Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மன்றத்தின் முழுமையான அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற  சர்வதேச பொருளாதார மன்றத்தின்  முழுமையான அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை


செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற சர்வதேச பொருளாதார மன்றத்தின் (SPIEF)முழுமையான அமர்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். கூட்டத்தின் ஆய்வுப் பொருள் – “உலகளாவிய தளத்தில் புதிய சமநிலையை எட்டுவது” என்பதாக இருந்தது.

தனது உரையின்போது, அழகான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற SPIEF கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு அளித்தமைக்காக அதிபர் புதினுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்திய – ரஷிய உறவுகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அது நல்ல உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்வதாகத் தெரிவித்தார். பரஸ்பர நம்பிக்கை என்பதுதான் உறவின் அடிப்படையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 70 ஆண்டுகளாக இந்திய – ரஷிய உறவுகள், நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றும்,

உலகில் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் இந்த உறவு ஆழமாக வளர்ந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

1.25 பில்லியன் மக்களின் பிரதிநிதியாக SPIEF கூட்டத்தில் தாம் பங்கேற்றிருப்பதாக பிரதமர் கூறினார். உலக நாடுகளின் கவனம் ஆசியாவின் மீது உள்ளது என்றும், அதனால் இயல்பாக அவற்றின் கவனம் இந்தியாவின் மீது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமராக செயலாற்றி வரும் கடந்த மூன்று ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் மத்திய அரசு முன்னேற்றகரமான முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் கூறினார். இப்போது எங்களின் ஆண்டு GDP வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“குறைந்தபட்ச அரசு தலையீடு, அதிகபட்ச நிர்வாகம்” மற்றும் “சிவப்பு நாடா அணுகுமுறைக்குப் பதிலாக சிவப்புக் கம்பள அணுகுமுறை” என்பவை இந்தியாவில் நிர்வாக சீர்திருத்தங்களின் அடிப்படையாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அரசியல் உறுதியும், தெளிவான தொலைநோக்கு சிந்தனையும் சீர்திருத்தங்களுக்கு அவசியமாகின்றன என்று அவர் குறிப்பிட்டார். நிர்வாகத் துறையும் துடிப்புடன் செயல்பட்டு ஆட்சித் தலைமையின் எண்ணங்களுடன் இயைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு வந்துவிடும் என்றும், அதனால் நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி முறை அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

தமக்கு முன்னதாக உரையாற்றிய அதிபர் புதினின் கருத்துகளை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி, தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றப் போகிறது என்று கூறியதுடன், டிஜிட்டல் இந்தியா முயற்சி பற்றியும் குறிப்பிட்டார். சமூகத்தில் “டிஜிட்டல் இடைவெளி” வேரூன்ற அனுமதித்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

நிதி பங்கேற்பு – மற்றும் ஜன்தன், ஆதார், மொபைல் (JAM) ஒருங்கிணைப்பு என்ற அரசின் முயற்சிகளைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். மத்திய அரசு 1200 சட்டங்களை ரத்து செய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

“தொழில் செய்வதை எளிதாக்குதல்” – முயற்சிக்காக மத்திய அரசு நிலையில் மட்டும் 7000 சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் போட்டிநிலையை எதிர்கொள்ளுதலுக்கான முயற்சிகள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு உகந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்கான முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதில் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகமும், ஆங்கில பயன்பாடும் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

“புதிய இந்தியா” என்ற தொலைநோக்கு சிந்தனையில் , இந்தியாவின் 800 மில்லியன் வலுவான திறன்மிக்க இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிப்பதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் அவர். இந்த விஷயத்தில், செவ்வாய் கிரகத்துக்கான பயணம் என்ற இந்தியாவின் முயற்சி முதலாவது முயற்சி என்று குறிப்பிட்டார். வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களைக் கொண்டதாக புதிய இந்தியா இருக்கும் என்றும், தொழில்திறன் பெற்ற மனிதவள தேவைகளை உலக அளவில் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவில் நகரமயமாக்கல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மெட்ரோ நெட்வொர்க், கழிவு மேலாண்மை உள்ளிட்ட நவீன கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன என்றும் பிரதமர் கூறினார். ரயில்வே வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமாக்குதல் பற்றியும் அவர் பேசினார். கங்கை நதியை சுத்தம் செய்வதற்கான முயற்சி பெற்றியும் பிரதமர் கூறினார். முதலீட்டுக்கு பெருமளவு வாய்ப்பு உள்ளதைக் காட்டுபவையாக இந்த அம்சங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாயத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை மேலோட்டமாகக் குறிப்பிட்ட பிரதமர், இயற்கை வேளாண்மையும், உணவு பதப்படுத்தலும் முதலீட்டுக்கான துறைகளாக உள்ளன என்று கூறினார். உற்பத்தித் துறையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சாதனங்கள் உற்பத்தி ஆகியவை வெளிநாட்டு முதலீட்டுக்கான முக்கியமான துறைகளாக உள்ளன என்றார்.

சேவைத் துறையைப் பொருத்த வரையில், சுற்றுலாவும், விருந்தோம்பல் துறையும் அதிக முன்னுரிமை பெறும் என்று குறிப்பிட்டார்.

நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வ வேதம் – 5000 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கைக்கு அர்ப்பணித்தல் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இயற்கையை அழிப்பதன் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல – அது ஒரு குற்றச் செயல் – என்றும், இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் மதிப்பதன் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி என்றும் கூறினார். 2022 ஆம் ஆண்டுக்குள்175 கிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான மின் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்த அவர், அனல் மின் நிலையங்களைவிட அதிகமான அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார உற்பத்தி நிலையங்களை இந்தியா அமைத்து வருகிறது என்று தெரிவித்தார். பருவநிலை குறித்த விஷயத்தில் இந்தியா பொறுப்புமிக்க தேசமாக இருக்கும் என்றும், குறைபாடுகள் இல்லாத, குறைபாடற்ற உற்பத்தியுள்ள நிலையை எட்டி, சுற்றுச்சுழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்படும் என்றும் கூறினார். LED பல்புகள் விநியோகம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே பெருமளவு மின்சார சேமிப்பை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்கு வானம்தான் எல்லை என்றும் கூறினார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழுத்தமான அழைப்பு விடுத்தார்.

***