Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மன் வர்த்தகர்களின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய முக்கிய உரையின் தமிழாக்கம் (APK 2024)

ஜெர்மன் வர்த்தகர்களின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய முக்கிய உரையின் தமிழாக்கம் (APK 2024)


மாண்புமிகு பிரதமர் ஸ்கால்ஸ்,

துணைப்பிரதமர் டாக்டர் ராபர்ட் ஹேபெக் அவர்களே,

எனது சக அமைச்சர்களே,

ஜெர்மன் வர்த்தக அமைப்பின் ஆசிய – பசிபிக் குழுவின் தலைவர் டாக்டர் புஷ்க் அவர்களே,

இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,

தாய்மார்களே, சகோதரர்களே,

வணக்கம்!

குடன் டேக்!

நண்பர்களே,

இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும்.

எனது நண்பர் பிரதமர் ஸ்கால்ஸ் நான்காவது முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

முதல் வருகையில் அவர் மேயராக வந்தார். அடுத்த மூன்று வருகைகள் அவர் பிரதமராக  இருந்த காலத்தில் நிகழ்ந்தன. இது இந்தியா-ஜெர்மனி உறவுகளில் அவரது அக்கறையை எடுத்துக்காட்டுகிறது.

ஜெர்மன் வர்த்தகத்தின் ஆசிய-பசிபிக் மாநாடு 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது.

ஒருபுறம், தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றக் கூட்டம் நடைபெறுகிறது. மறுபுறம், நமது கடற்படைகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன. ஜெர்மன் கடற்படை கப்பல்கள் தற்போது கோவா துறைமுகத்தில் உள்ளன. மேலும், இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே, அரசுகள் அளவிலான ஏழாவது ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவு, ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு முனையிலும் வலுவடைந்து வருவது தெளிவாகிறது.

நண்பர்களே,

இந்த ஆண்டு இந்தியா-ஜெர்மனி உத்திசார் கூட்டாண்மையின் 25-வது ஆண்டைக் குறிக்கிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்த கூட்டணி புதிய உச்சங்களை எட்டும்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இத்தகைய நெருக்கடியான நேரத்தில், ஜெர்மன் அமைச்சரவை “இந்தியா மீது கவனம்” என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகின் இரண்டு வலிமையான ஜனநாயக நாடுகள்,

உலகின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகள் இணைந்து, உலக நன்மைக்கான சக்தியாக மாற முடியும். இந்தியா மீதான கவனம் ஆவணம், இதற்கான செயல்முறையை வழங்குகிறது. இதில், ஜெர்மனியின் முழுமையான அணுகுமுறை மற்றும் நீடித்த கூட்டாண்மையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவின் திறமையான தொழிலாளர்கள் மீது ஜெர்மனி வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கை குறிப்பிடத்தக்கது.

திறமையான இந்தியர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 20,000-லிருந்து 90,000 ஆக உயர்த்த ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

இது ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

நமது இருதரப்பு வர்த்தகம் 30 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

தற்போது நூற்றுக்கணக்கான ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படும் அதே வேளையில், இந்திய நிறுவனங்களும் ஜெர்மனியில் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

இந்தியா பல்வகைப்படுத்தல் மற்றும் அபாயங்களைக் குறைக்கும் முக்கிய மையமாக மாறி வருகிறது. உலக வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும், உலகிற்காக உருவாக்குவதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்.

நண்பர்களே,

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஆசிய-பசிபிக் மாநாடு முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஆனால், இந்த தளத்தை வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு மட்டுமேயானதாக நான் பார்க்கவில்லை.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டாண்மை மற்றும் உலகின் சிறந்த எதிர்காலமாக இதை நான் பார்க்கிறேன். உலகிற்கு ஸ்திரத்தன்மை, நிலைத்தன்மை, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை தேவை. சமூகத்தில் அல்லது விநியோகச் சங்கிலி கோளில் என ஒவ்வொரு முனையிலும் இந்த மதிப்புகள் வலியுறுத்தப்பட வேண்டும். இவை இல்லாமல், எந்த நாடும் அல்லது பிராந்தியமும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. உலகளாவிய வளர்ச்சி, மக்கள் தொகை அல்லது திறன்கள் என எதுவாக இருந்தாலும், இந்தப் பிராந்தியத்தின் பங்களிப்பும் திறனும் அளப்பரியது.

எனவே, இந்த மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

நண்பர்களே,

இந்திய மக்கள் ஒரு நிலையான அரசியலையும் முன்கூட்டியே கணிக்க கூடிய கொள்கைகளுக்கான சூழல் சார் அமைப்பை மதிக்கிறார்கள்.

அதனால்தான், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் சீர்திருத்தம், செயல்திறன், நல் ஆளுகை ஆகியவற்றின் மூலம் இந்தியா மீதான இந்த நம்பிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் சாதாரண மக்கள் இதை உணருகின்றனர். உங்களைப் போன்ற வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இதுவே தேவை.

நண்பர்களே,

ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை, தரவு ஆகிய நான்கு வலுவான தூண்களில் இந்தியா தற்போது செயல்படுகிறது. திறமை, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், உள்கட்டமைப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கான கருவிகள். தற்போது, இவை அனைத்துக்கும் உந்துதல் அளிக்கும் மற்றொரு மாபெரும் சக்தி உள்ளது. அது எதிர்பார்ப்பு நிறைந்த இந்தியாவின் வலிமை.

அதாவது, செயற்கை நுண்ணறிவும், முன்னேறும் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படும் வலிமை நம்மிடம் உள்ளது. நமது இளைஞர்கள் லட்சியம் நிறைந்த இந்தியாவை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

கடந்த நூற்றாண்டில், இயற்கை வளங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தின. இந்த நூற்றாண்டில், மனித வளங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதனால்தான் இந்தியா தனது இளைஞர்களுக்கு திறன்களையும், தொழில்நுட்பத்தையும்  ஜனநாயகப்படுத்த உறுதிபூண்டுள்ளது.

நண்பர்களே,

எதிர்கால உலகின் தேவைகளுக்காக இந்தியா உழைத்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு இயக்கம், செமிகண்டக்டர் இயக்கம், குவாண்டம் இயக்கம், பசுமை ஹைட்ரஜன் இயக்கம், விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான இயக்கங்கள், டிஜிட்டல் இந்தியா இயக்கம் என இவை அனைத்தும் உலகிற்கு சிறந்த, நம்பகமான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை உங்கள் அனைவருக்கும் பல முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன.

நண்பர்களே,

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்கும் வலுவான தளத்தையும் சிறந்த உள்கட்டமைப்பையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. நமது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, புதிய  புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை 4-வது  தொழில் புரட்சிக்கு அளவற்ற வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் சாதனை அளவிலான  முதலீடுகள் மூலம் இந்தியா தனது கட்டமைப்பை மாற்றி வருகிறது. ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இங்கு விரிவான வாய்ப்புகள் உள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து பணியாற்றி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த மாதம், ஜெர்மனியுடன் இணைந்து நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு குஜராத்தில் நடத்தப்பட்டது.

உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதற்காக இந்திய-ஜெர்மனி தளமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா உருவாக்கி வரும் பசுமை ஹைட்ரஜன் சூழல் அமைப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சியில் நீங்களும் இணைய இதுவே சரியான தருணம்.

இந்தியாவின் சுறுசுறுப்பு ஜெர்மனியின் துல்லியத்துடன் இணையும்போது,

ஜெர்மனியின் பொறியியல் இந்தியாவின் கண்டுபிடிப்புகளுடன் இணையும்போது,

ஜெர்மனியின் தொழில்நுட்பம் இந்தியாவின் திறமையுடன் இணையும்போது,

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கும் உலகிற்கும் ஒரு பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.

நண்பர்களே,

நீங்கள் வணிக உலகைச் சேர்ந்தவர்கள்.

நீங்கள், இந்தியாவுக்கு வருவது என்பது வியாபாரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இந்தியாவின் கலாச்சாரம், உணவு வகைகள், ஷாப்பிங் ஆகியவற்றை நீங்கள் தவறவிடக்கூடாது.

உங்களது இந்தியப் பயணம், சிறப்பாக அமையும்  என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இந்த மாநாடும், இந்தியாவில் நீங்கள் தங்கியிருக்கும் காலமும் பயனுள்ளதாகவும், நினைவில் கொள்ளத்தக்கதாகவும் இருக்கட்டும்.

***

(Release ID: 2068062)

TS/MM/PLM/AG/RS/KR