Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளை சீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய ஆரோக்கிய நிதி (Rashtriya Arogya Nidhi), தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி (Jansankhya Sthirata Kosh) ஆகிய தன்னாட்சி அமைப்புகளை மூடும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அமைப்புகளின் செயல்பாடுகள், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிடமே இருக்கும்.

சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகளை சீரமைக்கும் நடவடிக்கையில், அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகள் நடைபெறும் மற்றும் இந்த அமைப்புகளுக்கான ஏற்கனவே உள்ள சட்டதிட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும். இதனை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஓராண்டு.

தேசிய ஆரோக்கிய நிதி, பதிவுசெய்யப்பட்ட சங்கமாக உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு இந்த சங்கத்தின் மூலம், மருத்துவ நிதியுதவி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ கண்காணிப்பாளரிடம் முன்தொகை வழங்கப்படும். அவர், ஒவ்வொரு நோயாளிக்கும்  நிதிஉதவியை வழங்குவார். மருத்துவமனைகளுக்கான நிதியை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வழங்கி வருவதால், நிதியுதவியையும் மருத்துமனைகளுக்கு துறையே நேரில் வழங்க முடியும். தேசிய ஆரோக்கிய நிதி அமைப்பின் செயல்பாடுகள், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிடம் இருக்கும். சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-ல் உள்ள வழிமுறைகளின்படி, தன்னாட்சி அமைப்பை கலைக்க, தேசிய ஆரோக்கிய நிதி சங்கத்தின் நிர்வாகிகள் குழு கூடும். இதற்கு மேலாக, சுகாதார அமைச்சரின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான நிதி-யும், துறைக்கே மாற்றப்படுகிறது. இதற்கு ஓராண்டு கால அவகாசம் தேவைப்படுகிறது.

மக்கள் தொகையை நிலைப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ரூ.100 கோடி நிதியுடன், கடந்த 2003-ம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி அமைக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி அமைப்பு, தனது நோக்கத்தின் ஒரு பகுதியாக, மக்கள் தொகையை இலக்காகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது. அமைச்சகத்திடமிருந்து மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி அமைப்புக்கு தொடர்ந்து நிதி வழங்கப்படவில்லை. மக்கள் தொகை நிலைப்படுத்துதல் உத்திகளுக்கு தனியார் மற்றும் தொழில் நிறுவனங்களின் நிதியுதவி தேவைப்படுகிறது. இதனை தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதியின் மூலம் பெற முடியும். மக்கள் தொகை நிலைப்படுத்துதல் உத்திகளில் தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்றபோதிலும், தன்னாட்சி அமைப்பாக அது செயல்பட வேண்டிய தேவையில்லை. எனவே, தன்னாட்சி அமைப்பாக உள்ள தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதியை மூடிவிட்டு, அதனை நிதியாக சுகாதார மற்றும் குடும்பநலத் துறையால் நிர்வகிக்க முடியும்.

பின்னணி:

செலவு மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ், சங்கங்கள் பதிவு சட்டம் 1860-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 19 தன்னாட்சி அமைப்புகளை நித்தி ஆயோக் அமைப்பு மறுஆய்வு செய்தது. தன்னாட்சி அமைப்புகளை மறுஆய்வுசெய்து, அதனை சீரமைக்கலாம் என்ற பரிந்துரையுடன் இடைக்கால அறிக்கையை குழு தாக்கல் செய்தது. தன்னாட்சி அமைப்புகளை மறுஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நிலைப்பாடாக உள்ளது. இதன்மூலம், பலன்களை அதிகரிப்பது, திறம்பட செயல்படுவது, நிதி மற்றும் மனிதவளங்களை பயன்படுத்துவது, இணைந்து செயல்படுவது, ஆளுமை மற்றும் தற்போதைய கொள்கை மற்றும் திட்ட சூழலுக்கு பொருத்தமாக இருப்பது, கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையை மேம்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள மத்திய அரசு விரும்புகிறது. தேசிய ஆரோக்கிய நிதி மற்றும் தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி ஆகியவற்றை மூடிவிட்டு, அதன் செயல்பாடுகளை அமைச்சகமே மேற்கொள்ள வேண்டும் என்று குழு பரிந்துரை செய்தது.

********