குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நிதி ஆயோக் ஆளுமைக்குழுவின் 4-வது சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. நாள் முழுவதும் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை ஆளுநர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நிதி ஆயோக் நிர்வாகக்குழு தேசிய அளவிலான வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை, வளர்ச்சியை முன்நிறுத்தி பல்வேறு துறைகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களையும் கொண்ட பகிரப்பட்ட பார்வையை ஏற்படுத்தி செயல்படும் அமைப்பாகும். மாநிலங்களையும் இந்த திசையில் செயல்பட வழி நடத்தும்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் வருங்கால வளர்ச்சித் திட்ட கவனங்கள் குறித்து இந்த நிர்வாகக்குழு ஆய்வு செய்யும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, முன்னோடி திட்டங்களான ஆயுஷ்மான் பாரத், தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இந்திரதனுஷ் இயக்கம்; முன்னோடி மாவட்டங்களில் வளர்ச்சியை கொண்டு வருவது மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆகியவை குறித்து இந்தக் குழு விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.