பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 செப்டம்பர் 2023 அன்று மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு படியாகும்.
கொடியசைத்து தொடங்கப்படும் புதிய ரயில்கள்:
ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இந்த ஒன்பது ரயில்கள் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.
இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இந்த வழித்தடத்தில் தற்போதுள்ள அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது, ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும். ஹைதராபாத் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.5 மணி நேரம் வேகம்; நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான பயண நேரத்தைக் காட்டிலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாக சென்றடையும்; ராஞ்சி – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாட்னா – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜாம்நகர் – அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம்; மற்றும் உதய்பூர் – ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் அரை மணி நேரம்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி – மதுரை – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் மற்றும் திருப்பதி யாத்திரை மையத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும்.
இந்த வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவது நாட்டில் ரயில் சேவையின் புதிய தரத்தை பிரதிபலிக்கும். உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த ரயில்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், மாணவர் சமூகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயண வழிமுறைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியப் படியாக இருக்கும்.
***
ANU/AP/DL