Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் முழுமையான உரை


தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களே, முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களே, எனது சக அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே, சென்னை ஐஐடி தலைவர், நிர்வாக அவை உறுப்பினர்கள், இயக்குநர், இந்த மகத்தான நிறுவனத்தின் பேராசிரியர்கள், மதிப்புமிகு விருந்தினர்கள் மற்றும் பொன்னான எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் எனது இளம் நண்பர்களே, இன்று நான் இங்கே வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகும்.

நண்பர்களே,

எனக்கு முன்னால் சிறிய இந்தியா, புதிய இந்தியாவின் உணர்வு என இரண்டும் உள்ளன.  திறனும், துடிப்பும், ஆக்கமும் இங்கே உள்ளன.  உங்களின் கண்களில் எதிர்காலக் கனவுகளை என்னால் காண முடிகிறது, உங்கள் கண்களில் இந்தியாவின் விதியை என்னால் காண முடிகிறது

நண்பர்களே,

     பட்டம் பெறுவோரின் பெற்றோர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்களின் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் கற்பனை செய்து பாருங்கள். உங்களின் வாழ்க்கையில் இந்த இடத்திற்குக் கொண்டு வர அவர்கள் போராடி இருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். உங்களின் சிறகுகளை அவர்கள் உங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதனால்தான் நீங்கள் பறக்க முடிகிறது. இந்தப் பெருமிதம் உங்களது ஆசிரியர்களின் கண்களிலும் பிரதிபலிக்கிறது. அவர்களின் அயராத முயற்சியால் நல்ல பொறியாளர்களை மட்டுமின்றி சிறந்த குடிமகன்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

     உதவியாக இருக்கும் ஊழியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்த நான் விரும்புகிறேன். உங்களுக்கு உணவு தயாரிப்பதில், வகுப்பறைகளைத் தூய்மையாக பராமரிப்பதில், விடுதிகளைத்    தூய்மையாக வைப்பதில் அமைதியாக இவர்கள் பின்னணியில் இருக்கிறார்கள். உங்களின் வெற்றியில் இவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. மேலும் உரையைத் தொடர்வதற்கு முன்னால் உங்களின் ஆசிரியர்களை, பெற்றோர்களை, உதவி செய்யும் ஊழியர்களைப் பாராட்டி எழுந்து நின்று கரவொலி எழுப்புமாறு எனது மாணவ நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

     இது மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனமாகும். இங்கே மலைகள் நகர்கின்றன, ஆறுகள் தேங்கியிருக்கின்றன என்று என்னிடம் சொல்லப்பட்டது. நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம். இது தனி முக்கியத்துவம் கொண்டது. உலகின் மிகத் தொன்மை மொழியான தமிழின் பிறப்பிடமாகும். மேலும் இந்தியாவின் புதிய மொழிகளில் ஒன்றான, ஐஐடி சென்னை மொழியின் பிறப்பிடமாகவும் உள்ளது. நீங்கள் இழப்பதற்கு நிறைய உள்ளது. நிச்சயமாக நீங்கள் சாரங்கையும், சாஸ்த்ராவையும் இழப்பீர்கள். உங்கள் உடன்பயின்றவர்களை இழப்பீர்கள். உங்களால் இழக்க முடியாத சில விஷயங்களும் இருக்கின்றன. மிகக் குறிப்பாக இப்போது நீங்கள் அச்சமின்றி உயர்தரக் காலணியை வாங்க முடியும்.

நண்பர்களே,

     நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். தனித்துவ வாய்ப்புகள் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கும் தருணத்தில், இத்தகைய அருமையான கல்லூரியிலிருந்து நீங்கள் பட்டம் பெற்று வெளியே செல்கிறீர்கள். அமெரிக்காவில் நான் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் இப்போதுதான் தாயகம் திரும்பியிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது அரசுத் தலைவர்கள், வணிகத் தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் என பலரை நான் சந்தித்தேன். எங்களின் விவாதங்களில் பொதுவான ஒரு இழை இருந்தது. புதிய இந்தியா பற்றிய நம்பிக்கையாக அது இருந்தது. இந்திய இளைஞர்களின் திறன் மீதான நம்பிக்கையாக அது இருந்தது.

நண்பர்களே,

     உலகம் முழுவதும் இந்திய சமூகம் தனக்கான முத்திரையைப் பதித்துள்ளது.  குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில்.   இந்த சக்தியை யார் அளித்தது?   இதில் பெரும்பாலானவர்கள்  உங்கள் ஐஐடி-யின் சீனியர்கள்.  நீங்கள்  இந்தியக் குறியீட்டை உலக அளவில்  வலுவாக உருவாக்கியிருக்கிறீர்கள். இந்த நாட்களில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய தேர்வு எழுதும் இளம் அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடுகிறேன். ஐஐடி பட்டதாரிகள் பலர் உங்களையும், என்னையும் வியப்படையச் செய்வார்கள்! இவ்வாறு நீங்களும் கூட மிகவும் மேம்பட்ட இடத்திற்கு இந்தியாவைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். கார்ப்பரேட் உலகத்திற்கு செல்லும் போது ஐஐடியில் படித்த நீங்கள் பல பல வாய்ப்புகளைக் காண்பீர்கள். இந்த வகையில் நீங்களும் இந்தியாவிற்குக் கூடுதல் வளம் சேர்க்கிறீர்கள்.

நண்பர்களே,

     புதிய கண்டுபிடிப்பு, கூட்டு உழைப்பு, தொழில்நுட்பம் ஆகிய மூன்று முக்கிய தூண்களின் மீது 21 ஆம் நூற்றாண்டின் அடித்தளம் அமைந்திருப்பதை நான் காண்கிறேன். இவை ஒன்றுக்கு ஒன்று உதவி செய்பவை ஆகும்.

நண்பர்களே,

     சற்று நேரத்திற்கு முன் சிங்கப்பூர்- இந்தியா ஹேக்கத்தானிலிருந்து நான் வந்தேன். இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து மூன்று புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். பொதுவான பிரச்சனைகளுக்கு அவர்கள் தீர்வு கண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சக்தியை ஒரே திசையில் அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் வேறுபட்ட பின்னணியிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்கள் வேறு வேறானவை. ஆனால் அவர்கள் உருவாக்கும் தீர்வுகள் இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் மட்டுமின்றி உலகத்திற்கும் உதவ வேண்டும். இதுதான் புதிய கண்டுபிடிப்பின் கூட்டு உழைப்பின், தொழில்நுட்பத்தின் சக்தியாகும். அது தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும்.

5 லட்சம் டாலர் பொருளாதாரமாக வளரும் ஆர்வத்தை இன்று இந்தியா கொண்டிருக்கிறது.  உங்களின் புதிய கண்டுபிடிப்பும் தொழில்நுட்பத்தின் மீதான வேட்கையும் இந்தக் கனவுக்கு  ஊக்கமாக இருக்கும்.  மிகுந்த போட்டிப் பொருளாதாரமாவதற்கு இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடாக இது இருக்கும்.

நண்பர்களே,

     பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு நிறுவனம் 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கும், முன்னேற்றங்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு சென்னை ஐஐடி முதன்மை உதாரணமாகும். சிறிது நேரத்திற்கு முன் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிப் பூங்காவை நான் பார்வையிட்டேன். நாட்டிலேயே இது முதலாவது முயற்சியாக இருக்கிறது. இன்று நான் அதிகபட்ச உயிர்த்துடிப்புள்ள புதிய சூழல் முறையைக் கண்டேன். இதுவரை இங்கு 200-க்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் சிலவற்றைக் காணும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மின்சார வாகனம், பொருள்களின் இணைவு, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு என்பது போன்ற முயற்சிகளை நான் கண்ணுற்றேன்.  இந்தப் புதுமைத் தொழில்கள் இந்தியக் குறியீடுகளில் தனித்தன்மையை உருவாக்கும். இவை எதிர்காலத்தில் உலகச் சந்தைகளில் இவற்றுக்கான இடத்தைப் பெறும்.

நண்பர்களே,

     இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதாரத்தையும் பயன்பாட்டையும் கலந்த மகத்தானவை. இந்தப் பாரம்பரியத்தில் பிறந்தது சென்னை ஐஐடி. இங்குள்ள மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் கடுமையான பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு அனைவருக்கும் எளிதில் கிடைக்கின்ற, பயன்படுகின்ற தீர்வுகளைக் கண்டுள்ளனர். இங்குள்ள மாணவர்கள் புதிய தொழில் முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு அறைகளிலிருந்து குறியீடுகளை எழுதுகிறார்கள். அதுவும் உணவோ, உறக்கமோ இல்லாமல் என்று எனக்கு சொல்லப்பட்டது. பசி, தூக்கமின்மை என்பதைத் தவிர்த்து வரும் காலத்தில் புதியன கண்டுபிடிக்கும் உணர்வும், திறமையைப் பயன்படுத்துவதும் தொடரும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

     நமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான சூழலை உருவாக்க  நாங்கள் பணியாற்றி வருகிறோம். எந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள், புதிய தொழில்நுட்பங்கள் போன்றவை பள்ளிக்கூட நிலையிலிருந்து இப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன.  பல நிறுவனங்களில்  அடல் புதிய கண்டுபிடிப்பு முயற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

     உங்களுடையதைப் போன்ற கல்வி நிறுவனத்திற்கு மாணவர்கள் வரவும் புதிய கண்டுபிடிப்புகளில் பணியாற்றவும் விரும்பும் நிலையில் பல கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ள அடல் புதிய கண்டுபிடிப்பு முயற்சி மையங்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இத்தகைய சவாலை சந்திக்கும் போது, உங்களுக்கு உதவி செய்ய தொடங்குக இந்தியா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவுவதோடு அவற்றை சந்தைப்படுத்துவதற்கும் வழி கண்டறியும். மேலும் கூடுதலாக ஆராய்ச்சி, மேம்பாட்டை செழுமைப்படுத்த பிரதமரின் ஆராய்ச்சி படிப்புதவி திட்டத்தையும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

நண்பர்களே,

     இத்தகைய அயராத முயற்சிகளின் பயனாக இந்தியா இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமைத் தொழில்கள் கொண்ட மூன்று நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. புதுமைத் தொழில்களுக்கான முயற்சிகளில் இந்தியாவின் சிறந்த பங்களிப்பு என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்களுக்கும், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் கூட அதிகாரமளித்தலை இது அதிகரித்துள்ளது. புதுமைத் தொழில்களுக்கான உலகில் உங்களின் குறியீட்டு மொழியை விட நீங்கள் பேசும் மொழியின் விஷயங்கள் மிகவும் குறைவாக உள்ளன. உங்களின் குடும்பப் பெயருக்கான சக்தி ஒரு பொருட்டே அல்ல. உங்களுக்கான பெயரை நீங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். அது என்னவென்றால் உங்களின் தகுதி.

நண்பர்களே,

     ஐஐடிகளுக்கான தயாரிப்பை நீங்கள் முதலில் எப்போது தொடங்கினீர்கள் என்பது நினைவிருக்கிறதா? எவ்வளவு கடினமான விஷயங்களை சந்தித்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனால் உங்களின் கடுமையான உழைப்பு சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியிருக்கிறது. உங்களுக்குப் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவை அனைத்தும் எளிமையானவை அல்ல. ஆனால் உங்களின் முதல் காலடியை எடுத்து வைப்பதற்காகக் காத்திருக்கும் போது மட்டும்தான் அது சாத்தியமில்லாதது போல் தோன்றும். அதற்காக மனம் தளர வேண்டாம். தளையாக உள்ளதைத் தகருங்கள். ஓரடியிலிருந்து இன்னொரு அடி வைத்து நீங்கள் முன்னேறும் போது பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும். மனிதகுல முயற்சியின் அழகு, சாத்தியப்பாடுகளில்தான் உள்ளது. எனவே கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். நீங்களாகவே சவாலை எதிர்கொள்ளுங்கள்.  இதுதான் உங்களை நீங்களே சிறந்தவராக்கிக் கொள்ளும் வழியாகும்.

நண்பர்களே,

     இந்தக் கல்வி நிறுவனத்திலிருந்து நீங்கள் வெளியேறும் போது உங்களுக்கு மகத்தான, ஈர்ப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நீங்கள் எங்கே பணியாற்றுகிறீர்கள், எங்கே வாழ்கிறீர்கள் என்பது பொருட்டல்ல; உங்கள் தாய்நாட்டின் தேவைகளை மனதில் கொள்ளுங்கள்.  உங்களின் பணி, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு எவ்வாறு உங்களின் தாய்நாட்டிற்கு உதவுகிறது என்று எண்ணிப் பாருங்கள்.  இதுவும் கூட உங்களின் சமூகப் பொறுப்புதான். இது உங்களின் சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, ஆழமான தொழில் சிந்தனையை உருவாக்குவதுமாகும்.

     நன்னீர் உறிஞ்சப்படுவதைக் குறைப்பதற்கு நமது வீடுகளில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்ய மிகவும் குறைந்த செலவில் புதிய வழிகளை நீங்கள் கண்டறிவீர்களா? ஒரு சமூகமாக, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேற இன்று நாம் விரும்புகிறோம்.  சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக, அதே மாதிரி பயன்படுகின்ற ஆனால், அதேமாதிரி பாதகம் செய்யாததாக எது இருக்கும்? இதற்குத்தான் உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.

     வரும் காலத்தில் பல நோய்கள் மக்கள் தொகையின் பெரும்பகுதியினரை பாதிக்கும். இவை பாரம்பரியமாக வந்த தொற்று நோய்கள் அல்ல. இவை உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் வகை நீரிழிவு நோய், உடல் பருமன், மன உளைச்சல் போன்ற வாழ்க்கை முறை நோய்களாக இருக்கும். தகவல் அறிவியல் துறையின் மதிப்பீட்டோடு இத்தகைய நோய்களின் தகவல்களையும், தொழில்நுட்பங்களையும் இணைத்துத் தீர்வுகளைக் காண வேண்டும்.

     தகவல் அறிவியல், நோய் கண்டறிதல், நடத்தை அறிவியல், மருந்து ஆகியவற்றோடு தொழில்நுட்பம் இணையும் போது வியப்பூட்டும் விளைவுகள் உருவாகும். இவற்றைப் பரவலாக்குவதைத் தடுக்கும் விஷயங்கள் ஏதாவது இருக்கின்றனவா? கருத்து வேறுபட அவசியமான விஷயங்கள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்குத் தொழில்நுட்பங்கள் பதிலளிக்க இயலுமா? ஐஐடி மாணவர்கள் இதனை சவாலாக எடுத்துக் கொள்வார்களா?

     உடல் தகுதி, உடல் ஆரோக்கியம் ஆகியவை பற்றி நான் பேசுகிறேன். ஏனெனில் உங்களைப் போன்ற உயர்ந்த சாதனையாளர்கள், பணியில் மிகவும் ஆழ்ந்து விடுவதால் சொந்த உடல்நலனைப் புறக்கணிக்கும் ஆபத்து உள்ளது. எனவே உடல் தகுதி இந்தியா இயக்கத்தில் நீங்கள் தீவிரமாகப் பங்கேற்க நான் வலியுறுத்துகிறேன். இது தனிப்பட்ட முறையிலான உடல் தகுதி குறித்த கவனம் மட்டுமின்றி சுகாதாரத் துறையில் புதிய கண்டுபிடிப்புக்கும் உதவும்.

நண்பர்களே,

     மக்களில் இரண்டு வகையினர் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வாழ்பவர்கள், வெறுமனே இருப்பவர்கள். நீங்கள் இருப்பவர்களாக விரும்புகிறீர்களா? அல்லது முழுமையான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்க விரும்புகிறீர்களா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். காலாவதி ஆன தேதிக்குப் பிறகு ஓராண்டு கூட கடந்திருக்கலாம். அந்த பாட்டில் இருக்கிறது. அதன் அட்டைப் பெட்டி கூட கவர்ச்சிகரமாக இருக்கலாம். அதற்குள்ளே மருந்தும் இருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? வாழ்க்கை இப்படி இருக்கலாமா? வாழ்க்கை என்பது உயிரோட்டமாக, அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். உண்மையான வாழ்க்கைக்கு அறிதல், கற்றல், புரிந்து கொள்ளுதல், மற்றவர்களுக்காக வாழ்தல் என்பவை சிறந்த செயல்முறைகளாகும்.

சுவாமி விவேகானந்தர் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார், “மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்”.

நண்பர்களே,

     உங்களின் பட்டமளிப்பு விழா தற்போதைய படிப்பின் நிறைவைக் குறிக்கிறது. ஆனால் இது உங்களது கல்விக்கான முடிவு அல்ல. கல்வியின் கற்றலும் தொடர்ச்சியான நடைமுறை. நாம் வாழும் காலம் வரை கற்கிறோம். பிரகாசமான எதிர்காலத்திற்காக மனித குலத்தின் நலனுக்கான அர்ப்பணிப்புக்காக உங்களை நான் மீண்டும் வாழ்த்துகிறேன்.

நன்றி, மிக்க நன்றி.