குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள 2.1 மில்லியன் மருத்துவர்கள், 3.5 மில்லியன் செவிலியர்கள், 1.3 மில்லியன் துணை மருத்துவ பிரிவினர், 1.6 மில்லியன் மருந்தாளுநர்கள் மற்றும் சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட கோடிக்கணக்கான பிற தரப்பினர் சார்பாக பிரமுகர்களை வரவேற்றார்.
தேசத் தந்தையைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், காந்திஜி உடல்நலத்தை ஒரு முக்கியமான அம்சமாகக் கருதினார், அவர் இந்த விஷயத்தில் ‘ஆரோக்கியத்தின் திறவுகோல்‘ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியதைச் சுட்டிக்காட்டினார். ஆரோக்கியமாக இருப்பது என்பது மனதையும் உடலையும் நல்லிணக்கத்துடனும் சமநிலையுடனும் வைத்திருப்பதாகும், அதாவது ஆரோக்கியம் தான் வாழ்க்கையின் அடித்தளம் என்று அவர் கூறினார்.
‘ஆரோக்கியமே இறுதி செல்வம், நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வேலைகளையும் சாதிக்க முடியும்‘ என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பிரதமர் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோய் நாம் எடுக்கும் முடிவுகளின் மையப் புள்ளியாக சுகாதாரம் இருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டியுள்ளது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். மருத்துவம் மற்றும் தடுப்பூசி விநியோகத்திலோ அல்லது நம் மக்களை தாயகம் அழைத்து வருவதிலோ சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்பை காலம் நமக்குக் காட்டியது என்று அவர் கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசியை உலகிற்கு வழங்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான முன்முயற்சியை எடுத்துரைத்த பிரதமர், தடுப்பூசி மைத்ரி முன்முயற்சியின் கீழ், உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா 300 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது என்றார்.
தொற்றுநோய்களின் போது மீள்திறன் என்பது மிகப்பெரிய படிப்பினைகளில் ஒன்றாகும் என்று கூறிய பிரதமர், உலகளாவிய சுகாதார அமைப்புகள் நெகிழ்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், தயாரிக்கவும், பதிலளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர். இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் இது மிகவும் முக்கியமானது. தொற்றுநோய்களின் போது நாம் பார்த்தது போல, உலகின் ஒரு பகுதியில் உள்ள சுகாதார பிரச்சினைகள் மிகக் குறுகிய காலத்தில் உலகின் மற்ற அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.
“இந்தியாவில், நாங்கள் ஒரு முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம்” என்று பிரதமர் குறிப்பிட்டார். சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துகிறோம், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கிறோம், அனைவருக்கும் மலிவு விலையில் சுகாதாரத்தை வழங்குகிறோம் என்று அவர் கூறினார். சர்வதேச யோகா தினத்தின் உலகளாவிய கொண்டாட்டம் முழுமையான ஆரோக்கியத்திற்கான உலகளாவிய விருப்பத்திற்கு சான்றாகும். இந்த ஆண்டு, 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அறியப்படும் சிறுதானியங்கள் அல்லது ‘ஸ்ரீ அன்னா‘ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன என ஆவர் கூறினார்.
முழுமையான ஆரோக்கியம் அனைவரின் மீள்திறனை மேம்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பிரதமர் கூறினார். குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவது இந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும். மேலும், ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துடன் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்துவது அதன் திறனைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும். பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய களஞ்சியத்தை உருவாக்குவது நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
சுகாதாரமும் சுற்றுச்சூழலும் இயற்கையாகவே இணைக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், போதுமான ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவை ஆரோக்கியத்தின் முக்கிய காரணிகள் என்று கூறினார். காலநிலை மற்றும் சுகாதார முன்முயற்சியைத் தொடங்குவதற்காக அவர்கள் எடுத்த நடவடிக்கைகளுக்காக அவர் பிரமுகர்களை பாராட்டினார். நுண்ணுயிர் எதிர் நடவடிக்கைகள் வலுவிழத்தல் (ஏ.எம்.ஆர்) அச்சுறுத்தலை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கவை என்று அவர் கூறினார்.
உலகளாவிய பொது சுகாதாரம் மற்றும் இதுவரையிலான அனைத்து மருந்து கண்டுபிடிப்பு முன்னேற்றங்களுக்கும் ஏ.எம்.ஆர் ஒரு பெரிய சவால் என்று பிரதமர் கூறினார். ஜி 20 சுகாதார பணிக்குழு ‘ஒரே ஆரோக்கியம்‘ என்ற திட்டத்திற்கு முன்னுரிமை அளித்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு – முழு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும் “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்” என்ற எங்கள் பார்வை. இந்த ஒருங்கிணைந்த பார்வை யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற காந்திஜியின் செய்தியைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சுகாதார முன்முயற்சிகளின் வெற்றியில் பொதுமக்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், நமது தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறினார். காசநோயை ஒழிப்பதற்கான எங்கள் லட்சியத் திட்டம் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார். ‘நி–க்ஷே மித்ரா‘ அல்லது ‘காசநோயை ஒழிப்பதற்கான நண்பர்கள்‘ ஆக மாற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம், இதன் கீழ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் நோயாளிகள் குடிமக்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
“இப்போது, 2030 ஆம் ஆண்டின் உலகளாவிய இலக்கை விட காசநோய் ஒழிப்பை அடைவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவையை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கை வலியுறுத்திய பிரதமர், தொலைதூரத்திலிருந்து வரும் நோயாளிகள் தொலை மருத்துவம் மூலம் தரமான கவனிப்பைப் பெற முடியும் என்பதால் எங்கள் முயற்சிகளை சமமாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்ற அவை ஒரு பயனுள்ள வழியாகும் என்றார். இந்தியாவின் தேசிய தளமான இ–சஞ்சீவனியை அவர் பாராட்டினார், இது இன்று வரை 140 மில்லியன் தொலை மருத்துவ ஆலோசனைகளை எளிதாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
மனித வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியாவின் கோவின் தளம் வெற்றிகரமாக எளிதாக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். 2.2 பில்லியனுக்கும் கூடுதலாக தடுப்பூசி டோஸ்களை வழங்குவதையும், உலகளவில் சரிபார்க்கக்கூடிய தடுப்பூசி சான்றிதழ்களை நிகழ்நேரத்தில் கிடைப்பதையும் இது நிர்வகிக்கிறது. டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய முன்முயற்சி பல்வேறு டிஜிட்டல் சுகாதார முன்முயற்சிகளை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கும் என்று அவர் கூறினார்.
“நமது கண்டுபிடிப்புகளை பொது நலனுக்காக வெளியிடுவோம். நிதி மோசடி செய்வதைத் தவிர்ப்போம். தொழில்நுட்பம் சமமாக கிடைக்க வழிவகை செய்வோம்” என்று பிரதமர் அறைகூவல் விடுத்தார். இந்த முன்முயற்சி உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளை சுகாதார பராமரிப்பு வழங்கலில் உள்ள இடைவெளியை நிரப்ப அனுமதிக்கும் என்றும், உலகளாவிய சுகாதார பாதுகாப்பை அடைவதற்கான நமது இலக்கை நோக்கி நம்மை ஒரு படி நெருக்கமாக அழைத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.
‘அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் நோயிலிருந்து விடுபடட்டும்‘ என்று சமஸ்கிருத சுலோகத்துடன் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 1950090)
ANU/SM/PKV/KRS
My remarks at the G20 Health Ministers Meeting being held in Gandhinagar. @g20org https://t.co/FI5j9fEu7G
— Narendra Modi (@narendramodi) August 18, 2023