பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜம்முவில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை தற்போதைக்கு பழைய அரசு பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியில் 2016 -2017 கல்வி ஆண்டில் அமைக்க இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தற்காலிக வளாகத்தில் முதல் நான்கு ஆண்டுகளான 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்துக்கு ரூ.61.90 கோடி செலவு பிடிக்கும். இந்த ஆண்டு மேலாண்மை பட்ட மேற்படிப்பு பட்டயப் படிப்பிற்கு 54 இடங்கள் இந்த நிறுவனத்தில் இருக்கும். இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக உயர்ந்து நான்காவது ஆண்டின் இறுதியில் 120 ஆக உயரும். இதனிடையே இந்த நிறுவனத்திற்கான வளாகத்தை ஜம்முவிலும் வெளி வளாகத்தை காஷ்மீர் மண்டலத்திலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர வளாகங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து வளாகம் அமைக்கும் பணிகள் தொடங்கும்.
இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஜம்மு சங்கத்தை 1860 சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து. இந்த சங்கம் ஜம்மு இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தை நிர்வகிக்கும் இச்சங்கத்தின் ஆளுநர்கள் வாரியம் மத்திய அரசால் அமைக்கப்படும். இந்த வாரியம் நிறுவனத்தை நிர்வகிப்பதுடன் இதனை உருவாக்குதல், செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கும் பொறுப்பு வகிக்கும்.
இந்த நடவடிக்கை பிரதமர் ஜம்மு காஷ்மீருக்கு அறிவித்த மேம்பாட்டு திட்டத்தொகுப்பில் அடங்கும். இந்த நிறுவனம் ஜம்முவில் திறக்கப்பட உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீநகர் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தை நவீன மயமாக்குதல், காஷ்மீர், ஜம்மு மண்டலங்கள் ஒவ்வொன்றிலும் புதிய எய்ம்ஸ் நிறுவனங்களை துவக்குதல். ஆகிய திட்டங்களுடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை உயர்தரமான வாழ்விடம் மற்றும் கல்வி வாய்ப்பு கிடைக்கும் இடமாக மாற்றுவதற்கான தேவைகளைச் சந்திக்கும்.
பின்னணி:
இந்திய மேலாண்மையியல் நிறுவனங்கள் மிகச்சிறந்த நிர்வாகவியல் கல்வியை உலக தரத்திற்கு ஈடாக வழங்கக்கூடிய நிறுவனங்களாகும். மேலாண்மையில் கல்வியினை அது சார்ந்த அறிவுத்துறைகளிலும் கல்விப் பயிற்சியை இவை வழங்குகின்றன.
தற்போது நாட்டில் 19 இந்திய மேலாண்மையில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 13 கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன. அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, இந்தூர், கோழிக்கோடு, ஷில்லாங், ராஞ்சி, ராய்ப்பூர், ரோட்டக், காசிபூர், திருச்சி, உதய்ப்பூர். மேலும் ஆறு இந்திய மேலாண்மையில் நிறுவனங்கள் 2015ம் ஆண்டிலிருந்து அமிர்தசரஸ், சிர்மார், நாக்பூர், புத்த கயா, சம்பல்பூர், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் செயல்பட தொடங்கி உள்ளன