Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவிட்-19 தொற்று தாக்குதல் காலத்தில் மக்களின் வாழ்க்கை


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி லிங்க்ட் இன் இணைய தளத்தில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவை அந்த இணைய தளத்தைப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

லிங்க்ட் இன் இணைய தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன:

“இந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் முற்றிலும் தலைகீழான வகையில் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் பல புதிய இடையூறுகளைக் கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொழில்முறை வாழ்க்கையின் வரையறைகளை கணிசமாக மாற்றிவிட்டது. இந்த நாட்களில், வீடு என்பது புதிய அலுவலகமாக மாறியுள்ளது. இணையம் என்பது புதிய சந்திப்பு அறையாக மாறியுள்ளது. தற்போதைக்கு, சக ஊழியர்களுடன் அலுவலக இடைவேளைகளை கழிப்பது என்பது  ஒரு வரலாறாக மாறியுள்ளது.

இந்த மாற்றங்களை நானும் இப்போது பின்பற்றி வருகிறேன். பெரும்பாலான கூட்டங்கள், அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களுடன் இருந்தாலும், இப்போது அவை காணொலிக் காட்சி மூலம் மட்டுமே நடைபெறுகின்றன. இதில் தொடர்புடைய பல்வேறு பிரிவினரிடமிருந்து அடிமட்ட அளவில் கருத்துக்களைப் பெறுவதற்காக, சமூகத்தின் பல பிரிவினருடனும் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மக்கள் சமூகக் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் விரிவான தொடர்புகள் இருந்தன. வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுடனும் இத்தகைய கருத்துப்பரிமாற்றம் இருந்தது.

 

இவைபோக, தினமும் எண்ணற்ற முறை தொலைபேசியில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமிருந்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறேன்.

இதுபோன்ற காலத்தில் மக்கள் பல்வேறு வழிகளில் தங்கள் வேலையைத் தொடருவதைக் காண முடிகிறது. வீட்டிலே தங்கி இருப்பதன் அவசியத்தை உணர்த்தும் பொருத்தமான செய்தியை வழங்கும் படைப்புத் திறன்மிக்க ஒரு சில வீடியோக்களை நமது திரைப்பட நட்சத்திரங்கள் வெளியிட்டிருக்கின்றனர். நமது பாடகர்கள் இணையம் வழியாகவே கச்சேரிகளைச் செய்தனர். செஸ் வீரர்கள் சதுரங்க விளையாட்டை டிஜிட்டல் முறையில் விளையாடினர். இதன் மூலம் அவர்கள் கோவிட்19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு தங்கள் பங்களிப்பைச் செய்தனர். இவை அனைத்தும் மிகவும் புதுமையானவை!

நாம் வேலை செய்யும் இடம் இப்போது முதலில் டிஜிட்டல் வழி என்பதாக மாறி வருகிறது. ஏன் கூடாது?

எப்படியிருப்பினும், தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தும்  தொழில் நுட்பத்தின் தாக்கமானது பெருமளவில் ஏழைகளின் வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. இத்தகைய தொழில்நுட்பம்தான் அதிகாரத்துவ ரீதியான நிலைகளை தகர்க்கிறது; இடைத்தரகர்களை அகற்றுகிறது; மேலும் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துகிறது.

இதற்கு நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தையும்  தருகிறேன். 2014 ஆம் ஆண்டில்  மக்களுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தபோது, இந்தியர்களை, குறிப்பாக ஏழைகளை அவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கு, ஆதார் ஆகியவற்றுடன் இணைக்கத் தொடங்கினோம்.

மிகவும் எளிமையாகத்  தோன்றும் இந்த இணைப்பு பல தசாப்தங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஊழல் மற்றும் ஆதாயம் தேடலை நிறுத்தியது மட்டுமின்றி, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பணத்தை இடம் மாற்றுவதற்கும் அரசாங்கத்திற்கு உதவியது. ஒரு பொத்தானின் இந்த ஒரே ஒரு அழுத்தல் அரசுக் கோப்பில் பல படிநிலை வரிசைகளையும், பல வார கால தாமதத்தையும் மாற்றி அமைத்துள்ளது.

உலகிலேயே  மிகப்பெரிய இதுபோன்ற உள்கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. கோவிட் 19  சூழ்நிலையில், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில், ஏழைகளுக்கு நேரடியாகவும் உடனடியாகவும் பணத்தை மாற்றுவதில் இந்த உள்கட்டமைப்பு எங்களுக்கு பெரிதும் உதவியுள்ளது.

மற்றொரு விஷயம் கல்வித் துறை. இந்தத் துறையில் ஏற்கனவே பல தொழில் வல்லுநர்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர். இந்த துறையில் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது அதற்கேயுரிய நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. ஆசிரியர்களுக்கு உதவவும் இணையவழி கற்றலை அதிகரிக்கவும் தீக்‌ஷா இணைய தளம் போன்ற முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அணுகல், சமபங்கு மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஸ்வயம் இணைய தளம் அமைந்துள்ளது. பல மொழிகளில் கிடைக்கும்  இ-பாடசாலா, பல்வேறு மின் புத்தகங்கள் மற்றும் அத்தகைய கற்றல் பொருட்களை அணுக உதவுகிறது.

இன்று உலகமானது புதிய வர்த்தக முன்மாதிரிகளை தேடிக் கொண்டிருக்கிறது.

இளைஞர்களைப் பெருமளவில் கொண்ட நாடாகவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் கொண்டதாகவும் திகழும் இந்தியா புதியதொரு வேலை கலாச்சாரத்தை வழங்குவதில் முன்னெடுத்து செல்ல முடியும்.

இந்தப் புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வேலை கலாச்சாரம் ஆகியவை கீழ்க்கண்ட உயிரெழுத்துகளின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும் என்றே நான் கருதுகிறேன்.

அவற்றை நான் புதிய இயல்பான உயிரெழுத்துக்கள் என்று நான் அழைக்கிறேன். ஏனெனில், ஆங்கில மொழியில் உள்ள உயிரெழுத்துக்களைப் போலவே இவையும் கூட கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகத்தில் எந்தவொரு வர்த்தக முன்மாதிரிக்கும் மிகவும் அத்தியாவசியமான உள்ளார்ந்த அம்சங்களாக மாறவிருக்கின்றன.

ஏற்றுக் கொள்ளும் திறன்:

மிகவும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வர்த்தகம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை குறித்து சிந்திப்பது இத்தருணத்திற்கான தேவை ஆகும்.

அவ்வாறு செய்வதன் பொருள் என்னவெனில், ஒரு நெருக்கடியான காலத்திலும் கூட நமது அலுவலகங்கள், வர்த்தகங்கள், வணிகம் ஆகியவை வேகமாகச் செயல்பட முடியும் என்பதோடு உயிரிழப்பு ஏற்படாதவாறு தடுப்பதையும் உறுதிப்படுத்தும்.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது என்பது இத்தகைய புதியனவற்றை ஏற்றுக்கொள்ளும் திறனுக்கான முக்கிய உதாரணமாகும். சிறிய, பெரிய கடை உரிமையாளர்களும் கூட வணிகத்தோடு, குறிப்பாக நெருக்கடியான தருணங்களில், உயிரோட்டமான தொடர்பை நிலைநிறுத்திக் கொள்ள, டிஜிட்டல் முறையிலான கருவிகளில் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும். இத்தகைய டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளில் உற்சாகமளிக்கத்தக்க முன்னேற்றத்தை இந்தியா கண்டு வருகிறது.  

மற்றொரு உதாரணம் தொலைதூர மருத்துவ சிகிச்சை முறை. உண்மையில் மருத்துவமனை அல்லது மருத்துவமனைக்குச் செல்லாமல் பல ஆலோசனைகள் பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். மீண்டும் கூறுவதெனில் இது ஒரு சாதகமான அறிகுறி. உலகெங்கிலும் இந்த தொலைதூர மருத்துவ சிகிச்சை முறை பரவுவதற்கான  வணிக மாதிரிகள் பற்றி நாம் சிந்திக்க முடியுமல்லவா?

செயல்திறன்:

ஒருவேளை, இது திறமையானது என்று நாம் குறிப்பிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகவும் இருக்கக்கூடும்.  அலுவலகத்தில் எவ்வளவு நேரம் செலவிடப்பட்டது என்பது மட்டுமே செயல்திறன் என்று ஆகிவிட முடியாது.

முயற்சிக்கான தோற்றத்தை விட உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவை மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதற்கான முன்மாதிரிகள் பற்றி நாம் ஒருவேளை சிந்திக்க வேண்டியிருக்கவும் கூடும். குறிப்பிட்ட காலக்கெடுவில் ஒரு பணியை முடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.

உள்வாங்கும் தன்மை:

ஏழைகள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் நமது கிரகத்தைப் பராமரிப்பதற்கும் கூட முன்னுரிமை அளிக்கும்படியான வணிக முன்மாதிரிகளை உருவாக்குவோம்.

பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். மனிதனின் செயல்பாடு மெதுவாக இருக்கும் நிலையிலும் கூட தன்னால் எவ்வளவு விரைவாக வளரக்கூடும் என்பதைக் காட்டுவதன் மூலம் நமது இயற்கை அன்னை தனது சிறப்பை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். இந்த பூமிக்கிரகத்தின்மீது நமது தாக்கத்தை குறைக்கும்படியான தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை வளர்ப்பதில்தான் குறிப்பிடத்தக்க எதிர்காலம் உள்ளது. குறைவான ஆதாரவளங்களைக் கொண்டு அதிகமாகச் செய்யுங்கள்.

குறைந்த செலவில், பெரிய அளவில் சுகாதார தீர்வுகளுக்காகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் நமக்கு உணர்த்தியுள்ளது. மனிதகுலத்தின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும்.

எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கள் குடிமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை  அணுகவும், தகவல், இயந்திரங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றை அணுகவும் உறுதிசெய்ய நாம் புதுமையான முயற்சிகளில் முதலீடு செய்ய வேண்டும்.

வாய்ப்பு:

ஒவ்வொரு நெருக்கடியும் அதனோடு கூடவே ஒரு வாய்ப்பையும் கொண்டு வருகிறது. இதில் கொரோனா தாக்குதலும்  வேறுபட்டதல்ல. இப்போது வெளிப்படும் புதிய வாய்ப்புகள் / வளர்ச்சிக்கான பகுதிகள் என்னவாக இருக்கும் என்பதை மதிப்பீடு செய்வோம்.

மற்றவர்களை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விட, கொரோனா தாக்குதலுக்குப்  பிந்தைய உலகில் ஏற்படவுள்ள திருப்பத்தில்  இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு நம் மக்கள், நமது திறன்கள், நமது முக்கிய திறன்கள் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.

அனைவருக்குமான ஒன்றாக:

கொரோனா வைரஸ் தனது தாக்குதலை தொடங்குவதற்கு முன்பாக இனம், மதம், நிறம், சாதி, மொழி அல்லது எல்லையை அது காணவில்லை. அதன்பிறகு நமது பதில் நடவடிக்கையும் நடத்தையும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு முதன்மை அளித்து அவற்றை இணைப்பதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

நாடுகள் அல்லது சமூகங்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிராக நின்ற, வரலாற்றின் முந்தைய தருணங்களைப் போலல்லாமல், இன்று நாம் ஒரு பொதுவான சவாலை ஒன்றுபட்டு எதிர்கொள்கிறோம். நமது எதிர்காலம் என்பது நமது ஒற்றுமை மற்றும் தாங்கும் திறன் ஆகியவை  பற்றியதாகவே இருக்கும்.

இந்தியாவிலிருந்து வெளிப்படும் அடுத்த பெரிய யோசனைகள் உலகளாவிய அதன் பொருத்தப்பாட்டையும் பயன்பாட்டையும் கண்டுபிடிப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகவும் அவை இருக்க வேண்டும்.

சாலைகள், கிடங்குகள், துறைமுகங்கள் – உள்கட்டமைப்பு என்ற கண்ணாடி வழியாக மட்டுமே ஏற்பாட்டு வசதிகள் பார்க்கப்பட்டன. ஆனால் இந்நாட்களில் ஏற்பாட்டு வசதிகளுக்கான வல்லுநர்கள் தங்கள் சொந்த வீடுகளில் உள்ள வசதிகளின் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகில் நமது கையிருப்பில் உள்ளவை மற்றும் மெய்நிகர் வசதிகளின் சரியான கலவையின் மூலம்  நவீன பன்னாட்டு சிக்கலான விநியோக சங்கிலிகளின் உலகளாவிய ஆதார மையமாக  இந்தியா உருவெடுக்கலாம். அந்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு எழுவோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.

இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்குமாறும், இந்த கலந்துரையாடலில் பங்களிக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வேலைக்கான சொந்த மேஜையை உருவாக்கிக் கொள்வது என்பதில் இருந்து வீட்டிலிருந்து வேலை செய்வது என்ற மாறுதல் அதிகாரபூர்வமான வேலைகள் மற்றும் தனிப்பட்டவை என்பவற்றை சமநிலைப்படுத்துவதில் புதிய சவால்களை கொண்டுவந்துள்ளது. அது எப்படியிருப்பினும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, போதிய உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நலத்தை மேம்படுத்தும் ஒரு வழியாக யோகாசனக் கலையை செயல்படுத்தவும் நீங்கள் முயற்சிக்கலாம்.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.  ஆரோக்கியமாக இருக்க உதவும் ஒரு நெறிமுறையை ஆயுஷ் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இவற்றையும் ஒரு முறை பாருங்கள்.

கடைசியாகவும், முக்கியமாகவும், தயவுசெய்து ஆரோக்யா சேது மொபைல் செயலியை  பதிவிறக்கிக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் பரவுவதைத் தடுக்க உதவும் வகையில் தொழில்நுட்பத்தை கையாளும் ஒரு செயலியாகும் இது. எவ்வளவு அதிகமாக இது பதிவிறக்கம் செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு அது சிறப்பாகச் செயல்படும்.

உங்கள் அனைவரிடமிருந்தும் கருத்துக்களை கேட்க  நான் காத்திருப்பேன். ”