ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு. இட்சுனோரி ஒனோடேரா இன்று (20.08.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
சந்திப்பின் போது, பிரதமர் திரு. மோடி தாம் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பிருந்தே ஜப்பான் உடனான தனது நீண்ட தொடர்புகளை நினைவுகூர்ந்தார். சமீப ஆண்டுகளாக இந்தியாவுக்கும் – ஜப்பானுக்கும் இடையே உள்ள சிறப்பு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய கூட்டாண்மை விரிவுபடுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் – ஜப்பானுக்கும் இடையேயான உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக உள்ளது என்று பிரதமர் திரு. மோடி கூறினார். இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு பாதுகாப்பு பேச்சு வார்த்தை அமைப்புகள் வலுப்படுத்தப்படுவதை வரவேற்ற பிரதமர் இந்தியாவுக்கும் – ஜப்பானுக்கும் இடையேயான ஆயுதப்படைகளின் மேம்பட்ட இணைப்புகள் குறித்தும் மகிழ்ச்சித் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஜப்பான் பிரதமர் திரு. ஷின்சோ அபே, இந்தியாவில் வெற்றிகரமாக மேற்கொண்ட பயணத்தை மிகவும் அன்புடன் நினைவுகூர்ந்த பிரதமர் திரு. மோடி இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் பயணம் மேற்கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்தார்.
*****