Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகளுக்கான 5 ஆய்வகங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் இளம் விஞ்ஞானிகளுக்கான 5 ஆய்வகங்களை, பிரதமர் திரு.நரேந்திர மோடி பெங்களூருவில் இன்று (02.01.2020) நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகளுக்கான ஆய்வகங்கள், முறையே பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய 5 இடங்களில் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆய்வகமும், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், காக்னிட்டிவ் தொழில்நுட்பம், அசிமெட்ரிக் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் மெட்டீரியல்கள் என எதிர்கால பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும்.

2014 ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற டிஆர்டிஓ விருது வழங்கும் விழாவின் போது பிரதமரிடமிருந்துதான் இது போன்ற ஆய்வகங்களை திறக்க ஊக்கம் கிடைத்தது. அப்போது பேசிய திரு.நரேந்திர மோடி, முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குவதோடு, ஆராய்ச்சி வாய்ப்புகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ளச் செய்வதன் மூலம், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க டிஆர்டிஓ நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, நாட்டில் புதிதாக உருவெடுக்கும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடைமுறைகளை வகுக்க இது போன்ற ஆய்வகங்கள் உதவிகரமாக இருக்கும் என்றார்.

இந்தியாவின் பல்வேறு துறைகளில் அறிவியல் ஆராய்ச்சியின் போக்கு மற்றும் வேகத்தை நிர்ணயிக்க டிஆர்டிஓ நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான உறுதியான செயல் திட்டத்தை விஞ்ஞானிகள் தயாரிக்க வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் உலகின் தலைசிறந்த திட்டங்களில் ஒன்றாக உள்ளது என்றார். இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் மற்றும் வான்பாதுகாப்பு நடைமுறைகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கி விடக் கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்புக்காக புதிதாக உருவெடுக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய ஏதுவாக, விஞ்ஞானிகளுடன் இன்னும் அதிக அளவில் இணைந்து பணியாற்ற அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை வலுப்படுத்துவதிலும், நாட்டின் பாதுகாப்புத் துறையை வலிமையானதாக மேம்படுத்துவதிலும் டிஆர்டிஓ-வின் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகளுக்கான 5 ஆய்வகங்களை திறந்திருப்பது, ஆராய்ச்சி மற்றும் எதிர்கால தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அடித்தளமிடுவதாக இருக்கும். பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியா எதிர்காலத்தில் தற்சார்பு நிலையை எட்டும் நடவடிக்கையில் இதுவொரு பெரிய முன்னேற்றமாக அமையும்.
வேகமாக உருவெடுத்து வரும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிகள், பெங்களூருவில் மேற்கொள்ளப்படும். குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து முக்கிய ஆராய்ச்சிகளும் மும்பை ஐஐடி-யில் மேற்கொள்ளப்படும். எதிர்காலம் என்பது காக்னிட்டிவ் தொழில்நுட்பத்தை சார்ந்ததாக இருப்பதால், இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆய்வகம் சென்னை ஐஐடியில் அமையும். புதிய மற்றும் எதிர்கால தொழில்நுட்பமாக கருதப்படும் அசிமெட்ரிக் தொழில்நுட்பம், போரிடும் முறையை மாற்றியமைக்கக் கூடியது என்பதால், இதற்கான ஆய்வகம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும். மிக முக்கியமான ஆராய்ச்சியான ஸ்மார்ட் மெட்டீரியல் ஆராய்ச்சி மற்றும் அதன் பயன்பாடு குறித்த ஆய்வகம் ஐதராபாத்தில் அமைக்கப்படும்.

***********