சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்று புத்தாண்டின் புனிதமான தொடக்கத்தையும், நவராத்திரியின் முதல் நாளையும் குறிக்கும் வகையில் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலம் மாதா மகாமாயாவின் பூமி என்றும், மாதா கௌசல்யாவின் தாய்வழி வீடு என்றும் கூறினார். தெய்வீகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஒன்பது நாட்களின் சிறப்பு முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். நவராத்திரியின் முதல் நாளில் சத்தீஸ்கரில் தனது பாக்கியத்தை வெளிப்படுத்திய அவர், பக்த சிரோமணி மாதா கர்மாவை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டதற்காக அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். சத்தீஸ்கரில் ராமர் மீதான தனித்துவமான பக்தியை எடுத்துக்காட்டுகின்ற ராம நவமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா முடிவடையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், அவர்களை ராமரின் தாய்வழி குடும்பம் என்று குறிப்பிட்டார்.
இந்த புனிதமான தருணத்தில் மொஹபட்டா சுயம்பு சிவலிங்க மகாதேவின் ஆசீர்வாதங்களுடன், சத்தீஸ்கரின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். ஏழைகளுக்கான வீட்டுவசதி, பள்ளிகள், சாலைகள், ரயில்வே, மின்சாரம், எரிவாயு குழாய்கள் உள்ளிட்ட ₹ 33,700 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டப்பட்டதை அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் சத்தீஸ்கர் குடிமக்களின் வசதிகளை மேம்படுத்துவதையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறினார். இந்த வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தங்குமிடம் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அதை ஒரு பெரிய விஷயம் என்று அழைத்தார். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஒருவரின் கனவை நனவாக்குவது ஈடு இணையற்ற மகிழ்ச்சி என்று கூறினார். நவராத்திரி, புத்தாண்டை முன்னிட்டு, சத்தீஸ்கரில் மூன்று லட்சம் ஏழைக் குடும்பங்கள் தங்கள் புதிய வீடுகளில் நுழைவதை அவர் எடுத்துரைத்தார். இந்த குடும்பங்களுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சத்தீஸ்கரில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுவசதி என்ற கனவு முன்பு அதிகாரத்துவ கோப்புகளில் தொலைந்துவிட்டது என்று குறிப்பிட்ட அவர், தமது தலைமையின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையே இந்த வீடுகளின் நனவை நனவாக்கியது என்று கூறினார். இந்தக் கனவை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை அவர் நினைவுகூர்ந்தார். திரு. விஷ்ணு தியோ தலைமையின் கீழ், அமைச்சரவை 18 லட்சம் வீடுகளைக் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது என்றும், அவற்றில் மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் பல இல்லங்கள் பழங்குடியினர் பகுதிகளில் உள்ளன என்றும், பஸ்தார், சர்குஜாவில் உள்ள குடும்பங்கள் பயனடைகின்றன என்றும் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், தற்காலிக தங்குமிடங்களில் பல தலைமுறைகளாக கஷ்டங்களை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு இந்த இல்லங்கள் ஏற்படுத்தும் மாற்றத்தக்க தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார்.
“இந்த வீடுகளைக் கட்டுவதற்கு அரசு உதவி அளித்த நிலையில், பயனாளிகள் தாங்களாகவே தங்கள் கனவு இல்லங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்தனர்” என்று கூறிய திரு மோடி, இந்த வீடுகள் வெறும் நான்கு சுவர்கள் அல்ல, மாறாக வாழ்க்கையின் மாற்றம் என்றார். இந்த வீடுகளில் கழிப்பறைகள், மின்சாரம், உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் மற்றும் குழாய் நீர் போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் தயார்படுத்துவதற்கான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறிப்பிட்ட அவர், இந்த இல்லங்களில் பெரும்பாலானவை பெண்களுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டார். முதன்முறையாக ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்திருப்பதை அவர் குறிப்பிட்டார். இந்த பெண்களின் முகங்களில் பிரதிபலிக்கும் மகிழ்ச்சி, ஆசீர்வாதங்களுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். இது தமது மிகப்பெரிய சொத்து என்று அவர் கூறினார்.
லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டதன் விரிவான தாக்கத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இது உள்ளூர் கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், இந்த வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளூரிலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும், இதனால் சிறு கடைக்காரர்கள், போக்குவரத்து இயக்குபவர்கள் பயனடைவார்கள் என்றும் கூறினார். இந்த வீட்டுவசதித் திட்டங்கள் சத்தீஸ்கரில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன, பலரின் வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பு செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
சத்தீஸ்கர் மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் தங்கள் அரசு நிறைவேற்றி வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, பல்வேறு திட்டங்களின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பயனாளிகள் அங்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டினார். அரசு அளித்த உத்தரவாதங்கள் விரைவாக அமல்படுத்தப்படுவதை அவர் எடுத்துரைத்தார். நெல் விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகள் நிலுவையில் உள்ள போனஸ் வழங்கியது, அதிகபட்ச குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்தது உட்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வழங்கியுள்ளன என அவர் கூறினார். ஆட்சேர்ப்பு தேர்வு மோசடிகளுக்காக முந்தைய அரசை விமர்சித்த பிரதமர், தற்போதைய அரசின் வெளிப்படையான விசாரணைகள், தேர்வுகள் நேர்மையாக நடத்தப்படுவதை எடுத்துரைத்தார். இந்த நேர்மையான முயற்சிகள் அதிகரித்து வரும் ஆதரவுடன் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார். இது சத்தீஸ்கரில் சட்டமன்றம், மக்களவை, இப்போது நகராட்சி தேர்தல்களில் அது பெற்ற வெற்றிகளிலிருந்து தெளிவாகிறது என கூறிய அவர், தங்களது அரசின் முன்முயற்சிகளுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவான 25-வது ஆண்டு என்றும், இந்த ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் என்பதால், மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடுவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். சத்தீஸ்கர் அரசு 2025-ம் ஆண்டை அடல் நிர்மாண் ஆண்டாக கடைபிடிக்கிறது என்று கூறிய அவர், வளர்ச்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இன்று தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் இந்த தீர்மானத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.
வளர்ச்சியின் பலன்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சென்றடையாததால் அது தனி மாநிலமாக உருவாக்கப்பட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், முந்தைய அரசு வளர்ச்சியை வழங்கத் தவறியதற்காகவும், மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஊழல் நடந்ததாகவும் விமர்சித்தார். மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்க்கை, வசதிகள், குழந்தைகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். சத்தீஸ்கரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
தரமான சாலைகள் தற்போது முதன்முறையாக சென்றடையும் தொலைதூர பழங்குடியினர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சுட்டிக் காட்டிய திரு மோடி, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தது உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டதை குறிப்பிட்டார். மின்சாரம், குழாய் நீர், மொபைல் கோபுரங்களின் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். புதிய பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் கட்டப்படுவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த முன்முயற்சிகள் சத்தீஸ்கரின் நிலப்பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக வலியுறுத்தினார்.
முழுமையாக மின்மயமாக்கப்பட்ட ரயில் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் மாறியிருப்பதை எடுத்துரைத்த பிரதமர், இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறினார். மாநிலத்தில் தற்போது சுமார் ₹ 40,000 கோடி மதிப்புள்ள ரயில் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், பல்வேறு பிராந்தியங்கள், அண்டை மாநிலங்களில் ரயில் இணைப்பை மேம்படுத்த இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹ 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வளர்ச்சிக்கு பட்ஜெட் ஆதரவு, நேர்மையான நோக்கங்கள் ஆகிய இரண்டும் தேவை என்று வலியுறுத்திய திரு மோடி, முந்தைய அரசின் ஊழல், திறமையின்மை ஆகியவை பழங்குடியினர் பகுதிகளில் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தது என்று விமர்சித்தார். நிலக்கரியின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர், சத்தீஸ்கரில் ஏராளமான இருப்புக்கள் இருந்தபோதிலும், முன்பு மின் உற்பத்தி நிலையங்களை புறக்கணித்ததால் மாநிலம் மின்சார பற்றாக்குறையை எதிர்கொண்டது என்று குறிப்பிட்டார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாநிலத்திற்கு நம்பகமான மின்சாரத்தை உறுதி செய்யவும் தங்கள் அரசின் கீழ் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
சூரிய மின்சக்தியில் அரசு கவனம் செலுத்தி வருவதையும், மின்சாரக் கட்டணங்களை ஒழித்து, மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் வீடுகள் வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரதமர் சூரிய சக்தி மேற்கூரை வீடுகள் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்துவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ₹ 78,000 நிதியுதவியை அரசு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். சத்தீஸ்கரில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளதாகவும், குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற மற்றவர்களை சேர ஊக்குவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நிலத்தால் சூழப்பட்ட மாநிலமான சத்தீஸ்கருக்கு எரிவாயுக் குழாய்களை வழங்குவதில் உள்ள சவாலை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை வலியுறுத்திய திரு மோடி, எரிவாயு உள்கட்டமைப்பில் தேவையான முதலீடுகளை முந்தைய அரசு புறக்கணித்ததாக விமர்சித்ததுடன், இப்பகுதியில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியில் நடைபெற்று வருவதையும் எடுத்துரைத்தார். இந்த குழாய்கள் பெட்ரோலியப் பொருட்களுக்கான லாரிப் போக்குவரத்தை சார்ந்திருப்பதைக் குறைக்கும், நுகர்வோருக்கான செலவுகளைக் குறைக்கும், சிஎன்ஜி வாகனங்களைப் பயன்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, குழாய் மூலம் சமையல் எரிவாயு மூலம் வீடுகள் பயனடையும் என்று அவர் குறிப்பிட்டார். சத்தீஸ்கரில் எரிவாயு கிடைப்பது புதிய தொழிற்சாலைகளை நிறுவ உதவும் என்றும், குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
முந்தைய அரசின் கொள்கைகளை விமர்சித்த பிரதமர், சத்தீஸ்கர், பிற மாநிலங்களில் நக்சலிசத்தின் எழுச்சிக்கு அவை பங்களித்தன என்று கூறினார். வளர்ச்சி, வளங்கள் இல்லாத பகுதிகளில் நக்சலிசம் செழித்து வளர்கிறது என்றும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அத்தகைய மாவட்டங்கள் பின்தங்கியதாக அறிவிக்கப்பட்டு, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்தன என்றும் கூறினார். முந்தைய அரசின் ஆட்சியில் சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். மாறாக, ஏழை பழங்குடியின சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இந்த அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். கழிப்பறை வசதி ஏற்படுத்த தூய்மை இந்தியா திட்டம், ₹ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகளை வழங்கும் பிரதமர் மக்கள் மருந்தக மையங்கள் அமைத்தல் போன்ற முன்முயற்சிகளை அவர் குறிப்பிட்டார்.
பழங்குடியின சமூகத்தை புறக்கணித்துவிட்டு சமூக நீதிக்காக போராடுவதாக பொய்யாக கூறுபவர்களை பிரதமர் விமர்சித்தார். சத்தீஸ்கரில் உள்ள சுமார் 7,000 பழங்குடி கிராமங்களுக்கு பயனளிக்கும் வகையில், பழங்குடியினர் பகுதிகளில் சுமார் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் “தர்தி ஆபா ஜன்ஜாதியா உத்கர்ஷ் அபியான்” தொடங்கப்பட்டதை எடுத்துரைத்து, பழங்குடியின சமூகங்களின் வளர்ச்சிக்கு தமது அரசின் உறுதிப்பாட்டை அவர் விளக்கினார். குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்த சமூகங்களுக்காக இந்த வகையான முதல் முயற்சியான “பிரதமரின் ஜன்மன் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டதை குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், சத்தீஸ்கரின் 18 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் ஜன்மன் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் நாடு முழுவதும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்காக 5,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதை அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சியின் கீழ் பல பயனாளிகள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசுகளின் கீழ் சத்தீஸ்கரில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றத்தை எடுத்துரைத்த திரு மோடி, சுக்மா மாவட்ட சுகாதார மையம் தேசிய தரச் சான்றிதழைப் பெற்றது மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்டேவாடாவில் ஒரு சுகாதார மையத்தை மீண்டும் திறந்தது போன்ற சாதனைகள் கொண்டு வந்த புதிய நம்பிக்கை குறித்து குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீடித்த அமைதிக்கான புதிய சகாப்தத்தை உருவாக்குகின்றன என்று அவர் கூறினார். சத்தீஸ்கரில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்களுக்கு சான்றாக, 2024 டிசம்பரில் தனது “மனதின் குரல்” நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பஸ்தார் ஒலிம்பிக் பற்றி குறிப்பிட்ட அவர், இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றதைக் குறிப்பிட்டார். இது மாநிலத்தின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். சத்தீஸ்கர் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு திறம்பட செயல்படுத்தி வருவதையும் பாராட்டினார். சத்தீஸ்கரில் சுமார் 350 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட நவீன பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் நிறுவப்படுவதை அவர் எடுத்துரைத்தார். இது மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக செயல்படும் எனவும் மாநிலத்தின் கல்வி முறையை உயர்த்தும் என்றும் கூறினார்.
சத்தீஸ்கரில் ஏகலைவா மாதிரி பள்ளிகள், நக்சல் பாதிப்பு பாதித்த பகுதிகளில் பள்ளிகளை மீண்டும் திறந்து சிறப்பாகப் பணியாற்றி வருவது ஆகியவற்றைப் பிரதமர் எடுத்துரைத்தார். மாநிலத்தில் வித்யா சமிக்ஷா கேந்திராவையும் அவர் திறந்து வைத்தார். இது நாட்டின் கல்வி முறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று கூறினார். இந்த முயற்சி கல்வியின் தரத்தை மேம்படுத்தும், வகுப்பறைகளில் ஆசிரியர்கள் – மாணவர்களுக்கு உடனடி ஆதரவை வழங்கும் என்று அவர் கூறினார்.
மருத்துவம், பொறியியல் படிப்புகளை இந்தி மொழியில் கற்பதற்கு வகை செய்யும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் மற்றொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட திரு மோடி, இந்த முயற்சி கிராமங்கள், பின்தங்கிய, பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மொழித் தடைகளை நீக்கி, அவர்களின் கனவுகளை அடைய உதவும் என்று தெரிவித்தார். முன்பு திரு ராமன் சிங் அமைத்த வலுவான அடித்தளத்தைப் பாராட்டிய பிரதமர், அதை மேலும் வலுப்படுத்த தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்த அடித்தளத்தின் மீது ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சிக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
சத்தீஸ்கரின் ஏராளமான வளங்கள், கனவுகள், வாய்ப்புகள் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், சத்தீஸ்கர் தனது 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாறுவதற்கான இலக்கை அடையும் என்றார். சத்தீஸ்கரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வளர்ச்சியின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய எந்த முயற்சியையும் அரசு விட்டுவிடாது என்று அவர் உறுதியளித்தார்.
சத்தீஸ்கர் ஆளுநர் திரு ராமன் டேகா, முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய், மத்திய அமைச்சர்கள் திரு மனோகர் லால், திரு டோகன் சாஹு, சத்தீஸ்கர் பேரவைத் தலைவர் திரு ராமன் சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
உள்கட்டமைப்பு மேம்பாடு, நீடித்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிலாஸ்பூரில் மின்சாரம், எண்ணெய், எரிவாயு, ரயில், சாலை, கல்வி, வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக ₹ 33,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
குறைந்த செலவிலான மின்சார விநியோகம், மின் உற்பத்தியில் தன்னிறைவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பிலாஸ்பூர் மாவட்டத்தில் ₹ 9,790 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான தேசிய அனல் மின் நிலையத்தில் சிபட் சூப்பர் அனல் மின் திட்டம் அலகு-3 (1×800 மெகாவாட்) திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். உயர் மின் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ₹ 15,800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான முதலாவது நவீன அனல் மின் திட்டத்தின் (2X660 மெகாவாட்) பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். மேற்கு மண்டல விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ₹ 560 கோடி மதிப்பிலான பவர்கிரிட் நிறுவனத்தின் மூன்று மின் பகிர்மான திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை எட்டும் வகையில், காற்று மாசுவடைவதைக் குறைத்தல் தூய்மை எரிசக்திக்கான தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கொரியா, சூரஜ்பூர், பல்ராம்பூர், சுர்குஜா மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் 200 கி.மீ உயர் அழுத்த குழாய் மற்றும் 800 கி.மீ நடுத்தர அடர்த்திக் கொண்ட பாலிஎதிலீன் குழாய் மற்றும் ₹1,285 கோடி மதிப்பிலான பல்வேறு இயற்கை எரிவாயு விநியோக விற்பனை நிலையங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். ₹2,210 கோடி மதிப்பிலான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் 540 கிலோமீட்டர் நீளமுள்ள விசாக்-ராய்ப்பூர் குழாய் அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் குழாய்கள் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்களை ஆண்டுதோறும் 3 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக அளவிற்கு கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், மொத்தம் 108 கிலோமீட்டர் நீளமுள்ள ஏழு ரயில்வே திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மொத்தம் 111 கிலோமீட்டர் நீளமுள்ள ₹ 2,690 கோடி மதிப்பிலான மூன்று ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மந்திர் ஹசவுத் வழியாக அபன்பூர் – ராய்ப்பூர் பிரிவில் புறநகர் ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சத்தீஸ்கரில் ரயில் கட்டமைப்பு வசதிகளை 100% மின்மயமாக்கும் திட்டத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இத்தகையத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்தும். இதன் மூலம் சத்தீஷ்கர் மாநிலத்தில் சமூகப் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
இந்தப் பிராந்தியத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலை எண் 930-ல் (37 கிலோமீட்டர்) மேம்படுத்தப்பட்ட ஜல்மாலா – ஷெர்பார் வரையிலான பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 43-ல் அம்பிகாபூர் – பதல்கான் பிரிவு (75 கிலோமீட்டர்) வரையில் அமைக்கப்பட்டுள்ள இருவழிப் பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை எண் 130-ல் கொண்டகான் – நாராயண்பூர் பிரிவில் (47.5 கிலோமீட்டர்) உள்ள பாதையை இருவழிப்பாதையாக மேம்படுத்தும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ₹ 1,270 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும் தொழில்துறை முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
அனைவருக்கும் கல்வியை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அம்மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 130 பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள், ராய்ப்பூரில் முழுமையான கல்வி மையம் அமைப்பது ஆகிய இரண்டு முதன்மை கல்வித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஸ்மார்ட் போர்டுகள், நவீன ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் மூலம் உயர்தர கல்வியை வழங்க வகை செய்கிறது. ராய்ப்பூரில் கல்வி தொடர்பான பல்வேறு அரசுத் திட்டங்களை இணையதளம் மூலம் கண்காணிக்கவும், தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் இத்திட்டம் உதவிடும்.
கிராமப்புற குடும்பங்களுக்கு முறையான வீட்டுவசதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 3 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளைப் பிரதமர் வழங்கினார்.
***
PLM/KV
छत्तीसगढ़ की जनता-जनार्दन से किए हर वादे को पूरा करने के लिए हम प्रतिबद्ध हैं। नवरात्रि के पहले दिन बिलासपुर में हजारों करोड़ रुपये की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण मेरे लिए सौभाग्य की बात है।https://t.co/0o7wibltEO
— Narendra Modi (@narendramodi) March 30, 2025
आज नवरात्र के शुभ दिन, नव वर्ष पर छत्तीसगढ़ के तीन लाख गरीब परिवार, अपने नए घर में गृह प्रवेश कर रहे हैं: PM @narendramodi pic.twitter.com/FZKTFSJubC
— PMO India (@PMOIndia) March 30, 2025
हमने गरीब आदिवासियों के इलाज की चिंता की: PM @narendramodi pic.twitter.com/PsCGIEalbI
— PMO India (@PMOIndia) March 30, 2025
हम आदिवासी समाज के विकास के लिए भी विशेष अभियान चला रहे हैं: PM @narendramodi pic.twitter.com/QupZy3elIK
— PMO India (@PMOIndia) March 30, 2025