லாபம். டிஜிட்டல் இந்தியா என்றால், குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச அரசாள்கை ஆகும்.

டிஜிட்டல் இந்தியா இயக்கமானது கொரோனா காலகட்டத்தில் நம் நாட்டுக்கு உதவி உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஊரடங்கின் காரணமாக தனது குடிமக்களுக்கு வளர்ந்த நாடுகளே உதவித் தொகையை விநியோகிக்க முடியாத நிலையில் இருந்த போது, இந்தியா தனது குடிமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக கோடிக்கணக்கான ரூபாயை செலுத்தியது. டிஜிட்டல் பரிமாற்றங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வந்தன. பிஎம் கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.1.35 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது. அதே போன்று டிஜிட்டல் இந்தியா திட்டமானது ஒரே தேசம், ஒரே எம்எஸ்பி என்பதையும் சாத்தியமாக்கி உள்ளது.

டிஜிட்டல் இந்தியாவுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிக அளவிலும் விரைவாகவும் ஏற்படுத்தித் தருவதற்கு மிக அதிக அளவிலான முக்கியத்துவம் தரப்பட்டது என்று பிரதம மந்திரி தெரிவித்தார்.  2.5 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலமாக தொலைதூர பகுதிகளுக்கும் இணையம் சென்று சேர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாரத் நெட் திட்டத்தின் கீழ் போர்க்கால அடிப்படையில் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிஎம் வாணி (PM WANI) மூலமாக, இணைப்பு புள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  இதன் மூலம் சிறப்பான சேவைகளையும் கல்வி கற்கும் வசதியையும் கிராமப்புற இளைஞர்கள் பெறுவதற்கு அதிவேக இணைய வசதியோடு தொடர்பு கொள்ள முடியும். நாடு முழுவதும் குறைந்த விலையில் மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் டிஜிட்டல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கை அடைவதற்காக உற்பத்தியோடு தொடர்புடைய மானியங்கள் மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் இந்தியா காரணமாக கடந்த 6-7 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.

 டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமையை பெருமளவில் மேம்படுத்துவதாகவும் சர்வதேச டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்கினை அதிகரிப்பதாகவும் இந்தப் பத்தாண்டு இருக்கும் என்று பிரதமர் கூறினார். உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய 5ஜி தொழில்நுட்பத்திற்கு இந்தியா தயாராகிக் கொண்டு இருக்கிறது. டிஜிட்டல் அதிகாரம் பெறுதல் மூலம் புதிய உச்சங்களுக்கு உங்களை இளைஞர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.  இவை எல்லாம் சேர்ந்து இந்தப் பத்தாண்டை “இந்தியாவின் டெக்கேட்” ஆக மாற்றும். 

உத்திரப்பிரதேசத்தின் பல்ராம்பூரைச் சேர்ந்த மாணவி சுஹானி சாஹு பிரதமருடனான கலந்துரையாடலில் தீக்‌ஷா செயலி மூலமாகத் தான் பெற்ற அனுபவங்களையும் ஊரடங்கின் போது கல்வி கற்றுக் கொள்ள இந்த செயலி எவ்வாறு உதவியாக இருந்தது என்பதையும் பகிர்ந்து கொண்டார். மஹாராஷ்டிராவின் ஹிங்கோலியைச் சேர்ந்த திரு. பிரகலாத் போர்காத் இ-நாம் செயலி மூலம் போக்குவரத்துக்கான செலவை மிச்சம் பிடித்ததையும் சரியான விலை கிடைத்ததையும் பகிர்ந்து கொண்டார். பீகாரின் கிழக்கு சம்ப்பரானில் நேபாள எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த திரு சுப்பாம் குமார் தனது பாட்டிக்கு மருத்துவரின் ஆலோசனையை இ-சஞ்சிவினி செயலி மூலம் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தச் செயலி மட்டும் இல்லையென்றால் அவர் மருத்துவரைச் சந்திக்க தனது பாட்டியோடு லக்னோ சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்.  இந்தக் குடும்பத்திற்கு லக்னோவில் இருக்கின்ற டாக்டர் புபேந்தர் சிங் இ-சஞ்சீவினி செயலி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கினார். அந்த மருத்துவரும் செயலி மூலம் எவ்வளவு எளிதாக மருத்துவ ஆலோசனை வழங்க முடிகிறது என்ற தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். அவருக்கு பிரதமர் மருத்துவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு இ-சஞ்சீவினி செயலி மேலும் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்ற உறுதியையும் அளித்தார்.

உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த அனுபமா துபே என்பவர் மகிளா இ-ஹாத் மூலம் பாரம்பரிய பட்டுச் சேலைகளை விற்கும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பட்டுச் சேலைகளுக்கான புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் பேட் மற்றும் ஸ்டைலஸ் போன்ற புதிய நவீன தொழில்நுட்பங்களை தான் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றேன் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.  புலம்பெயர்ந்து தற்போது உத்திரகாண்ட்டின் டேராடூனில் வசிக்கும் திரு ஹரிராம் ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் மூலம் ரேஷன் பொருட்களைப் பெறுகின்ற தனது அனுபவங்களை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். இமாச்சலப் பிரதேசத்தின் தரம்பூரில் இருக்கும் திரு. மேகர் தத் ஷர்மா அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்லாமல் தான் இருக்கும் தொலைதூர கிராமத்தில் இருந்து கொண்டே பொருட்களை பெற பொதுச் சேவை மையத்தின் இ-ஸ்டோர் எவ்வாறு உதவியது என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.  மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் இருக்கும் தெருவோர வியாபாரியான திருமதி நஜ்மீன் ஷா எவ்வாறு பிஎம் ஸ்வநிதி திட்டம் பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு பொருளாதார ரீதியில் மீண்டெழ அவருக்கு உதவியது என்று எடுத்துரைத்தார்.  மேகாலயாவில் வசிக்கும் கெபிஓ ஊழியரான திருமதி வன்டமாஃபி சியீமிலே இந்திய பிபீஓ திட்டத்திற்கு தான் நன்றிக் கடன் பட்டிருப்பதாக தெரிவித்தார்.  மேலும் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் போது மிகவும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் அவரால் பணிபுரிய முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

——–