நிலவுக்கு சந்திரயான் –3 திட்டத்தின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடுவதில் மத்திய அமைச்சரவை நாட்டு மக்களுடன் இணைகிறது. நமது விஞ்ஞானிகளின் மகத்தான சாதனையையும் அமைச்சரவை பாராட்டுகிறது. இது நமது விண்வெளி நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏற்றத்தின் பிரகாசமான அடையாளமாகும். ஆகஸ்ட் 23-ம் தேதி “தேசிய விண்வெளி தினமாக” கொண்டாடப்படுவதை அமைச்சரவை வரவேற்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முயற்சிகளுக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு தெரிவித்துள்ளது. நமது விஞ்ஞானிகளுக்கு நன்றி. நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா. கணிக்கப்பட்ட துல்லியத்துடன், நிலவில் தரையிறங்குவது ஒரு முக்கியமான சாதனையாகும். கடினமான சூழ்நிலைகளை கடந்து, நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்குவது, பல நூற்றாண்டுகளாக மனித அறிவின் எல்லைகளை உயர்த்த முயன்று வரும் நமது விஞ்ஞானிகளின் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். சந்திரனில் இருந்து ‘பிரக்யான்’ ரோவர் அனுப்பும் தகவல் வளம் அறிவை மேம்படுத்துவதோடு, சந்திரன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மர்மங்கள் குறித்த அடிப்படை கண்டுபிடிப்புகளுக்கும் நுண்ணறிவுகளுக்கும் வழிவகுக்கும்.
விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான தேடல் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், இந்தியாவின் விஞ்ஞானிகள் அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தின் பிரகாசமான கலங்கரை விளக்கங்களாக நிற்கிறார்கள் என்று அமைச்சரவை உறுதியாக நம்புகிறது. அவர்களின் பகுப்பாய்வுத் திறன், விசாரணை மற்றும் ஆய்வுக்கான தீவிர அர்ப்பணிப்புடன் இணைந்து, உலகளாவிய அறிவியல் சாதனைகளில் நாட்டை தொடர்ந்து முன்னணியில் கொண்டு சென்றுள்ளது. அவர்களின் விடாமுயற்சி, தளராத ஆர்வம், சவால்களை வெல்லும் அசைக்க முடியாத உத்வேகம் ஆகியவை சர்வதேச அரங்கில் அவர்களின் நற்பெயரை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், எண்ணற்ற மற்றவர்களுக்கு பெரிய கனவு காணவும், உலகளாவிய அறிவின் பரந்த கட்டமைப்பிற்கு பங்களிக்கவும் தூண்டியுள்ளன.
சந்திரயான் –3 இன் வெற்றி மற்றும் பொதுவாக இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் வெற்றிக்கு ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பங்களித்துள்ளனர் என்பதைக் கண்டு அமைச்சரவை பெருமிதம் கொள்கிறது. இது வரும் ஆண்டுகளில் பல ஆர்வமுள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிக்கும்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் முன்மாதிரியான தலைமைக்காகவும், மனித நலன் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகவும் அமைச்சரவை பாராட்டுகிறது. நமது விஞ்ஞானிகளின் திறன்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும், அவரது இடைவிடாத ஊக்கமும் அவர்களின் உணர்வை எப்போதும் பலப்படுத்தியுள்ளன.
ஒர் அரசின் தலைவராக தனது 22 ஆண்டுகளில், முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் பிரதமராகவும் திரு நரேந்திர மோடி அனைத்து சந்திரயான் திட்டங்களுடனும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் இத்தகையத் திட்டத்தின் யோசனை அறிவிக்கப்பட்டபோது அவர் முதலமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டபோது, இஸ்ரோவுக்குச் சென்று விஞ்ஞானிகளை நேரில் சென்று வாழ்த்தினார். 2019 ஆம் ஆண்டில் சந்திரயான் -2ஐ பொறுத்தவரை, இந்தியா விண்வெளியைப் பொறுத்தவரை, நிலவின் மேற்பரப்பிலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் இருந்தபோது, பிரதமரின் சாதுர்யமான தலைமைத்துவம் விஞ்ஞானிகளின் உற்சாகத்தை உயர்த்தியது, அவர்களின் உறுதியை வலுப்படுத்தியது மற்றும் அதிக நோக்கத்துடன் இந்த பணியைத் தொடர அவர்களுக்கு உத்வேகம் அளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை எளிதாக்கும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விண்வெளித் துறையைப் பொறுத்தவரை, இந்தியாவில் தனியார் துறை மற்றும் நமது புத்தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதை பிரதமர் மோடி உறுதி செய்தார். தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் சூழலை உருவாக்கவும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் பெரும் பங்கை ஈர்க்கவும் விண்வெளித் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இன்-ஸ்பேஸை நிறுவுவது ஜூன் 2020 இல் தொடங்கப்பட்டது. விண்வெளி உலகில் இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கான ஒரு கருவியாக இது மாறியுள்ளது. ஹேக்கத்தான்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இளம் இந்தியர்களுக்கு பல வாய்ப்புகளைத் திறந்துள்ளது.
நிலவில் உள்ள இரண்டு புள்ளிகளுக்கு திரங்கா பாயிண்ட் (சந்திரயான் –2 இன் கால்தடம்) மற்றும் சிவசக்தி புள்ளி (சந்திரயான் -3 இன் தரையிறங்கிய இடம்) என்று பெயரிடப்பட்டதை அமைச்சரவை வரவேற்கிறது. இந்தப் பெயர்கள் நவீனத்துவ உணர்வைத் தழுவும் அதே வேளையில் நமது கடந்த காலத்தின் சாராம்சத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த பெயர்கள் வெறும் தலைப்புகளை விட அதிகம். அவை நமது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தை நமது அறிவியல் விருப்பங்களுடன் நுணுக்கமாக இணைக்கும் ஒரு நூலை நிறுவுகின்றன.
“ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்“ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலுக்கு சந்திரயான் –3 இன் வெற்றி மிகப்பெரிய சான்றாகும். விண்வெளித் துறை இப்போது உள்நாட்டில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேலும் திறக்க உதவும். அதனால் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பளிக்கும். இது இந்திய இளைஞர்களுக்கு உலகின் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
சந்திரயான் –3 திட்டத்தின் வெற்றியிலிருந்து கிடைக்கும் அறிவு மனிதசமுதாயத்தின் நன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளின் நன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்படும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறியதன் மூலம், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலகம் ஒரு குடும்பம் என்ற நமது காலத்தால் அழியாத நம்பிக்கையின் உணர்வை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்தின் சுடர் எப்போதும் மற்ற இடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும்.
விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றங்கள் வெறுமனே மகத்தான அறிவியல் சாதனைகளை விட அதிகம் என்று அமைச்சரவை நம்புகிறது. அவை முன்னேற்றம், தற்சார்பு மற்றும் உலகளாவிய தலைமை பற்றிய பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இது வளர்ந்து வரும் புதிய இந்தியாவின் அடையாளமாகும். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் வானிலை ஆய்வு முதல் வேளாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மை வரை தொழில்துறைகளில் அதிக வாய்ப்புகளை உருவாக்க இந்த முன்னேற்றங்களைப் பயன்படுத்துமாறு நமது குடிமக்களை கேட்டுக்கொள்கிறோம். நமது கண்டுபிடிப்புகள் களத்தில் நேரடி பயன்பாடுகளைக் கொண்டிருப்பதையும், நமது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகரிப்பதையும், பல்வேறு துறைகளுக்கு முக்கியமான தரவுகளை வழங்குவதையும் உறுதி செய்ய நாம் பணியாற்ற வேண்டும்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் இந்த சகாப்தத்தில், கல்வி உலகத்துடன் தொடர்புடையவர்கள் அதிக இளைஞர்களை அறிவியலை நோக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று அமைச்சரவை குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறது. சந்திரயான் -3 இன் வெற்றி இந்த துறைகளில் ஆர்வத்தின் தீப்பொறியைத் தூண்டுவதற்கும், நம் நாட்டில் உள்ள வாய்ப்புகளின் சாளரத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒரு மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியில் பங்களித்த ஒவ்வொரு தனிநபரையும் இந்த அமைச்சரவைப் பாராட்டுகிறது. சந்திரயான் -3 ஆர்வம், விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்பதற்கான பிரகாசமான சான்றாகும் என்பதை ஒப்புக்கொள்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க நாட்டு மக்கள், தங்கள் இதயங்களில் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்து தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள் என்றும் அமைச்சரவை நம்பிக்கை தெரிவிக்கிறது.
***
AD/ANU/IR/RS/GK