Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிறப்பு மெய்நிகர் ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாடு


உலகளாவிய தொற்றுநோய் கோவிட்-19 தாக்குதலால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிப்பது குறித்தும், இதை எதிர்த்து உலகம் முழுவதும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக ஜி-20 தலைவர்களின் மெய்நிகர் உச்சிமாநாடு 26 மார்ச் 2020 அன்று நடைபெற்றது.

முன்னதாக இதுகுறித்து பிரதமர், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் தொலைபேசியில் உரையாடல் நிகழ்த்தினார்.

கோவிட் 19 நோய் தொடர்பாக நடைபெற்ற நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் மற்றும் ஜி20 ஷெர்ப்பாக்கள் கூட்டத்தின் இறுதிக்கூட்டமாக, இந்த சிறப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது.

கோவிட் 19 நோயைத் தடுப்பதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அனைத்து ஜி20 தலைவர்களும் கூட்டத்தில் ஒப்புக்கொண்டனர்.

உலக சுகாதார நிறுவனம், இந்த நோய்க்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவப் பொருட்கள், ஆய்வுக்கான கருவிகள், சிகிச்சையளித்தல், மருந்துகள் மற்றும் தொற்று வராமல் தடுக்க தடுப்பு மருந்துகள் வழங்குதல் உட்பட இந்த நோய்க்கு எதிராக அறிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் வலுப்படுத்தும் வகையில், தலைவர்கள் அவற்றுக்கு ஆதரவளித்தனர்.

இந்த நோயின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக செலவுகளைக் குறைப்பதற்காக, தற்போதுள்ள அனைத்து கொள்கை உத்திகளையும் பயன்படுத்துவதாக தலைவர்கள் உறுதி பூண்டனர்.

உலகின் வளர்ச்சியையும், சந்தையில் ஸ்திரத்தன்மையை மீட்கவும், தொய்வு நிலையை வலுப்படுத்தவும் தலைவர்கள் உறுதி பூண்டனர்.

கோவிட்19 நோயால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார பாதிப்பை எதிர்கொள்வதற்காக உலக பொருளாதாரத்தில் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்துவது என்றும் ஜி20 நாடுகள் உறுதி மேற்கொண்டன.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கோவிட் 19 சாலிடாரிடி ரெஸ்பான்ஸ் பண்ட் (ஒன்றிணைந்த பொறுப்பு நிதி ) தாமாகவே முன்வந்து பண உதவி செய்வதாகவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஜி20 நாடுகளின் இந்த சிறப்பு கூட்டத்தைக் கூட்டியதற்காக சவுதி அரேபியாவின் அரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த நோயால் சமூக – பொருளாதார செலவு மிக அதிகமாக அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளதாக பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கோவிட் 19 நோய்த்தொற்று உள்ளவர்களில் 90% பேர் மற்றும் இந்நோயால் இறந்தவர்களில் 88 சதவிகிதம் பேர் ஜி 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

உலக மக்கள் தொகையில் 60% ஜி 20 நாடுகளைச் சேர்ந்தவை என்றும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜிடிபி 80 சதவிகிதம், இந்த நாடுகளைச் சேர்ந்தது என்றும் அவர் கூறினார்.

உலகை உலுக்கும் இந்த நோய்க்கு எதிராக திட்டவட்டமான ஒரு செயல் திட்டத்தை வெளிக்கொணர வேண்டும் என்றும் ஜி-20 நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

உலகின் வளர்ச்சிக்கான நமது தொலைநோக்கு பார்வையின் மையமாக மக்களே வைக்கப்பட வேண்டும் என்றும், மருத்துவ ஆய்வு மற்றும் வளர்ச்சியை பகிர்ந்து கொள்ளுதல், ஒத்துழைத்தல், மக்களின் உடல் நல பாதுகாப்பு முறைகளுக்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய முறைகளை கண்டறிவது ஆகியவற்றின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

நெருக்கடியான நிலைமைகளைச் சமாளிப்பதற்கான புதிய நிர்வாக ஒப்பந்தங்களைத் தயாரித்தல்; உலகம் முழுமையையும் ஒருங்கிணைத்து ஒரே உலக கிராமமாக ஆக்குவதற்கான நடைமுறைகளை வளர்த்தெடுப்பது; உலக சுகாதார அமைப்பு போன்ற அரசுகளுக்கிடையிலான அமைப்புகளை மாற்றியமைப்பது வலுப்படுத்துவது மற்றும் கோவிட் 19 நோயின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கு — குறிப்பாக பொருளாதாரரீதியாக நலிவுற்ற மக்களுக்காக ஒருங்கிணைந்து பணியாற்றுவது — ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.

புதியதொரு உலகமயமாக்கலை கொண்டு வர உதவ வேண்டும் என்று தலைவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காக மற்றும் மனித குலத்தின் பல்வேறு நலன்களையும் திருப்தி செய்யும் வகையில் பல தரப்பட்ட தளங்களில் இருந்தும் பங்காற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

உச்சி மாநாட்டின் முடிவில் ஜி20 தலைவர்களின் அறிக்கை வெளியிடப்பட்டது. கோவிட் 19 தொற்று நோய்க்கு எதிராக உலக அளவில் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; உலக பொருளாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; வர்த்தகம் பாதிக்கப்படுவதை குறைந்தபட்சமாக்க வேண்டும்; உலக அளவிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.