ஜார்க்கண்ட் மாநிலம் கர்மாவில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் மத்திய மருத்துவமனையை அதன் நிலம் மற்றும் கட்டிடங்களுடன், புதிய மருத்துவ கல்லூரியை உருவாக்க ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு இலவசமாக வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட மற்றும் மேல்சிகிச்சை மருத்துவமனைகளை இணைத்து மருத்துவ கல்லூரியை உருவாக்க மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின்கீழ் இது செயல்படுத்தப்படும்.
செயல்பாட்டு உத்தி மற்றும் இலக்குகள்
மத்திய மருத்துவமனை அதன் நிலம் மற்றும் கட்டிடங்களுடன் மூன்று மாத காலத்திற்குள் ஜார்க்கண்ட் அரசுக்கு மாற்றப்படும். மாற்றம், பணியாளர்களை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட விதிமுறைகளுடன் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மாநில அரசுக்கிடையே கையெழுத்திடப்படும்.
முக்கிய தாக்கம்
நாட்டில் ஆண்டுதோறும் பயிற்சி பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவும். இந்தப் பிராந்தியத்தில் சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இது பயன்படும். அதன் மூலம் சாதாரண மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்கும்.
பயனாளிகள்
ஜார்க்கண்ட் மாநிலம் கர்மாவைச் சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இது பயனளிக்கும். அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வசதிகள் கிடைக்கும்.
பின்புலம்
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்பு சாரா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தனது மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூலம் மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் கர்மாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய (அதே வளாகத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய காசநோய் மருத்துவமனையும் இயங்குகிறது) மருத்துவமனையை அமைத்துள்ளது. இதன் மூலம் மைக்கா சுரங்கம், பீடித் தொழிலாளர்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அந்த இடத்தில் புதிய மருத்துவ கல்லூரியை உருவாக்குவதற்காக கர்மா மத்திய மருத்துவமனையை அதன் நிலம் மற்றும் கட்டிடங்களுடன் இலவசமாக வழங்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில அரசு கருத்துரு ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
***