சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350- ஆவது முடிசூட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், விடுதலையின் அமிர்த பெருவிழாவின் போது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் முடிசூட்டு விழா கொண்டாடப்படுவது, அனைவருக்கும் புதிய ஆற்றலையும், உணர்வையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார். 350 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் முடிசூட்டு விழா, வரலாற்றில் சிறப்பு இடம் பிடித்ததோடு, சுயசார்பு, நல்ல ஆளுகை மற்றும் செழிப்பின் போற்றத்தக்க கதைகள் இன்றும் அனைவரையும் ஈர்ப்பதாக அவர் தெரிவித்தார். “தேசிய மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவைதான் சிவாஜி மகாராஜாவின் ஆளுகையின் அடிப்படை அம்சங்களாக இருந்தன”, என்று பிரதமர் அடிக்கோடிட்டு கூறினார். சுயராஜ்யத்தின் முதல் தலைநகரான ராய்கர் கோட்டையில் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் ஒரு பண்டிகையாக மகாராஷ்டிரா முழுவதும் கொண்டாடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது போன்ற நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் மகாராஷ்டிராவில் நடைபெறும் என்று கூறிய பிரதமர், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, அவற்றை நடத்தும் மகாராஷ்டிர அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
350 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் முடிசூட்டு விழா நடைபெறும் போது அதனுடன் சுயராஜ்யமும், தேசியவாதமும் இணைந்திருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்கு சிவாஜி மகாராஜா எப்போதுமே அதிக முக்கியத்துவம் அளித்தார், என்று அவர் கூறினார். ஒரே பாரதம், உன்னத பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் எண்ணங்கள் பிரதிபலிக்கப்படுவதை காண முடிவதாக பிரதமர் தெரிவித்தார்.
குடிமக்களை உத்வேகத்துடனும், நம்பிக்கையுடனும் வைத்திருப்பதில் தலைவர்களின் பொறுப்பை அடிக்கோடிட்டுக் கூறிய பிரதமர், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் காலத்தில் நாட்டின் நம்பிக்கை நிலைகளை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். ஊடுருவல்கள் மற்றும் ஊடுருவல்காரர்களால் ஏற்பட்ட பாதிப்புடன், சமுதாயம் வறுமையில் தவித்த நூறாண்டு கால அடிமை நிலையின் போது குடிமக்களின் நம்பிக்கை மிகக் குறைவாக இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். “நமது கலாச்சார மையங்களை தாக்கி மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது”, என்று தெரிவித்த பிரதமர், சத்ரபதி சிவாஜி மகாராஜா ஊடுருவல்காரர்களுக்கு எதிராக போராடியது மட்டுமல்லாமல், சுய ஆளுகையும் சாத்தியம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடையே ஊட்டினார் என்று கூறினார். “அடிமைப் போக்கை ஒழித்து தேச கட்டமைப்பை நோக்கி சிவாஜி மகாராஜா மக்களுக்கு எழுச்சி ஊட்டினார்”, என்று திரு மோடி தெரிவித்தார்.
வரலாற்றில் ஏராளமான ஆட்சியாளர்கள் ராணுவ வலிமை பெற்றிருந்த போதும், அவர்களது நிர்வாகத் திறமை சிறப்பானதாக அமையவில்லை என்பதையும், அதேபோல பல்வேறு ஆட்சியாளர்கள் சிறந்த ஆளுகைக்காக பெயர் பெற்றிருந்த போதும், அவர்களது ராணுவ தலைமை, வலிமை வாய்ந்ததாக இல்லை என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும் ஸ்வராஜ் மற்றும் சுராஜ் ஆகியவற்றை நிறுவியதால் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் ஆளுமை மகத்தானது என்று பிரதமர் தெரிவித்தார். சிவாஜி மகாராஜா தமது இளம் வயதிலேயே பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றியும், எதிரிகளை வீழ்த்தியும், ராணுவத் திறனை வெளிப்படுத்தியதோடு, மறுபுறம் அரசராக பொது நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அமல்படுத்தி நல்ல ஆளுகையையும் வெளிப்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார். ஒருபுறம் ஊடுருவல்காரர்களிடம் இருந்து தமது ராஜ்ஜியத்தையும், கலாச்சாரத்தையும் அவர் பாதுகாத்ததுடன், மறுபுறம் தேச கட்டமைப்பின் விரிவான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார். பொதுமக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்வதற்கான அவரது பொதுநலன் சார்ந்த ஆளுகையை சுட்டிக்காட்டி, “அவரது தொலைநோக்குப் பார்வையினால் வரலாற்றின் இதர நாயகர்களை விட, சத்ரபதி சிவாஜி மகாராஜா முற்றிலும் வேறுபட்டுள்ளார்” என்று பிரதமர் கூறினார். இது மட்டுமல்லாமல் மக்களிடையே நம்பிக்கையை ஊக்குவித்து, தற்சார்பு உணர்வை ஊட்டிய ஸ்வராஜ், மதம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையையும் சத்ரபதி சிவாஜி மகாராஜா விடுத்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். இதன் காரணமாக நாட்டின் மீது மரியாதை அதிகரித்ததாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் நலன், பெண்கள் வளர்ச்சி, சாமானிய மக்களும் ஆளுகையை அணுகக் கூடிய வசதி என சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் ஆளுகையின் அமைப்புமுறையும், கொள்கைகளும் இன்றுடன் சம அளவு பொருந்துவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் ஆளுமையின் ஏராளமான அம்சங்கள் ஏதேனும் ஒரு வகையில் இன்றும் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் கூறினார். இந்தியாவின் கடல்சார் திறனை அங்கீகரித்தல், கடல் பரப்பை விரிவுபடுத்துதல் மற்றும் அவரது மேலாண்மை திறன்கள் முதலியவை அனைவரையும் கவர்வதாக பிரதமர் தெரிவித்தார். அவரால் கட்டப்பட்ட கோட்டைகள், கடுமையான கடல் சீற்றங்களுக்கு இடையேயும் இன்றும் கடலின் நடுவே வானுயர்ந்து நிற்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ராஜ்ஜியங்களை அவர் விரிவுபடுத்தியதையும், கடற்கரைகள் முதல் மலைச் சிகரங்கள் வரை அவர் கோட்டைகளை அமைத்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில் நீர் மேலாண்மை சம்பந்தமான அவரது ஏற்பாடுகள் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக பிரதமர் தெரிவித்தார். சிவாஜி மகாராஜாவால் எழுச்சி பெற்று, இந்திய கடற்படையை அடிமை போக்கிலிருந்து முற்றிலும் நீக்கும் வகையில் ஆங்கிலேய ஆட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட இந்தியக் கடற்படை கொடி, சிவாஜி மகாராஜாவின் இலச்சினையால் கடந்தாண்டு மாற்றப்பட்டதை பிரதமர் அடிக்கோடிட்டு காட்டினார். “தற்போது இந்தக் கொடி புதிய இந்தியாவின் பெருமையை கடல்களிலும், வானத்திலும் எடுத்துரைக்கிறது”, என்று திரு மோடி தெரிவித்தார்.
“சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வீரம், கோட்பாடு மற்றும் நீதி ஆகியவை பல தலைமுறையினரை ஈர்த்துள்ளன. அவரது துணிச்சலான செயல், உத்தி திறன்கள் மற்றும் அமைதியான அரசியல் அணுகுமுறை ஆகியவை இன்றும் நமக்கு எழுச்சி ஊட்டுகின்றன”, என்று பிரதமர் குறிப்பிட்டார். தமது உரையை நிறைவு செய்கையில், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கொள்கைகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் விவாதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது பெருமை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். மொரிஷியஸ் நாட்டில் கடந்த மாதம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் உருவச்சிலை நிறுவப்பட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். “விடுதலையின் அமிர்த காலத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-ஆவது முடிசூட்டு விழா நிறைவடைவது, ஊக்கமளிக்கும் தருணம். பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் உருவாக்கிய மாண்புகள் நம்மை தொடர்ந்து வழி நடத்துகின்றன”, என்றும், இந்த மாண்புகளின் அடிப்படையில் அமிர்த காலத்தின் 25 ஆண்டு பயணம் நிறைவடைய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். “சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் இந்தியாவைக் கட்டமைக்கும் இந்தப் பயணம், சுயராஜ்யம், நல்ல ஆளுகை மற்றும் தற்சார்பின் பயணமாக இருக்கும். இது வளர்ந்த இந்தியாவின் பயணமாக இருக்கும்”, என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
AD/BR/GK
Chhatrapati Shivaji Maharaj is a beacon of courage and bravery. His ideals are a source of great inspiration. https://t.co/eQZgsyTMm4
— Narendra Modi (@narendramodi) June 2, 2023