Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


நமோ புத்தாய!

கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,

மீண்டும் ஒருமுறை, சர்வதேச அபிதம்ம தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இரக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றின் மூலமே உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என்பதை அபிதம்ம தினம்  நமக்கு நினைவூட்டுகிறது. இதேபோன்ற நிகழ்வு 2021-ல் குஷிநகரில் நடைபெற்றது. அதிலும் பங்கேற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எனது பிறப்பிலிருந்து தொடங்கிய பகவான் புத்தருடனான உறவுப் பயணம் தடையின்றி தொடர்வது எனது அதிர்ஷ்டம். நான் குஜராத்தின் வாத்நகரில் பிறந்தேன். அது ஒரு காலத்தில் புத்த மதத்தின் சிறந்த மையமாக இருந்தது. இந்த உத்வேகங்களால் வாழ்ந்து, புத்தரின் தம்மத்தையும் போதனைகளையும் பரப்புவதில் நான் ஏராளமான அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பாரதத்தின் வரலாற்று பௌத்த யாத்திரை தளங்களைப் பார்வையிட்டதிலிருந்து, புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் உள்ள லும்பினிக்குச் சென்றதிலிருந்து, மங்கோலியாவில் அவரது சிலையை திறந்து வைத்தது முதல், இலங்கையில் வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்றது வரை பல புனித நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சங்கங்கள் மற்றும் சாதகர்களின் இந்த இணைப்பு புத்த பகவானின் ஆசீர்வாதத்தின் விளைவாகும் என்று நான் நம்புகிறேன். இன்று அபிதம்ம தினத்தை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும், புத்தரை பின்பற்றும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஷரத் பூர்ணிமாவின் புனிதமான பண்டிகையும் கூட. இன்று பாரத உணர்வின் மாபெரும் முனிவரான வால்மீகி அவர்களின் பிறந்த நாளும் கூட. ஷரத் பூர்ணிமா மற்றும் வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்புக்குரிய நண்பர்களே,

இந்த ஆண்டு, அபிதம்ம தினக் கொண்டாட்டத்துடன் ஒரு வரலாற்று சாதனையும் இணைக்கப்பட்டுள்ளது. புத்த பகவானின் அபிதம்மப் பாரம்பரியம், அவரது வார்த்தைகள் மற்றும் போதனைகளை உலகிற்கு வழங்கிய பாலி மொழியை இந்த மாதம் பாரத அரசு செம்மொழியாக அறிவித்துள்ளது. எனவே, இன்றைய சந்தர்ப்பம் இன்னும் சிறப்பானதாகிறது. பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரித்திருப்பது புத்த பகவானின் மகத்தான பாரம்பரியத்திற்கு கிடைத்த கௌரவமாகும். அபிதம்மம் என்பது தர்மத்தில் உள்ளார்ந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தம்மத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள, பாலி மொழி அறிவு அவசியம். தம்மம் என்றால் புத்தரின் செய்தி, புத்தரின் கொள்கைகள்… தம்மம் என்றால் மனித இருப்பு தொடர்பான கேள்விகளுக்கு தீர்வு… தம்மம் என்றால் மனித குலத்தின் அமைதிக்கான பாதை… தம்மம் என்றால் புத்தரின் காலத்தால் அழியாத போதனைகள்… தம்மம் என்றால் மனித குலம் முழுமைக்குமான நல்வாழ்வின் அசைக்க முடியாத உத்தரவாதம்! புத்த பகவானின் தம்மத்தால் உலகம் முழுவதும் ஞானம் பெற்றுள்ளது.

ஆனால் நண்பர்களே,

துரதிர்ஷ்டவசமாக, புத்தரின் மூல வார்த்தைகள் உள்ள பண்டைய பாலி மொழி இன்று பொதுப் பயன்பாட்டில் இல்லை. மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல! மொழி என்பது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் ஆன்மா. ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய சாரத்தை சுமந்து செல்கிறது. எனவே, புத்த பகவானின் வார்த்தைகளை அவற்றின் அசல் உணர்வில் உயிர்ப்புடன் வைத்திருக்க பாலி மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை எங்கள் அரசு பணிவுடன் நிறைவேற்றியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது புத்த பெருமானின் லட்சக்கணக்கான சீடர்கள், ஆயிரக்கணக்கான துறவிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் தாழ்மையான முயற்சியாகும். இந்த மகத்தான முடிவுக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

மதிப்புக்குரிய நண்பர்களே,

மொழி, இலக்கியம், கலை, ஆன்மிகம் என்பவை ஒரு தேசத்தின் இருப்பை வரையறுக்கும் பொக்கிஷங்கள். அதனால்தான், உலகில் எந்த நாடாவது சில நூறு ஆண்டுகள் பழமையான ஒன்றைக் கண்டுபிடித்தால், அதை பெருமையுடன் உலகத்தின் முன் வைக்கிறது. ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரியத்தை அதன் அடையாளத்துடன் இணைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் பாரதம் மிகவும் பின்தங்கியிருந்தது. சுதந்திரத்திற்கு முன்பு, படையெடுப்பாளர்கள் பாரதத்தின் அடையாளத்தை அழிக்கும் நோக்கம் கொண்டிருந்தனர், சுதந்திரத்திற்குப் பின், காலனித்துவ மனநிலை கொண்டவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். பாரதத்தில் ஒரு சூழல் அமைப்பு நம்மை எதிர் திசையில் தள்ள வேலை செய்தது. பாரதத்தின் ஆன்மாவில் வசிக்கும் புத்தரும், சுதந்திரத்தின் போது பாரதத்தின் சின்னங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தரின் சின்னங்களும் அடுத்தடுத்த தசாப்தங்களில் படிப்படியாக மறக்கப்பட்டன. பாலி மொழி அதன் சரியான இடத்தைப் பெற எழுபது ஆண்டுகள் ஆனது.

ஆனால் நண்பர்களே,

தேசம் இப்போது அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் சுய பெருமையுடன் முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, நாடு பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதனால்தான் இன்று, பாலி ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்படும் அதே வேளையில், மராத்திக்கும் அதே மரியாதை அளிக்கப்படுகிறது. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரோடு இது இனிமையாக இணைகிறது என்பது எவ்வளவு அழகான தற்செயல் நிகழ்வு. பௌத்தத்தின் சிறந்த சீடரான பாபாசாகேப் அம்பேத்கர் பாலி மொழியில் தம்ம தீட்சை பெற்றார், அவரது தாய்மொழி மராத்தி. அதேபோல், வங்காளம், அசாமி, பிராகிருதம் ஆகிய  மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளோம்.

நண்பர்களே,

பாரதத்தின் இந்த மொழிகள் நமது பன்முகத்தன்மையை வளர்க்கின்றன. கடந்த காலத்தில், நமது ஒவ்வொரு மொழியும் தேச நிர்மாணத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இன்று நாடு ஏற்றுக்கொண்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையும் இந்த மொழிகளைப் பாதுகாக்கும் கருவியாக மாறி வருகிறது. நாட்டின் இளைஞர்களுக்குத் தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மொழிகள் இன்னும் வலுவாக வளர்ந்து வருகின்றன.

நண்பர்களே,

எங்களது தீர்மானங்களை நிறைவேற்ற செங்கோட்டையில் இருந்து ஐந்து உறுதிமொழிகள் என்ற தொலைநோக்கு பார்வையை தேசத்திற்கு வழங்கினோம். ஐந்து உறுதிமொழிகள் என்றால் – வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைத்தல்! காலனிய மனநிலையிலிருந்து விடுபடுதல்! தேசத்தின் ஒற்றுமை! கடமைகளை  நிறைவேற்றுதல்! நமது பாரம்பரியத்தில் பெருமை! அதனால்தான் இன்று, பாரதம் விரைவான வளர்ச்சி, அதன் வளமான பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு ஆகிய இரண்டையும் அடைய செயல்பட்டு வருகிறது. புத்தருடன் தொடர்புடைய பாரம்பரியத்தை பாதுகாப்பது இந்த இயக்கத்தின் முன்னுரிமையாகும். புத்த தலங்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக பாரதத்திலும் நேபாளத்திலும் புத்தர் தொடர்பான இடங்களை நாம் எவ்வாறு மேம்படுத்தி வருகிறோம் என்பதைப் பாருங்கள். குஷிநகரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. லும்பினியில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். லும்பினியிலேயே புத்த மத பல்கலைக் கழகத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் புத்த ஆய்வுகளுக்கான இருக்கையை நாங்கள் நிறுவியுள்ளோம். புத்த கயா, ஷ்ராவஸ்தி, கபிலவஸ்து, சாஞ்சி, சத்னா, ரேவா போன்ற இடங்களில் பல வளர்ச்சித் திட்டங்கள் நடந்து வருகின்றன. மூன்று நாட்கள் கழித்து, அக்டோபர் 20-ம் தேதி, சாரநாத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்படும். வாரணாசிக்கு நான் பயணம் மேற்கொள்கிறேன். புதிய கட்டுமானங்களுடன், நமது கடந்த காலத்தையும் பாதுகாத்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து 600-க்கும் அதிகமான பண்டைய பாரம்பரிய கலைப்பொருட்கள், கலைப்படைப்புகள் மற்றும் நினைவுச்சின்னங்களை நாங்கள் மீண்டும் கொண்டு வந்துள்ளோம். இந்த நினைவுச்சின்னங்களில் பல பௌத்தத்துடன் தொடர்புடையவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புத்தரின் மரபின் மறுமலர்ச்சியில் பாரதம் தனது கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் புதிதாக முன்வைக்கிறது.

மதிப்புக்குரிய நண்பர்களே,

புத்தர் மீதான பாரதத்தின் நம்பிக்கை தனக்காக மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் சேவை செய்யும் பாதையாகும். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்தத் திசையில் அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மியான்மர், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் பாலி மொழியில் வர்ணனைகள் தொகுக்கப்படுகின்றன. பாரதத்திலும் கூட இதுபோன்ற முயற்சிகளை நாங்கள் துரிதப்படுத்தி வருகிறோம். பாரம்பரிய முறைகளுடன், இணைய தளங்கள், டிஜிட்டல் காப்பகங்கள்,  செயலிகள் மூலம் பாலி மொழியை விளம்பரப்படுத்துகிறோம். புத்த பகவானைப் பற்றி நான் முன்னரே சொல்லியிருக்கிறேன் – “புத்தர் என்பவர் ஞானம், புத்தரும் ஆராய்ச்சியாளர்தான்”. எனவே, பகவான் புத்தரை அறிய கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். நமது சங்கங்களும், நமது புத்த நிறுவனங்களும், நமது துறவிகளும் இந்த திசையில் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மதிப்புக்குரிய நண்பர்களே,

21 ஆம் நூற்றாண்டும் இன்றைய புவிசார் அரசியல் நிலைமையும்… உலகம் மீண்டும் பல நிச்சயமற்ற தன்மைகளாலும் நிலையற்ற தன்மைகளாலும் சூழப்பட்டுள்ளது. இதுபோன்ற காலங்களில், புத்தர் பொருத்தமானவர் மட்டுமல்ல, அவசியமானவராகவும் மாறியுள்ளார். நான் ஒருமுறை ஐக்கிய நாடுகள் சபையில் சொன்னேன்: பாரதம் உலகிற்கு போரை அல்ல, புத்தரை கொடுத்துள்ளது. இன்று, முழு உலகமும் தீர்வுகளை போரில் அல்ல, புத்தரிடம் காணும் என்று நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். இந்த அபிதம்ம தினத்தில், நான் உலகிற்கு அழைப்பு விடுக்கிறேன்: புத்தரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்… போரில் இருந்து விலக… அமைதிக்கு வழி வகுக்க… ஏனெனில், புத்தர் “அமைதியை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை” என்று கூறுகிறார்.

நண்பர்களே,

எங்கள் அரசின் பல முடிவுகள் புத்தர், தம்மம் மற்றும் சங்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ளன. இன்று, உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும், முதலில் பதிலளிப்பவராக பாரதம் உள்ளது. இது புத்தரின் கருணைக் கொள்கையின் நீட்சியாகும். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கமாக இருந்தாலும் சரி, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி, கொவிட்-19 பெருந்தொற்று காலமாக இருந்தாலும் சரி, பாரதம் உதவி செய்ய  முன்வந்தது. பாரத் அனைவரையும் ‘விஸ்வ பந்து’ (உலகளாவிய நண்பன்) என அழைத்துச் செல்கிறது. யோக இயக்கமாகட்டும், சிறுதானியங்கள் தொடர்பான இயக்கமாகட்டும், ஆயுர்வேதமாகட்டும் அல்லது இயற்கை விவசாயம் தொடர்பான இயக்கமாகட்டும், நமது பல முயற்சிகளுக்குப் பின்னால் புத்த பகவானின் உத்வேகம் இருக்கிறது.

மதிப்புக்குரிய நண்பர்களே,

பாரதம் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நகரும் போது, அது அதன் வேர்களையும் பலப்படுத்துகிறது. பாரதத்தின் இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும் அதே நேரத்தில் அவர்களின் கலாச்சாரம் மற்றும் மாண்புகள் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த முயற்சிகளில், புத்த மதத்தின் போதனைகள் நமக்குப் பெரிதும் வழிகாட்டுகின்றன. நமது துறவிகளின் வழிகாட்டுதலுடனும், புத்தரின் போதனைகளுடனும், நாம் தொடர்ந்து இணைந்து முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன்.

இந்த நன்னாளில், இந்த நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலி மொழி செம்மொழியாக மாறிய பெருமையுடன், இந்த மொழியைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அந்த உறுதிப்பாட்டை நாம் எடுத்துக்கொண்டு, அதை நிறைவேற்ற பாடுபடுவோம். இந்த எதிர்பார்ப்புகளுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமோ புத்தாய!

*****

(Release ID: 2065687)

SMB/KR

 

 

 

 

***

(Release ID: 2065687)