Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச யோகா தினமான ஜூன்21, 2016ல் சண்டிகர் கேபிடோல் வளாகத்தில் பிரதமர் ஆற்றிய உரை.

சர்வதேச யோகா தினமான ஜூன்21, 2016ல் சண்டிகர் கேபிடோல் வளாகத்தில் பிரதமர் ஆற்றிய உரை.

சர்வதேச யோகா தினமான ஜூன்21, 2016ல் சண்டிகர் கேபிடோல் வளாகத்தில் பிரதமர் ஆற்றிய உரை.


இந்த தருணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் யோகா நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஐ.நா சபை சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதால் உலக நாடுகள் பலவும் கூட அவரவர்களின் நேரத்திற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறார்கள். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, சென்ற ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டின் நீளமான நாளாக ஜூன் 21 திகழ்வதாலும், மேலும் இந்நாளில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருப்பதாலும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட உகந்த நாளாக ஜூன் 21 தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும், எல்லா தரப்புகளில் இருந்தும் ஆதரவு குவிந்தது.

ஐ.நா சபை இப்படி பல சர்வதேச தினங்களைக் கொண்டாடுகிறது என்றாலும், சர்வதேச யோகா தினம் மட்டுமே உலகின் எல்லா மூலைகளிலும் ஏற்பும், ஆதரவும் கொண்ட வெகுஜன தினமாக திகழ்கிறது. எனக்குத் தெரிந்து வேறு எந்த தினமும் யோகா தினத்தைப் போல சர்வதேச ஆதரவையும், புகழையும் பெறவில்லை. அதுவும் இத்தனை சிறிய காலவெளியில் இவ்வளவு புகழை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக புற்றுநோய் தினம், உலக உடல்நல தினம், உலக மனநல தினம் என உடல்நலத்திற்கென்றே பிரத்யேகமான பல தினங்களை ஐ.நா சபை கொண்டாடுகிறது. ஆனால் சர்வதேச யோகா தினம் மட்டுமே மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை குறிப்பதோடு அதோடு தொடர்புடைய சமூகநலத்தையும் குறிக்கிறது. இந்த யோகா தினம் மிகப்பெரிய அளவில் வெகுஜன மக்களை சென்றடைந்திருப்பதற்கு காரணம் நம் முன்னோர்களான ரிஷி முனிகள் நமக்கு அளித்த யோகா என்னும் அளப்பரிய வரத்தின் பலம் என்றே நான் நினைக்கிறேன்.

யோகா ஒழுக்கம் நிறைந்த, கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ள வழிசெய்கிறது என பலமுறை நான் தெரிவித்திருக்கிறேன். யோகாவின் முழு அர்த்தத்தை பலரால் உணர முடியாததற்கு அவர்களின் அறியாமையே காரணம். அதனால்தான் சிலர் யோகாவால் என்ன பெரிதாக கொடுத்து விட முடியும் என அவ்வப்போது கேள்வி எழுப்புகிறார்கள். யோகா என்பது அளிக்கும் விஞ்ஞானம் அல்ல. யோகாவின் மூலம் எதையெல்லாம் பெறுகிறோம் என்பதைவிட தேவையற்ற எந்தெந்த விஷயங்களையெல்லாம் அதன் மூலம் விடுகிறோம் என்பதே முக்கியம். அதனால்தான் யோகா என்பது அடைதல் என்பதைத் தாண்டி விமோசனமாக பார்க்கப்படுகிறது.
எல்லா குழுக்களும், மதங்களும், வழிபாடுகளும் பெரும்பாலும் இறப்புக்குப் பிறகு நாம் என்ன அடைகிறோம் என்பதை மையமாக வைத்தே இயங்குகின்றன. எல்லாம் வல்ல இறைவனை நினைத்து இதை இதை செய்தால் முக்தி அடையலாம் என தெரிவிக்கின்றன. யோகா என்பது இறப்புக்கு பின்பான வாழ்க்கையைப் பற்றியதல்ல. முக்தி அடைவதற்கான வழிகளை எல்லாம் அது சொல்லிக் கொடுப்பதில்லை என்பதால் அதை நாம் மத சடங்காக கருதவேண்டியதில்லை. மாறாக யோகா நமக்கு ஆற்றலையும், சக்தியையும் கொடுத்து மனதை அமைதியாகவும், உடலை சக்தியுடனும் வைத்திருக்க உதவுகிறது. இதன்மூலம் சமூகத்திலும் ஒற்றுமை ஓங்குகிறது. யோகா நாம் உயிரோடு வாழும்போது என்ன அடையலாம் என்பதைப் பற்றிப் பேசும் விஞ்ஞானம் தானே தவிர, இறப்புக்கு பின்பு என்ன அடையலாம் என்பதைப் பேசும் விஞ்ஞானம் அல்ல.

நமது உடல், மனம், அறிவு, ஆன்மா என அனைத்தும் ஒன்றோடு ஒன்று இயைந்து இயங்கும் வண்ணம் நமக்கு பயிற்சி அளிக்கிறது யோகா. நீங்கள் கவனித்துப் பார்த்தால், நாம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், கவனமாக இருந்தாலும் கவனமின்மையோடு இருந்தாலும், சோம்பலாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இருந்தாலும் நம் உடல் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அனால் மனம் எங்கெங்கோ அலைபாய்கிறது. இந்த நொடியில் நீங்கள் சண்டிகரில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதில் அமிர்தசரஸ் பற்றிய எண்ணம் எழுந்ததும் உடனே உங்கள் மனம் அங்கு சென்றுவிடுகிறது. அனந்த்பூர் சாஹிப் உங்கள் மனதில் தோன்றினால் உடனே மனம் அங்கு பயணப்பட்டுவிடுகிறது. மும்பை என நினைத்தால் உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மனம் மும்பைக்கு சென்றுவிடுகிறது.

உடல் நிலையோடு இருந்தாலும் மனம் நிலையற்று இருக்கிறது. யோகாவின் மூலம் மனதை நிலையாக வைத்திருக்க முடியும். நம் உள்சூழ்நிலையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை நிலையாக வைத்திருக்க யோகா உதவுகிறது. உடல் அசைந்து கொண்டிருந்தாலும் மனதை அசையாமல் வைத்திருக்க யோகாவின் மூலம் முடியும். இந்த சமநிலையை நாம் நம் வாழ்வில் எட்டிவிட்டால் கடவுள் கொடுத்த வரப்பிரசாதமான இந்த உடல் நம் வாழ்வின் உன்னதத்தை உணர எல்லா வகையிலும் நமக்கு உறுதுணையாக இருக்கும்.

இந்த வகையில் பார்த்தால் யோகா என்பது கடவுள் நம்பிக்கை உள்ளோர்க்கு மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்க்கும் நன்மை செய்கிறது. பைசா செலவில்லாத உடல்நலக் காப்பீடு என்பது உலகத்தில் இல்லை. ஆனாலும் யோகப் பயிற்சி பைசா செலவழில்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வழி செய்கிறது. யோகாவைப் பொறுத்தவரை ஏழை பணக்காரன் வித்தியாசமோ, படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசமோ முற்றிலும் கிடையாது. பரம ஏழையும் சரி, மிகப்பெரிய பணக்காரனும் சரி தாரளமாக யோகப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் உடலை நன்றாக நீட்டி மடக்க கொஞ்சமே கொஞ்சம் இடம் மட்டும்தான். ஏழை நாடுகளும், இந்தியா போன்ற வளரும் நாடுகளும் வரும் முன் காக்கும் பயிற்சியான யோகாவை ஊக்குவிப்பதன் மூலம் பல்வேறு நோய்களைத் தடுத்து, அதன் மூலம் மிச்சப்படும் பணத்தை பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு உபயோகிக்கலாம். யோகா என்பது மிகவும் எளிமையான வரும் முன் தடுப்பு பயிற்சியாகும். நாம் அனைவரும் நம் வாழ்வின் ஒரு பகுதியாக யோகாவை அமைத்துக்கொள்ளல் அவசியம்.

நிறைய மக்கள் இன்று காலை எழுந்ததும் இந்த யோகா இந்கழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்று உலகம் முழுதும் யோகா தொடர்பாக நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிட்டும். அவர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் இனியும் தாமதியாமல் யோகாவை உங்கள் வாழ்வியலில் ஒரு பகுதியாக உடனே மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான். எதற்காக இப்படி வேண்டுகிறேன் என்றால் உங்களை நீங்களே உணர்ந்துகொள்ளவும், உங்களின் ஆற்றலைப் பெறுக்கவும் யோகா அவசியம். எப்படி செல்ஃபோன் இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக ஆகியிருக்கிறதோ அதேபோல நீங்கள் யோகாவையும் உங்கள் வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அது ஒன்றும் மிகவும் கடினமான காரியம் அல்ல, எளிமையான ஒன்றுதான்.

எப்போது நாம் யோகா குறித்து பேசினாலும் யோகாவின் மேல் பெருமதிப்பு கொண்ட ப்ரேசில் நாட்டைச் சேர்ந்த யோகா குரு தர்ம மித்ராவைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. யோகாவில் மொத்தம் 1008 தோற்றநிலைகள் உண்டு என தெரிவிக்கும் அவர், அதில் 908 நிலைகளை யோகா வகுப்புகளில் பயன்படுத்திக் கொள்வதற்காக புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார். பிரேசிலில் பிறந்திருந்தாலும் உலகம் முழுதும் யோகாவை பரப்ப தன்னைத் தானே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இன்று உலகம் முழுதும் யோகா மதிப்புமிக்க ஒரு அம்சமாகவும், எல்லோரையும் ஈர்க்கும் பயிற்சியாகவும் பெயர் பெற்றிருக்கிறது. நமது முன்னோர்களாக ரிஷி முனிகள் இந்த அருமையான விஞ்ஞானத்தை நமக்கு அளித்தார்கள். அதை அப்படியே இந்த உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கேற்ப நிறைய திறமைமிகுந்த யோகா ஆசிரியர்களை நம் நாட்டில் உருவாக்க வேண்டியதும் நம் கடமை.
உலக சுகாதார மையத்துடன் இணைந்து மத்திய அரசின் தரக் குழு ஆற்றல் மிகுந்த யோகா ஆசிரியர்களை உருவாக்கும் வண்ணம் நெறிமுறைகளையும், கொள்கைகளையும், விஞ்ஞானபூர்வ வழிமுறைகளையும் ஆய்வுசெய்து வருகிறது. எப்படி யோகாவின் செயல்முறைகளை கொஞ்சம்கூட மாற்றாமல் அப்படியே பாதுகாத்து எளிய முறையில் உலகம் முழுதும் கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் பெண்களை யோகா செய்யச் சொல்லி பரிந்துரைப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். யோகநிலைகள் பெண்களை எளிமையான முறையில் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பாரம்பரிய முறைகளை பாதுகாப்பதோடு, அவை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றமடைவதும் அவசியம்.

காலம் செல்லச்செல்ல நம் அன்றாட வாழ்க்கை மிகவும் பரபரப்பு மிகுந்ததாகிவிட்டது. நாம் நம் உள்மனதோடு, நம் இயல்போடு தொடர்பில் இருப்பதென்பதே முடியாமல் போய்விட்டது. யோகா நம்மை மீண்டும் நம் உள்மனதோடு தொடர்புகொள்ளச் செய்வதன்மூலம், உடல் நலம், மனநலம், ஆன்ம நலம் மற்றும் சமூக விழிப்புணர்வு என எல்லாவற்றின் மையப்புள்ளியாகவும் திகழ்கிறது. நம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவிசெய்து ஆன்மிக ரீதியான பரவசத்தை அடையச்செய்வதன் மூலம் நல்ல சமூக நடத்தைக்கும் யோகா உறுதுணையாக இருக்கிறது. எனவே இனியும் யோகாவை சந்தேகக் கண்ணோடு கேள்விகளுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்காமல் சமூகத்தின் நன்மைக்காக நாம் அனைவரும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யோகாவின் பயன்களை நாம் சொர்க்கத்தில் அடைவதற்காக காத்திராமல் பூமியிலிலேயே அனுபவிக்கலாம். சொர்க்கத்தை அடைய ஏராளமான குருக்கள், மதங்கள், கடவுள்கள், ஆன்மிக பாதைகள் என உண்டு. ஆனால் இந்த பூமியிலேயே உடல்நலன், மனநலன், சமூகநலன், ஆன்ம நலன் என எல்லாவகையான இன்பங்களையும் துய்க்க யோகா வழி செய்கிறது. எனவே உலகின் அனைத்து மக்களும் யோகாவை தங்கள் வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன். கண்டிப்பாக எல்லோராலும் தங்கள் வாழ்க்கையை யோகாவுக்காக அர்ப்பணிக்க முடியாது தான். ஆனால் குறைந்தபட்சம் அதோடு தொடர்பில் இருக்க முயற்சித்தாலே அது மிகப்பெரிய நன்மைகளைத் தரும். விரைவில் உலகம் முழுதும் யோகாவை நோக்கி பீடுநடைபோடும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.
யோகா மிகப்பெரும் பொருளாதாரத் துறையாகவும் உலக அளவில் வலுப்பெற்று வருகிறது. எல்லா நாடுகளிலும் பெருகிவரும் யோகா ஆசிரியர்களுக்கான தேவை யோகாவை பெரிய தொழில் துறையாகவும் மாற்றிவருகிறது. எனவே உலக அளவில் வேலைவாய்ப்புக்கும் யோகா பல வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. சர்வதேச அளவில் யோகா பல்லாயிரம் தொழில்களை உருவாக்கி இருக்கிறது. உலகின் பல நாடுகளில் 24மணி நேரமும் யோகா, மற்றும் யோகா சம்பந்தமான நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்கள் கூட இயங்குகின்றன.
பிரம்மாண்டமான தொழிலாக யோகா வளர்ந்து வருகிறது. ஏராளமான வழிமுறைகளில் நாம் யோகப்பயிற்சிகளை செய்கிறோம். ஆனால் உலகெங்கும் இருக்கும் யோகா குருக்களிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அடுத்த ஆண்டு நாம் இதே நாளில் யோகா தினத்தை கொண்டாடும் போது, நீங்கள் யோகாவுக்கென்று வழமையாக செய்யும் விஷயங்களோடு நீரிழிவு வியாதிக்கான யோகா பயிற்சிகளிலும் தனிக்கவனம் செலுத்துங்கள். ஏனைய பயிற்சிகளோடு நீரிழிவு நோயை குணப்படுத்தும் யோகப்பயிற்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுங்கள்.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள். நீரிழிவு நோயில் இருந்து நம்மால் முற்றிலுமாக விடுபட முடிகிறதோ இல்லையோ, ஆனால் யோகாவின் மூலம் நீரிழிவு வியாதியை நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சராசரி மனிதர்களுக்காக பிரத்யேகமான யோகா பரப்புரைகளை நாம் மேற்கொள்ளலாமா? அப்படி ஒரு பரப்புரையை மேற்கொண்டு குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு இந்த நோயில் இருந்து நம்மால் விடுதலை அளிக்க முடிந்தாலே அது மிகப்பெரிய சாதனைதான். அதன்பின்னர் அதற்கடுத்த ஆண்டு நாம் இன்னொரு நோயில் கவனம் செலுத்தலாம். இப்படி உடல்நலத்தை மனதில் கொண்டு வருடாவருடம் நாம் ஒரு நோயின் மீது மட்டும் கவனம் செலுத்தி அந்நோயைத் தீர்க்கும் யோகப்பயிற்சிகளை பரப்புரை செய்யலாம்.

மேலும் யோகா என்பது ஒரு நோயில் இருந்து மட்டும் விடுதலை பெறுவதற்கான வழி அல்ல. ஒட்டுமொத்தமாக நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற்று உடல்நலத்துடன் வாழ யோகா வழி செய்கிறது. ஒட்டுமொத்தமான நல்வாழ்க்கைக்கு யோகா அத்தியாவசியமாகிறது.

இந்தியா உலகிற்கு பாரம்பரியமான பல நன்மைகளை வழங்கி இருக்கிறது. உலகம் முழுதும் அவ்விஷயங்களை பலவழிகளில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு மத்திய அரசின் சார்பில் இரண்டு யோகா விருதுகளை நான் அறிவித்திருக்கிறேன். அடுத்த ஆண்டு ஜூன்21ல் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும்போது இரண்டு யோகா விருதுகள் வழங்கப்படும். ஒன்று சர்வதேச அளவில் யோகா துறையில் சாதனை செய்திருக்கின்றவருக்கும், மற்றொன்று உள்நாட்டு அளவில் யோகாத் துறையில் சாதனை செய்திருப்பவருக்கும் வழங்கப்படும். ஒன்று சர்வதேச யோகா விருது. மற்றொன்று தேசிய அளவிலான யோகா விருது. இது தனிநபர்களுக்கு மட்டுமல்லாது இயக்கங்களுக்கும் வழங்கப்படும்.

இந்த விருதுகளை வழங்க வல்லுநர் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்களின் மூலம் விருதுகளுக்கான விதிகள் நிர்ணயிக்கப்படுவதோடு, தேர்வுக்குழுவும் நியமிக்கப்படும். சர்வதேச விருதுகளுக்கு எப்படி உலக அளவில் பெரிய மதிப்பும், மரியாதையும் இருக்கிறதோ அதேபோல இந்தியாவும் இந்த விருதின் மூலம் யோகாவுக்கென்று தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பவர்களை கவுரவிக்க எண்ணுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த விருதுகளை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கூட நம்மால் எடுத்துச் செல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை யோகா என்னும் இந்த பாரம்பரிய பயிற்சியை ஏற்று, அதற்கு உரிய மரியாதையை வழங்கும் உலகநாடுகளுக்கும், ஐ.நா சபைக்கும், உலகெங்கும் வியாபித்திருக்கும் யோகா குருக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். யோகாவை பல தலைமுறைகள் தாண்டி உயிர்ப்போடு வைத்திருப்பதோடு, அதை உலக அளவில் கொண்டுசேர்க்க பொறுப்புணர்ச்சியோடு செயல்படும் அனைத்து தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் முன்பே சொன்னதைப் போல பைசா செலவில்லாமல் யோகா நமக்கு சிறப்பான உடல்நலத்தை தருகிறது. அதற்கு செய்யும் கைமாறாக நாம் யோகாவிற்கு புதியதொரு பரிமாணத்தையும், சக்தியையும் வழங்க வேண்டும்.
பாதல் ஐயாவிடம் (பிரகாஷ் சிங்) பேசிக்கொண்டிருந்தபோது இந்த கேபிடோல் வளாகத்தில் இதைவிட ஒரு நல்லகாரியம் என்ன நடந்துவிட முடியும் எனக் கேட்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகரில் ஐந்தாண்டுகள் நான் தங்கியிருக்கிறேன் என்பதால் இந்த நகரைப் பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். யோகா தினத்தை சண்டிகரில் கொண்டாடலாம் என்ற பேச்சு எழுந்தபோது, அதற்கு இதைவிட ஒரு சிறந்த இடம் கிடைக்காது என உடனே சொன்னேன். ஆயிரமாயிரம் யோகா ஆர்வலர்கள் இப்படி ஓரிடத்தில் குழுமி இந்த தினத்தை கொண்டாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உலகம் முழுதும் இன்று கேபிடோல் வளாகத்துடன் இணைந்து இந்த யோகா தினத்தை கொண்டாடுவது பெருமையளிக்கும் விஷயமாகவும் இருக்கிறது. யோகா என்னும் இந்த பாரம்பரிய பயிற்சிக்கு என் வணக்கங்களையும், அதன் ஒளிமயமான எதிர்காலத்திற்கு என் வாழ்த்துகளையும், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் மீண்டுமொருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.