நாட்டின் பெருநிலப்பகுதிக்கும் (சென்னைக்கும்) போர்ட் பிளேர் மற்றும் லிட்டில் அந்தமான், கார் நிகோபார், ஹேவ்லாக், கமோர்ட்டா, கிரேட் நிகோபார் தீவுகள் ஆகியவற்றுக்கும் இடையே தனியாக கடலுக்கு அடியிலான ஒளியிழை கேபிள் அமைத்து நேரடி தொலைத் தொடர்பு இணைப்பு ஏற்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1102.38 கோடி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஐந்தாண்டுகளுக்கான நடைமுறை செலவினமும் அடங்கும். இந்தத் திட்டம் 2018 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்புதலை அடுத்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு உரிய அகண்ட அலைக்கற்றை மற்றும் தொலைத் தொடர்பு இணைப்பு கிடைப்பதையடுத்து மின்னணு நிர்வாக திட்டங்களும், மின்னணு அடிப்படையிலான வர்த்தக மற்றும் தொழில் வசதிகளும் உருவாக்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு அறிவுப் பகிர்வு, வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்தல் போன்ற ஆதாரங்களை இந்தத் திட்டம் வழங்குவதுடன், டிஜிட்டல் இந்தியா நெடுநோக்கத்தை நிறைவேற்றவும் உதவும்.
பின்னணி
அந்தமான் நிகோபார்த் தீவுகள் இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வங்கக்கடலில் அமைந்துள்ள சங்கிலித் தொடர் போன்ற அந்தமான் நிகோபார் தீவுகளின் புவியியல் அமைப்பும், அமைவிடமும் இந்தியாவின் கிழக்கு கடல்படுகைக்கு பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கென இந்தத் தீவுகளுக்கு பத்திரமான, நம்பத்தகுந்த, வலுவான, கட்டுப்படியாகக்கூடிய தொலைத் தொடர்பு வசதிகளை வழங்குவது மிகவும் அவசியமானது. மேலும் இந்தத் தீவுப் பகுதிகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு இது மிகவும் இன்றியமையாததாகும்.
தற்போது நாட்டின் முக்கிய பகுதிக்கும், அந்தமான் நிக்கோபார்த் தீவுகளுக்கும் இடையே தொலைத் தொடர்பு இணைப்பு செயற்கைக்கோள் வழியாக வழங்கப்படுகிறது. ஆனால், இதற்குக் கிடைக்கும் அலைக்கற்றை 1 ஜி.பி.எஸ். அளவு மட்டுமே. செயற்கைக்கோள் அலைக்கற்றை செலவு அதிகம் பிடிக்கக்கூடியது. செயற்கைக்கோள் இணைப்பு வசதி அளவு குறைவானது, எதிர்காலத் தேவைகளை அதன்மூலம் மட்டும் சந்திக்க இயலாது. மேலும், அவசரகாலத்தில் ஒரு நடைமுறை பழுதடையும் நிலையில் பயன்படுத்த மற்றொன்று இல்லாத நிலைமை உள்ளது. அலைக்கற்றை குறைவு, தொலைத் தொடர்பு இணைப்புக்குறைவு ஆகியன இந்தத் தீவுகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை பாதிக்கின்றன. எனவே, இந்திய முக்கியப் பகுதிக்கும், அந்தமான் நிக்கோபார்த் தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் ஒளியிழை கேபிள் இணைப்பு மிகவும் அவசியமாகிறது. எதிர்காலத் தேவைகளை சந்திப்பதற்கு இது ஒன்றே வழிவகையாகும்.