பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜ் செல்லும் அவர், நண்பகல் 12.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, நண்பகல் 12.40 மணியளவில், அங்குள்ள தல விருட்சத்தில் பிரதமர் பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து ஹனுமான் மற்றும் சரஸ்வதி கோவில்களில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில், மகா கும்பமேளா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ரூ.6670 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
பிரயாக்ராஜில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 10 புதிய சாலை மேம்பாலங்கள், மலைப்பகுதிகள் மற்றும் நதிக் கரையோரங்களில் சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களும் இதில் அடங்கும்.
புனித நதியான கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும் வகையில், சிறிய வடிகால்கள் கால்வாய்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கும் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் அசுத்த நீர் கங்கை ஆற்றில் கலப்பது தடுக்கப்படும். குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
பரத்வாஜ் ஆசிரம வழித்தடம், ஷ்ரிங்வெர்பூர் கோவில் நடைபாதை உள்ளிட்ட முக்கிய கோவில் வழித்தடங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இதன் மூலம் பக்தர்கள் எளிதாக கோவிலுக்கு செல்வதற்கான பாதையை உறுதி செய்வதுடன், ஆன்மீக சுற்றுலாவையும் மேம்படுத்தும்.
மஹா கும்பமேளா 2025 நிகழ்ச்சிகள் குறித்த விபரக்குறிப்புகள் மற்றும் புதிய தகவல்களை வழங்குவதற்கான கும்பமேளா சாட்போட்டையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.
—–
(Release ID 2083654)
TS/SV/KPG/KR