எனது மத்திய அமைச்சரவை சகா டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்துள்ள அனைத்து விஞ்ஞானிகளே, இதர மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
வணக்கம்!
இன்று, ஆராய்ச்சி உலகில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை எடுத்து வைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜீனோம் இந்தியா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்று முன்வைத்த சவால்கள் இருந்தபோதிலும், இந்த திட்டத்தை நிறைவேற்ற நமது விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் ஐஐஎஸ்சி, ஐஐடி, சிஎஸ்ஐஆர், பிரிக் போன்ற நாட்டின் 20-க்கும் மேற்பட்ட முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 10,000 இந்தியர்களின் மரபணு வரிசைப்படுத்தல் என்ற இந்தத் திட்டத்தின் தரவுகள் இப்போது இந்திய உயிரியல் தரவு மையத்தில் கிடைக்கின்றன. உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன். இத்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து தோழர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப புரட்சியில் ஜீனோம் இந்தியா திட்டம் ஒரு முக்கிய மைல்கல். இந்தத் திட்டத்தின் உதவியுடன், நாட்டில் பன்முகத்தன்மை கொண்ட மரபணு வளத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் மரபணு சூழலைப் புரிந்துகொள்ள நமது அறிஞர்கள், விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவும். இந்த தகவல் நாட்டின் கொள்கை உருவாக்கத்தையும், திட்டமிடலையும் எளிதாக்கும்.
நீங்கள் அனைவரும் உங்கள் துறைகளில் வல்லுநர்கள், மதிப்புமிக்க விஞ்ஞானிகளாக உள்ளனர் .இந்தியாவின் பரந்த, பன்முகத்தன்மையானது உணவு, மொழி, புவியியலுடன் நின்றுவிடவில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்தியாவில் வாழும் மக்களின் மரபணுக்களிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. இயற்கையாகவே, நோய்களின் தன்மையும் பன்முகத்தன்மையால் நிரம்பியுள்ளது. எனவே, எந்த வகையான மருந்து எந்த நபருக்கு பயனளிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இதற்கு, நாட்டு மக்களின் மரபணு அடையாளத்தை அறிந்து கொள்வது அவசியம்.
உதாரணமாக, அரிவாள் செல் ரத்த சோகை நோய் நமது பழங்குடி சமூகத்தில் ஒரு பெரிய நெருக்கடியாக உள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்காக, நாங்கள் ஒரு தேசிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். இருப்பினும், இங்கேயும், பல சவால்கள் உள்ளன. நமது பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதியில் அரிவாள் செல் ரத்த சோகை நோய் பிரச்சினை மற்றொரு பகுதியில் இல்லாமல் இருக்கலாம். வேறு ஒரு பிரச்சினை இருக்கலாம். முழுமையான மரபணு ஆய்வு செய்தால் மட்டுமே இந்த விவரங்கள் அனைத்தையும் நாம் அறிய முடியும். இது இந்திய மக்கள்தொகையின் தனித்துவமான மரபணு வடிவங்களைப் புரிந்துகொள்ள உதவும். அப்போதுதான் ஒரு குறிப்பிட்ட குழுவின் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட தீர்வுகள் அல்லது பயனுள்ள மருந்துகளை நாம் தயாரிக்க முடியும்.
நான் அரிவாள் செல் நோயை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இது அதோடு நின்றுவிடவில்லை. அதை ஒரு உதாரணத்துக்காகத்தான் பயன்படுத்தினேன். பரம்பரை நோய்கள், அதாவது, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படும் நோய்கள், பற்றி இந்தியா இன்னும் அறியவில்லை. ஜீனோம் இந்தியா திட்டம் இந்தியாவில் இதுபோன்ற அனைத்து நோய்களுக்கும் பயனுள்ள சிகிச்சையை உருவாக்க உதவும்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டில், உயிரி தொழில்நுட்பம், பயோமாஸ் ஆகியவற்றின் கலவையானது இந்தியாவின் அடித்தளத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், ஏனெனில் அது உயிரி பொருளாதாரத்தை உருவாக்குகிறது. இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்துவது, உயிரி அடிப்படையிலான தயாரிப்புகளையும், சேவைகளையும் ஊக்குவிப்பது, இந்தத் துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை உயிரி பொருளாதாரத்தின் குறிக்கோள்களாகும். உயிரி பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் உயிரி பொருளாதாரம் வேகமாக முன்னேறியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2014-ல் 10 பில்லியன் டாலராக இருந்த உயிரி பொருளாதாரம் தற்போது 150 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா தனது உயிரி பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல பாடுபட்டு வருகிறது.
நண்பர்களே,
உலகின் முக்கிய மருந்து தயாரிப்பு மையமாக, இந்தியா தற்போது தனது அடையாளத்திற்கு புதிய பரிமாணத்தை அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா பொது சுகாதாரத் துறையில் பல புரட்சிகர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது, மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடியில் மருந்துகளை வழங்குவது, நவீன மருத்துவ உள்கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். கோவிட் பெருந்தொற்றின் போது, இந்தியா நமது மருந்து சூழல் அமைப்பின் வலிமையை நிரூபித்தது.
நண்பர்களே,
இன்று, உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. நமது எதிர்கால சந்ததியினருக்கு, இது ஒரு பொறுப்பும், வாய்ப்பும் ஆகும். அதனால்தான் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஆராய்ச்சி சூழல் அமைப்பு உருவாக்கப்படுகிறது.
நண்பர்களே,
சமீபத்தில், ஒரே நாடு ஒரே சந்தா தொடர்பாக அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகளை எந்தச் செலவும் இன்றி எளிதாக அணுகுவதை அரசு இதன் மூலம் உறுதி செய்யும். 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் மையமாகவும், கண்டுபிடிப்பு மையமாகவும் இந்தியாவை உருவாக்க இந்த முயற்சிகள் பெரிதும் பங்களிக்கும்.
நண்பர்களே,
நமது மக்கள் ஆதரவு, ஆளுகை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை உலகிற்கு ஒரு புதிய மாதிரியை அளித்ததைப் போலவே, மரபணு ஆராய்ச்சித் துறையிலும் இந்தியாவின் தோற்றத்தை ஜீனோம் இந்தியா திட்டம் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஜீனோம் இந்தியா திட்டம் வெற்றி பெற மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்சேமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
The Genome India Project marks a defining moment in the country's biotechnology landscape. My best wishes to those associated with the project. https://t.co/7xN8U9y4Ds
— Narendra Modi (@narendramodi) January 9, 2025