Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சார்க் உறுப்பு நாடுகளுக்குள், நாணய மாற்று முறையை திருத்தங்களோடு 14, நவம்பர் 2017 வரை நீட்டிக்கவும், தேவைப்படின் அதற்குப் பின்னர் நீட்டிக்கவுமான திட்டம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை, சார்க் உறுப்பு நாடுகளுக்குள் நாணய மாற்று முறையை திருத்தங்களோடு 14 நவம்பர் 2017 வரை நீட்டிக்கவும், தேவைப்படின் அதற்குப் பிறகு, நிதி அமைச்சர் அதை நீட்டிக்கவுமான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டத்தின்படி, மத்திய ரிசர்வ் வங்கி, சார்க் உறுப்பு நாடுகளுக்கு (ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை), அவர்களின் இரண்டு மாத இறக்குமதி தேவைக்கு ஏற்ப 2 பில்லியன் டாலர்களுக்கு மிகாமல், அமெரிக்க டாலர்களாகவோ, யூரோவாகவோ, அல்லது இந்திய ரூபாயாகவோ மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டள்ளது.

9 டிசம்பர் 2013 அன்று, வாஷிங்டனில் நடந்த 27வது சார்க் நிதிக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்ட சார்க் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி கவர்னர்கள் இந்த கரன்சி மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தியதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், இத்திட்டத்தில் மேலும் தெளிவை உருவாக்குவதற்கென்று சில திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தனர்.

அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட சார்க் நாடுகளின் மத்திய வங்கிகளோடு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும். அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த இருதரப்பு ஒப்பந்தங்களில் மத்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திடும். இத்திட்டத்துக்கான திருத்தங்களுக்கு நிதி அமைச்சரின் ஒப்புதல் வேண்டும்.

சார்க் உறுப்பு நாடுகளுக்கான இந்த நாணய மாற்றுத் திட்டம், சார்க் நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்தும். சார்க் நாடுகள் இடையே இந்தியாவின் நம்பகத்தன்மையையும், ஆளுமையையும் இத்திட்டம் மேம்படுத்துவதோடு இந்தப் பிராந்தியத்தில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். சார்க் நாடுகளுடனான இந்த நாணய மாற்றுத் திட்டம், இந்தப் பிராந்திய நாடுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நிதி ஆளுமையை அதிகப்படுத்தும்.

இத்திட்டத்துக்கான கால அவகாசத்தை அதிகரிப்பதால் எவ்விதமான நிதிச்சுமையும் ஏற்படப் போவதில்லை. ஏதாவதொரு நாட்டுடன், இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால், மத்திய ரிசர்வ் வங்கி வசமிருக்கும் அந்நியச் செலாவணி 2 பில்லியன் டாலர்களுக்கு மிகாமல் தற்காலிகமாக குறையும். இந்த நாணயத்தை வாங்கும் நாடு இதற்கான வட்டியை தரும். இருப்பினும், உள்நாட்டு நாணயத்தை பரிமாறினால் அதற்கு வட்டி கிடையாது.

பின்னணி

சார்க் நாடுகளிடையே நாணய மாற்றுத் திட்டம் மத்திய அரசால் 1 மார்ச் 2012ல் செயல்படுத்தப்பட்டது. நீண்டகால அந்நியச் செலாவணி தேவைகளுக்கான ஒரு நிரந்தர ஏற்பாடு செய்யப்படும் வரையில் குறுகிய கால அந்நியச் செலாவணி தேவைகளை சமாளிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

*****