Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


எனது அமைச்சரவை தோழர்கள் ஜி. கிஷன் ரெட்டி, மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மெக்வால் அவர்களே, உலக நாடுகளின் பிரதிநிதிகளே அனைவருக்கும் வணக்கம். அருங்காட்சியகத் தினத்தையொட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துகள். 

சர்வதேச அருங்காட்சியக  கண்காட்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றின் பல்வேறு அத்தியாயங்கள் உயிர்ப்புடன் எழுந்துள்ளன.  அருங்காட்சியகத்தில் நாம் நுழையும்போது, கடந்த காலத்தை நோக்கிச் செல்கிறோம். அருங்காட்சியகம் ஆதாரத்தின்  அடிப்படையிலான உண்மையான நிலையை நமக்கு அளிக்கிறது. கடந்த காலத்தில் இருந்து ஊக்கத்தையும், எதிர்காலத்தை நோக்கிய கடமை உணர்வையும் அருங்காட்சியகம் நமக்கு அளிக்கிறது. அருங்காட்சியகத்தின் இன்றைய கருப்பொருள், தற்போதைய உலகின் முன்னுரிமைகளை பறைசாற்றுவதுடன், இன்றைய காலத்திற்கு பொருத்தமானதாக இந்த நிகழ்ச்சியை மாற்றியுள்ளது. இன்றைய முயற்சிகள், இளைய தலைமுறையினர், தங்களது பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்ள வைக்கும்.

பார்வையாளர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், மிக அழகாக திட்டமிடப்பட்டு கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு, இந்த நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமையும்.

நமது நிலத்தின் ஏராளமான பாரம்பரியம், நூற்றாண்டுகளாக நீடித்த அடிமை யுகத்தில் தொலைந்துவிட்டது.  ஏராளமான  பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகளும், நூலகங்களும் எரிக்கப்பட்டன. இது இந்தியாவிற்கான இழப்பு மட்டுமல்லாமல், உலகப் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும். நமது நாட்டில் நீண்ட கால பாரம்பரியத்தைப் பாதுகாத்து, புத்துயிரூட்ட  சுதந்திரத்துக்கு பின்னர், மெத்தனமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாதது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.  நமது பாரம்பரியப் பெருமையை பறைசாற்றும் விதமாக, நாட்டில் புதிய கலாச்சார, உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.  இத்தகையை முயற்சிகளில் விடுதலைக்கான இந்தியாவின் போராட்ட வரலாற்றை நாம் அறிந்துகொள்ளலாம். இதேபோல, நாட்டின் ஆயிரமாண்டு பழைமையான பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

நண்பர்களே,  ஒவ்வொரு மாநிலம், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவின்  பாரம்பரியத்துடன் உள்ளூர் மற்றும் கிராமப்புற அருங்காட்சியகங்களை பாதுகாக்கும் சிறப்பு பிரச்சாரத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஐந்து சிறப்பு அருங்காட்சியகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடியினரின் பெருமையை உலகுக்கு எடுத்துக்கூறும் மிகச் சிறந்த தனித்துவமான முன் முயற்சியாக இது இருக்கும்.  உப்புச் சத்தியக்கிரகத்தின் போது, மகாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரையில், காந்தி எந்த இடத்தில் உப்புச் சட்டத்தை மீறினாரோ அந்த இடத்தில்  நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது.   தில்லியில் உள்ள அலிப்பூர் சாலை 5-ம் எண் முகவரியில், டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் மகா பரிநிர்வாண ஸ்தலம், மறு சீரமைக்கப்பட்டு வருகிறது.  அவர் பிறந்த மாவ் என்னுமிடத்தில் அவரது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட ஐந்து தீர்த்தங்கள் உருவாக்கப்படுவதுடன், அவர் வாழ்ந்த லண்டன், நாக்பூர், அவரது நினைவிடம் அமைந்துள்ள மும்பை சைத்திய பூமி ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.  சர்தார் படேலின் ஒற்றுமை சிலை, பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக், குஜராத்தில் கோவிந்த் குருஜியின் நினைவிடம், வாரணாசியில் மன் மகால்  அருங்காட்சியகம், கோவாவில் கிறித்தவ கலை அருங்காட்சியகம் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவையே.  தில்லியில் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், அமைக்கப்பட்டுள்ள பிரதமர் சங்கிரகாலயாவை அனைவரும் ஒருமுறையாவது சென்று பார்வையிட வேண்டும்.

நண்பர்களே, ஒரு நாடு, தனது பாரம்பரியத்தை பாதுகாக்கத் தொடங்கும் போது, மற்ற நாடுகளுடன் நெருங்குவதற்கும் வாய்ப்பளிக்கிறது. பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட புத்த பகவானின் புனிதமான நினைவுச் சின்னங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து புத்த பகவானின் பக்தர்களை ஒன்றுபடுத்தியுள்ளது. கடந்த புத்த பூர்ணிமாவின் போது, மங்கோலியாவுக்கு ஐந்து புனிதச் சின்னங்கள் அனுப்பப்பட்டன.  குஷி நகருக்கு  இலங்கையில் இருந்து புனிதச் சின்னங்கள் வந்தன. இதேபோல, கோவாவின் புனித கெட்டேவான் மரபும், இந்தியாவில் பாதுகாப்புடன் இருக்கிறது. இந்தப் புனிதச் சின்னங்கள் அனுப்பப்பட்டபோது ஜார்ஜியாவில் உற்சாகம் காணப்பட்டது.  நமது பாரம்பரியம் உலக ஒற்றுமையின் முன்னோடியாக மாறி வருகிறது.

நண்பர்களே, நம்முடைய இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து எடுத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. பல இயற்கை சீற்றங்களின் உண்மையான முகத்தையும், அதனை இந்த பூமி எதிர் கொண்ட விதத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் மாபெரும் முயற்சியால் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிறுதானியங்களின் அளப்பறிய பயன்கள் உலக நாடுகளுக்கு முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கிறது.  சிறு தானியங்கள் மற்றும் பிற தானியங்களின் வரலாற்றை, எதிர்கால சந்ததிக்கு முன்னிறுத்த ஏதுவாக புதிய அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும்.

நண்பர்களே, ஒவ்வொரு குடும்பமும், தங்களுடைய குடும்பத்தினருக்காக குடும்ப  அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் இன்று சாதாரண நிகழ்வுகளாக தோன்றும் சம்பவங்கள் எதிர்கால சந்ததிக்கு உணவுப்பூர்வமான உடைமையாக மாறும். இதேபோல் பள்ளிகளும், உயர்கல்வி நிறுவனங்களும், நகரங்களும் தங்களுடைய அருங்காட்சியகங்களை அமைப்பது, எதிர்கால சந்ததிக்கு மிகப்பெரிய வரலாற்று உடைமையாக உருமாறும்.

அவ்வாறு அமைக்கப்படும் அருங்காட்சியகங்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான  வாய்ப்பாக மாறும். அதற்காக இளைஞர்களை அருங்காட்சியகப் பணியாளர்களாகக் கருதக் கூடாது. வரலாறு மற்றும் கட்டிடக்கலை துறை சார்ந்த இளைஞர்கள், உலகளாவிய கலாச்சார நடவடிக்கைகளின் அங்கமாக மாறும் வாய்ப்பிருக்கிறது. நம்முடைய கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொண்டதை, நிகழ்காலத்தில் பயன்படுத்த இளைஞர்கள்  முன்வரும்போது, அவர்கள் தேசத்தின் பாரம்பரியத்தையும் உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் கருவியாக அறியப்படுவார்கள்.

நண்பர்களே, பண்டைய கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் கலைப் பொருட்கள் கடத்தப்படுவது  பலநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இது பெரும் சவாலாகவும் மாறியுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பும், அதற்கு பின்பும் இந்தியாவிலிருந்து பல கலைப்பொருட்கள் நியாயமற்ற முறையில் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கின்றன.  இந்தக் குற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். உலகின் பல நாடுகளும் இந்தியாவின் பொருட்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்ப முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.  பனாரஸிலிருந்து கடத்தப்பட்ட மாதா அன்னபூரணி சிலை, குஜராத்திலிருந்து திருடப்பட்ட மகிஷாசூரமர்தினி சிலை, சோழமன்னர் காலத்து நடராஜர் சிலை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.  கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 240 பண்டைய கலைப்பொருட்கள் பிற நாடுகளிலிருந்து மீட்கப்பட்டு இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு பிறகான கடந்த 70 ஆண்டுகளில் 20க்கும் குறைவான கலைப் பொருட்களே மீட்கப்பட்டன. அதே நேரத்தில்  கடந்த 9 ஆண்டு ஆட்சிக்காலத்தில், கலாச்சாரக் கலைப்பொருட்களின் கடத்தல் கணிசமாக குறைந்திருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள கலை ஆர்வலர்கள், குறிப்பாக அருங்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டவர்கள், இந்தத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். நம்முடைய பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நாம் புதிய மரபை உருவாக்குவோம்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.

***

AD/PKV/DL