Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி7 உச்சிமாநாட்டின் 9-வது பணிக்குழு அமர்வில் பிரதமர் ஆற்றிய துவக்க உரையின் தமிழாக்கம்


மாண்புமிகு பெருமக்களே,

 

அதிபர் ஜெலன்ஸ்கியின் உரையை நாம் இன்று கேட்டோம். நேற்று கூட அவரை நான் சந்தித்தேன். தற்போதைய நிலையை அரசியல் அல்லது பொருளாதாரப் பிரச்சினையாக நான் கருதவில்லை. இதை ஒரு மனிதாபிமான விஷயமாகக் கருதுகிறேன். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவிலான செயல்பாடு தான் இதற்கு ஒரே தீர்வு என்பதை ஆரம்பம் முதலே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் இந்தியா வழங்கும்.

 

மாண்புமிகு பெருமக்களே,

 

உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளம் தான் நமது பொதுவான நோக்கம். இன்றைய ஒருங்கிணைந்த உலகில், ஒரு பகுதியில் ஏற்படும் நெருக்கடி, இதர நாடுகளையும் பாதிக்கிறது. குறைவான வளங்களைப் பெற்றுள்ள வளர்ந்து வரும் நாடுகள்தான் இதனால் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. தற்போதைய உலகளாவிய சூழலில் இது போன்ற நாடுகள் உணவு, எரிசக்தி மற்றும் நெருக்கடியால் பெரும் சவாலை சந்தித்து வருகின்றன.

 

மாண்புமிகு பெருமக்களே,

 

அமைதியை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளால் இந்த பூசல்களை ஏன் தடுக்க இயலவில்லை என்ற கேள்வி எழுகிறது. கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள், 21-வது நூற்றாண்டின் அமைப்புமுறைக்கு ஏற்றவாறு இல்லை. நிகழ்காலத்தின் செயல்பாடுகளை அவை பிரதிபலிக்கவில்லை. அதனால்தான் ஐ.நா போன்ற மிகப்பெரிய அமைப்புகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது அவசியமாகிறது. உலகளாவிய தெற்கு பகுதிகளின் குரலாகவும் அது ஒலிக்க வேண்டும்.

 

அனைத்து நாடுகளின் இறையாண்மை, ஒருங்கிணைந்த பிராந்தியம், சர்வதேச சட்டம், ஐக்கிய நாடுகள் சபையை அனைவரும் மதிக்க வேண்டும். எந்த ஒரு பதற்றத்தையும் அமைதியான முறையில், பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது. சட்ட ரீதியான தீர்வு இருப்பின், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உணர்வுடன் தான் தனது நிலம் மற்றும் கடல்சார்ந்த பகுதி சம்பந்தமாக வங்கதேசம் உடன் இருந்த பூசலுக்கு இந்தியா தீர்வு கண்டது. போர், பதற்றம் மற்றும் நிலையில்லா தன்மை போன்று உலகம் இன்று சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு பல நூற்றாண்டுகள் முன்பே பகவான் புத்தர் தீர்வு அளித்துள்ளார். அதாவது பகையை, பகையால் தீர்க்க முடியாது. இணக்கத்தால் பகையைத் தீர்க்க முடியும் என்று பகவான் புத்தர் கூறினார்.

 

இந்த உணர்வுடன் அனைவரும் இணைந்து ஒன்றாக முன்னேற வேண்டும்.

 

நன்றி.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1926026

(Release ID: 1926026)

******

 

AD/RB/KRS