சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் திரு நரேந்திர மோடி சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
2019 பொதுத் தேர்தலுக்குப் பின் சென்னைக்குத் தமது முதலாவது பயணம் இது என்று பிரதமர் பேசும்போது கூறினார். சென்னை ஐஐடி-யின் வைரவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நான் வந்துள்ள போதும், என்னை வரவேற்க பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடன்பட்டுள்ளேன்.
அண்மையில் எனது அமெரிக்கப் பயணத்தில் இந்திய சமூகத்தினரிடையே நான் தமிழில் உரையாற்றியபோது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறியதை, அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிட்டிருந்தன என்று அவர் கூறினார்.
எனது அமெரிக்கப் பயணத்தின் போது, மகத்தான எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை உலகம் பார்த்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவை மகத்தான தேசமாக்குவது மட்டும் நமது பொறுப்பாக இல்லாமல், உலக சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதையும் கூட, நாம் ஏற்க வேண்டியுள்ளது.
இதனை மத்திய அரசால் மட்டும் செய்து விட முடியாது என்று கூறிய திரு மோடி, 130 கோடி இந்தியர்களால் மட்டும்தான் இது முடியும் என்ம் கூறினார். ஏழையோ, பணக்காரரோ, நகரவாசியோ, கிராமவாசியோ, இளைஞரோ, முதியவரோ யாராக இருந்தாலும், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருவரின் முயற்சியால்தான் இதனை சாத்தியமாக்க முடியும்.
பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் பலவற்றை நாம் வெற்றிகரமாக சாதித்திருக்கிறோம் என்றும், அதே வழியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாட்டிலிருந்து நாம் விரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிளாஸ்டிக்கை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று நான் விரும்புவதாக சிலர் தவறுதலாகப் பொருள் கூறி வருகிறார்கள். நான் அவ்வாறு கூறவில்லை. நான் கூறியது என்னவென்றால், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாட்டிலிருந்து ஒழிக்க விரும்புவதாகத்தான் நான் கூறினேன். இந்த வகை பிளாஸ்டிக்குகளை ஒருமுறை மட்டும்தான பயன்படுத்த முடியும், அவை பிற்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி நாம் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பாத யாத்திரைகள் மூலம் காந்தியின் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் என்னை வரவேற்க வந்திருக்கும் உங்களுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று அவர் கூறினார்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெறும் சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் 2019 நிகழ்விலும் அவர் உரையாற்றவுள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில் புதிய தொழில்கூடங்களை அவர் பார்வையிடுவார். இந்த நிறுவனத்தின் மாணவர்கள் செயல் மையத்தில் அவர் பட்டமளிப்பு உரை நிகழ்த்துவார்.
Speaking at Chennai Airport. Watch. https://t.co/7qWBSkMO5R
— Narendra Modi (@narendramodi) September 30, 2019