Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

முதலாவதாக, இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸையும் அவரது தூதுக்குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த சில நாட்களில் நடைபெற்ற நடவடிக்கைகளிலிருந்து இந்தியா – ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இன்று காலை, ஜெர்மன் வர்த்தகத் துறையின் ஆசிய பசிபிக் மாநாட்டில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

எனது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் இந்திய-ஜெர்மனி அரசு கூட்டம் சிறிது நேரத்திற்கு முன்பு முடிவடைந்தது. பல துறைகளில்  நமது ஒத்துழைப்பு உள்ளது. ஜெர்மன் கடற்படை கப்பல்கள் கோவா துறைமுகங்களுக்கு வருகை தருகின்றன. விளையாட்டு உலகிலும் நமது ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. நமது ஹாக்கி அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான போட்டிகளும் விளையாடப்படுகின்றன.

நண்பர்களே,

ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் தலைமையின் கீழ் நமது ஒத்துழைப்பு புதிய வேகத்தைப்பெற்றுள்ளது. உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நவீனப்படுத்தவும், விரிவான முறையில் உயர்த்தவும் உதவும் ஜெர்மனியின் இந்தியா தொடர்பான செயல்திட்டம் என்ற உத்திக்காக ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸை நான் பாராட்டுகிறேன்.

இன்று, நமது தொழில்நுட்ப செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முக்கியமான, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முழு அரசு அணுகுமுறையை மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். பாதுகாப்பான, நம்பகமான, நெகிழ்திறன் கொண்ட உலகளாவிய விநியோக மதிப்புச் சங்கிலிகளை உருவாக்கவும் இது உதவும்.

நண்பர்களே,

பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு நமது ஆழமான பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ரகசிய தகவல் பரிமாற்றம் குறித்த உடன்பாடு இந்த திசையில் ஒரு புதிய படியாகும். இன்று கையெழுத்தான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டு முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும்.

பசுமையான, நீடித்த வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இன்று, நமது பசுமையான, நீடித்த வளர்ச்சி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பசுமை நகர்ப்புற கூட்டுச்செயல்பாட்டின் இரண்டாம் கட்ட செயல்பாட்டிற்கு நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். கூடுதலாக, பசுமை ஹைட்ரஜன் செயல்திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

உக்ரைனிலும் மேற்கு ஆசியாவிலும் நடந்து வரும் மோதல்கள் இரு நாடுகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளன. போரால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது, மேலும் அமைதியை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான அனைத்து பங்களிப்பையும் வழங்க தயாராக உள்ளது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப சுதந்திரமான கடற்போக்குவரத்தை பின்பற்றுவதை உறுதி செய்வதில் இருவரும் உடன்படுகிறோம்.

இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலகளாவிய அமைப்புகள் 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை அல்ல என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உட்பட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்கள் தேவை.

இந்த திசையில் இந்தியாவும் ஜெர்மனியும் தொடர்ந்து தீவிரமாக ஒத்துழைத்து செயல்படும்.

நண்பர்களே,

நமது உறவின் முக்கிய தூணாக மக்களுக்கு இடையேயான தொடர்புகள் உள்ளன. இன்று, திறன் மேம்பாடு, தொழிற்கல்வியில் இணைந்து பணியாற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். சென்னை ஐ.ஐ.டிக்கும் டிரெஸ்டன் பல்கலைக்கழகத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது, இது நமது மாணவர்கள் இரட்டை பட்டப்படிப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.

ஜெர்மனியின் முன்னேற்றத்திற்கும், செழிப்புக்கும் இந்தியாவின் இளம் திறமைசாலிகள் பங்களித்து வருகின்றனர். இந்தியாவுக்காக ஜெர்மனி வெளியிட்டுள்ள திறன் பெற்ற தொழிலாளர் வியூகத்தை நாங்கள் வரவேற்கிறோம். நமது இளம் திறமையாளர்கள் ஜெர்மனியின் வளர்ச்சியில் பங்களிக்க சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்திய திறமைசாலிகளின் திறன் மீது நம்பிக்கை வைத்ததற்காக ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸை நான் பாராட்டுகிறேன்.

மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் அவர்களே,

உங்களது இந்திய வருகை நமது ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. நமது ஒத்துழைப்பில் தெளிவு உள்ளது. எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்.

மிக்க நன்றி

பொறுப்புத் துறப்பு – இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

TS/PLM/RS/DL