Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சி-295 விமானத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

சி-295 விமானத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை


மேதகு பெட்ரோ சான்செஸ் அவர்களே, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களே, பாரதத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, ஸ்பெயின் மற்றும் மாநில அரசின் அமைச்சர்களே, ஏர்பஸ் மற்றும் டாடா குழுக்களின் அனைத்து உறுப்பினர்களே, தாய்மார்களே!

வணக்கம்!

பியூனஸ் டயஸ்!

எனது நண்பர் திரு பெட்ரோ சான்செஸ் முதல் முறையாக பாரத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று முதல், இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையேயான கூட்டாண்மைக்கு புதிய திசை நமக்கு தொடங்கி உள்ளது . சி –295 போக்குவரத்து விமானத்தின் உற்பத்திக்கான தொழிற்சாலையை நாங்கள் திறக்கிறோம். இந்தத் தொழிற்சாலை பாரதம் – ஸ்பெயின் உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம்என்ற நமது இயக்கத்திற்கும் வலு சேர்க்கும். ஒட்டுமொத்த ஏர்பஸ் மற்றும் டாடா குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். சமீபத்தில், தேசத்தின் மகத்தான மகன் ரத்தன் டாடா அவர்களை நாம் இழந்துவிட்டோம். ரத்தன் டாடா அவர்கள் இன்று நம்முடன் இருந்திருந்தால், நம்மிடையே மிகவும் மகிழ்ச்சியானவராக அவர் இருந்திருப்பார். அவரது ஆன்மா எங்கிருந்தாலும், இன்று அவர் எல்லையற்ற மகிழ்ச்சியை உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

சி-295 விமானத் தொழிற்சாலை புதிய பாரதத்தின் புதிய பணிக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. யோசனை முதல் செயல்படுத்துதல் வரை, பாரதம் இன்று இயங்கும் வேகம் இங்கே தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தொழிற்சாலையின் கட்டுமானம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபரில் தொடங்கியது. மேலும் இந்தத் தொழிற்சாலை அக்டோபர் மாதத்திலேயே விமான உற்பத்திக்கு தயாராக உள்ளது. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்ப்பதில் நான் எப்போதும் கவனம் செலுத்துகிறேன். நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, பம்பார்டியர் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை வதோதராவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தத் தொழிற்சாலையும் சாதனை நேரத்திற்குள் உற்பத்திக்காக அமைக்கப்பட்டது. இன்று, அந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் விமானங்கள் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

புகழ்பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் அன்டோனியோ மச்சாடோ ஒருமுறை எழுதினார்:  “வழிப்போக்கனே, பாதை இல்லை… நடந்து கொண்டே இருந்தால் பாதை உருவாகிறது” என்றார். 

நமது இலக்கை நோக்கிய முதல் அடியை நாம் எடுத்து வைக்கும் தருணத்தில், பாதைகள் உருவாகத் தொடங்குகின்றன என்பதை இது குறிக்கிறது. இன்று, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் புதிய உச்சங்களை எட்டியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இந்த மைல்கல்லை எட்டுவது சாத்தியமற்றதாக இருந்திருக்கும். அந்த நேரத்தில், இந்தியாவில் பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தியை யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. முன்னுரிமைகளும் அடையாளங்களும் அப்போது இறக்குமதியை மையமாகக் கொண்டிருந்தன. ஆனால் நாங்கள் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தோம், புதிய இலக்குகளை நிர்ணயித்தோம். இன்று அதன் முடிவுகளை நாம் காணலாம்.

நண்பர்களே,

எந்தவொரு வாய்ப்பையும் வளமாக மாற்ற, சரியான திட்டம் மற்றும் சரியான கூட்டாண்மை அவசியம். சரியான திட்டம் மற்றும் சரியான கூட்டாண்மைக்கு பாரதத்தின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு எடுத்துக்காட்டு. கடந்த தசாப்தத்தில், இந்தியாவில் ஒரு துடிப்பான பாதுகாப்புத் துறையை வளர்க்கும் முடிவுகளை நாடு எடுத்துள்ளது. பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளோம், பொதுத்துறை பிரிவுகளை திறமையானதாக மாற்றியுள்ளோம், ஆயுதத் தொழிற்சாலைகளை ஏழு பெரிய நிறுவனங்களாக மாற்றியுள்ளோம், டிஆர்டிஓ மற்றும் எச்ஏஎல் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கியுள்ளோம். இந்த முன்முயற்சிகள் பாதுகாப்புத் துறைக்கு புதிய சக்தியை அளித்துள்ளன. iDEX (பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்பு) போன்ற திட்டங்கள் ஸ்டார்ட்-அப்களுக்கு ஊக்கமளித்துள்ளன. மேலும் கடந்த 5-6 ஆண்டுகளில், இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 புதிய பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்.

நண்பர்களே,

இன்று, இந்தியாவில் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். ஏர்பஸ் மற்றும் டாடாவின் இந்த தொழிற்சாலை இந்தியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த திட்டத்தின் காரணமாக உள்நாட்டில் 18,000 விமான பாகங்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. ஒரு பாகம் நாட்டின் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படலாம், மற்றொரு பாகம் வேறு இடத்தில் உற்பத்தி செய்யப்படலாம். இந்தப் பாகங்களை யார் உற்பத்தி செய்வது? எங்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) இந்த வேலையை வழிநடத்தப் போகின்றன. உலகெங்கிலும் உள்ள முக்கிய விமான நிறுவனங்களுக்கு பாகங்களை அனுப்பும் மிகப்பெரிய சப்ளையர்களில் ஒருவராக நாங்கள் ஏற்கனவே இருக்கிறோம். இந்தப் புதிய விமானத் தொழிற்சாலை இந்தியாவில் புதிய திறன்கள் மற்றும் புதிய தொழில்களுக்கு ஊக்கமளிக்கும்.

நண்பர்களே,

இந்த நிகழ்வை போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதைத் தாண்டிய ஒரு நிகழ்வாக நான் பார்க்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் பாரதத்தின் விமானப் போக்குவரத்துத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும், மாற்றத்தையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சிறிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்தி வருகிறோம். பாரதத்தை விமானப் போக்குவரத்து மற்றும் எம்.ஆர்.ஓ (பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் சீர் செய்தல்) மையமாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டசிவில் விமானத்திற்கு வழி வகுக்கும். பல்வேறு இந்திய விமான நிறுவனங்கள் 1,200 புதிய விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது, எதிர்காலத்தில், இந்தத் தொழிற்சாலை பாரதம் மற்றும் உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிவில் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும்.

நண்பர்களே,

இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு வதோதரா நகரம் கிரியா ஊக்கியாக செயல்படும். இந்த நகரம் ஏற்கனவே குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு வலுவான மையமாக உள்ளது, மேலும் இங்கு விரைவு சக்தி பல்கலைக்கழகமும் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளுக்கு நிபுணர்களை தயார்படுத்தி வருகிறது. வதோதராவில் மருந்து உற்பத்தி துறை, பொறியியல் மற்றும் கனரக இயந்திரங்கள், ரசாயனங்கள் பெட்ரோ கெமிக்கல்ஸ், மற்றும் மின்சாரம் மற்றும் ஆற்றல் உபகரணங்கள் தொடர்பான ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இப்போது, இந்த ஒட்டுமொத்த பிராந்தியமும் இந்தியாவில் விமான உற்பத்திக்கான முக்கிய மையமாக மாற உள்ளது. நவீன தொழில் கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்காக குஜராத் அரசு, முதலமைச்சர் பூபேந்திர பாய் மற்றும் அவரது குழுவினரை நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

வதோதராவுக்கு மற்றொரு சிறப்பு பண்பு உள்ளது. இது பாரதத்தின் முக்கியமான கலாச்சார நகரம், பாரம்பரிய நகரம். எனவே, ஸ்பெயினில் இருந்து வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் குறிப்பாக மகிழ்ச்சி அடைகிறேன். பாரதம் மற்றும் ஸ்பெயின் இடையே கலாச்சாரத் தொடர்புகள் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஸ்பெயினிலிருந்து வந்து குஜராத்தில் குடியேறி, தனது வாழ்க்கையின் ஐம்பது ஆண்டுகளை இங்கு அர்ப்பணித்து, தமது சிந்தனைகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் நமது கலாச்சாரத்தை வளப்படுத்திய அருட்தந்தை கார்லோஸ் வாலஸை நான் நினைவு கூர்கிறேன். அவரை பலமுறை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக நாங்கள் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தோம். குஜராத்தில் நாங்கள் அவரை அன்புடன் ஃபாதர் வாலஸ் என்று அழைத்தோம். அவர் குஜராத்தியில் எழுதுவார். அவரது புத்தகங்கள் குஜராத்தி இலக்கியத்தையும் நமது கலாச்சார பாரம்பரியத்தையும் வளப்படுத்தியுள்ளன.

நண்பர்களே,

ஸ்பெயினில் யோகா மிகவும் பிரபலமானது என்று கேள்விப்பட்டேன். இந்திய ரசிகர்களும் ஸ்பெயினின் கால்பந்தை ரசிக்கிறார்கள். ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி பாரதத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது, பார்சிலோனாவின் அதிர்ச்சியூட்டும் வெற்றி இங்கேயும் விவாதப் பொருளாக மாறியது. பாரதத்தில் உள்ள இரண்டு கிளப்புகளின் ரசிகர்களும் ஸ்பெயினில் உள்ளவர்களைப் போலவே ஆர்வத்துடன் ரசிப்பதில் ஈடுபடுவார்கள் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

நண்பர்களே,

உணவு, திரைப்படங்கள் மற்றும் கால்பந்து – இந்த கூறுகள் அனைத்தும் நமது நாடுகளுக்கு இடையிலான வலுவான மக்களுக்கு இடையிலான இணைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவும் ஸ்பெயினும் 2026-ம் ஆண்டை இந்தியா-ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆண்டாக கொண்டாட முடிவு செய்துள்ளன என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

பாரதம் மற்றும் ஸ்பெயின் இடையேயான கூட்டாண்மை ஒரு முப்பட்டகம் போன்றது, இது பல பரிமாணங்களைக் கொண்டது, துடிப்பானது மற்றும் எப்போதும் உருவாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சி, இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே பல புதிய கூட்டு ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். ஸ்பெயின் நாட்டுத் தொழில் துறையினரையும், புதிய கண்டுபிடிப்பாளர்களையும் இந்தியாவுக்கு வருமாறு நான் அழைக்கிறேன், நமது வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக மாறுங்கள். இந்தத் திட்டத்திற்காக ஏர்பஸ் மற்றும் டாடா குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

***

TS/PKV/RR/DL