சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தைப் புது தில்லி செங்கோட்டையில் பிரதமர் திரு நரேந்திர மோடி 23 – 1 – 2019 அன்று திறந்து வைக்கிறார் . நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவம் குறித்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைப்பதன் அடையாளமாகக் கல்வெட்டினை அவர் திறந்து வைப்பார். இந்த அருங்காட்சியகத்தைப் பிரதமர் பார்வையிடுவார்.
ஜாலியன் வாலாபாக் மற்றும் முதலாம் உலகப் போர் குறித்த யாத்- இ – ஜாலியன் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிடுவார் . புதுதில்லி செங்கோட்டையில் இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போர் 1857 குறித்த அருங்காட்சியகத்தையும் இந்தியக் கலைகள் குறித்த த்ரிஷ்ய கலா அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிடுவார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவம் குறித்த அருங்காட்சியகத்தில் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் விரிவான வரலாற்று அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஐஎன்ஏ தொடர்பான பல்வேறு கலைப் பொருட்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நேதாஜியால் பயன்படுத்தப்பட்ட மர நாற்காலி, வாள் உள்ளிட்ட பல பொருட்களும் பதக்கங்களும் பதவிப் பட்டைகளும் (பேட்ஜ்கள்) சீருடைகளும் ஐஎன்ஏ தொடர்பான இதர கலைப்பொருட்களும் இதில் அடங்கும்.
பாரம்பரிய முறைப்படி அடிக்கல் நாட்டு விழாவைத் தொடங்கி வைப்பதற்கு அடையாளமான கட்டமைப்புகளும் பிரதமர் மோடி முன்பு வைத்ததுபோல் அதே நிலையில் நன்றாக உள்ளன . இந்த அருங்காட்சியகத்தில் சிலவற்றுக்கு 21- 10 – 2018 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ஆசாத் ஹிந்த் அரசின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களைக் குறிப்பதாக இது அமைந்திருந்தது . இதனை நினைவு கூரும் வகையில் சுதந்திரத்தின் மாண்புகளை மனதில் நிறுத்தி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கவுரவிப்பதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, விருது ஒன்றை அறிவித்திருந்தார். 21.10.2018 அன்று தேசிய காவலர் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்வில் இது வெளியிடப்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 30.12.2018 அன்று பிரதமர் பயணம் மேற்கொண்டபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஐஎன்ஏ-வின் மாண்புகள் மற்றும் சிந்தனைகள் மீண்டும் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய மண்ணில் மூவண்ணக் கொடியை ஏற்றிய 75-வது ஆண்டினைக் குறிக்கும் வகையில் நினைவு தபால் தலை, நாணயம், முதல் நாள் உறை ஆகியவற்றை அவர் வெளியிட்டார். நேதாஜியின் அழைப்பை ஏற்று இந்திய விடுதலைக்காக அந்தமானில் இருந்து இளைஞர்கள் எவ்வாறு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்பதை அவர் நினைவுகூர்ந்தார். 1943-ஆம் ஆண்டு நேதாஜி மூவண்ணக் கொடியை ஏற்றிய நாளின் நினைவைப் பாதுகாக்கும் முயற்சியாக 150 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. நேதாஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனப் பெயரிடப்பட்டது.
முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் அக்டோபர் 2015-ல் பிரதமரை சந்தித்து மத்திய அரசிடம் உள்ள நேதாஜி தொடர்பான கோப்புகளை வகை பிரித்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நேதாஜியின் 100 கோப்புகளின் டிஜிட்டல் பிரதிகள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் பொது இணைய தளத்தில் ஜனவரி 2018-ல் பிரதமர் வெளியிட்டார்.
1919 ஏப்ரல் 13 அன்று, நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பந்தமான ஆதாரப்பூர்வ தகவல்களை யாத் – இ – ஜாலியன் அருங்காட்சியகம் கொண்டுள்ளது. முதலாம் உலக யுத்தத்தின்போது இந்திய வீரர்கள் காட்டிய வீர, தீரம் மற்றும் தியாகங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போர் தொடர்பான 1857 குறித்த அருங்காட்சியகம் இந்தியர்கள் அந்த தருணத்தில் வெளிக்காட்டிய வீரத்தையும், தியாகங்களையும் வரலாற்றுப் பூர்வமாக சித்தரிக்கிறது.
இந்தியக் கலைகள் குறித்த த்ரிஷ்யகலா கண்காட்சி 16ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் சுதந்திர காலம் வரையிலான கலைப்பணிகளைக் காட்சிப்படுத்துகிறது.
குடியரசுத் தின விழா தருணத்தில் இந்த அருங்காட்சியகங்களைப் பிரதமர் பார்வையிடுவது தேசத்திற்காகத் தங்களின் இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலான நினைவுக்கு மரியாதை செலுத்துவதாக அமைகிறது.
***
Tomorrow, Prime Minister @narendramodi will inaugurate the Museum on Netaji Subhas Chandra Bose and Indian National Army. He will also visit the museum.
— PMO India (@PMOIndia) January 22, 2019
Prime Minister will also visit the Yaad-e-Jallian museum (Museum on Jallianwala Bagh and World War 1), Museum on 1857- India’s First War of Independence and Drishyakala- Museum on Indian Art at Red Fort, New Delhi.
— PMO India (@PMOIndia) January 22, 2019