Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவிட்-19-க்கு எதிராகப் போராடுவதற்காக ரூ.3,100 கோடியை ஒதுக்கீடு செய்தது பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை


 

கோவிட்-19-க்கு எதிராகப் போராட ரூ.3,100 கோடியை ஒதுக்கீடு செய்ய பிஎம் கேர்ஸ் (அவசரகால சூழ்நிலையில் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம்) நிதி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த ரூ.3,100 கோடியில் செயற்கை சுவாசக் கருவிகளை வாங்குவதற்கு சுமார் ரூ.2,000 கோடியும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும், தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க ரூ.100 கோடியும் பயன்படுத்தப்படும்.

இந்த அறக்கட்டளை மார்ச் 27, 2020-இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக (அலுவல்சாரா) பிரதமரும், மற்ற உறுப்பினர்களாக (அலுவல்சாரா) (ex officio) பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரும் இருப்பர். இந்தத் தொகுப்பை அறிவித்த பிரதமர், கோவிட்-19-க்கு எதிராகப் போராடுவதற்கு உதவும் வகையிலான பிரதமரின் அவசரகால நிதிக்குப் பெருந்தன்மையுடன் உதவி செய்த  அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

1) 50,000 செயற்கை சுவாசக் கருவிகள்

நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 50,000 செயற்கை சுவாசக் கருவிகளை, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து சுமார் ரூ.2,000 கோடியை பயன்படுத்தி வாங்கப்படும். கோவிட்-19 வைரசால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த செயற்கை சுவாசக்கருவிகள் வழங்கப்படும்.

2) இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள்

இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, இடம் பெயர்ந்தவர்களுக்குத் தங்கும் வசதி, உணவுக்கு ஏற்பாடு செய்தல், மருத்துவ சிகிச்சை அளித்தல், போக்குவரத்து வசதி ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள்/நகராட்சி ஆணையர்களுக்கு வழங்குவதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கப்படும். கீழ்க்காணும் மதிப்பீடுகள் அடிப்படையில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்படும்.

அ) 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி மக்கள் தொகை அளவு – 50 சதவீத மதிப்பீடு

ஆ) தற்போதைய நிலவரப்படி, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 40 சதவீத மதிப்பீடு

இ) அனைத்து மாநிலங்களுக்கும் குறைந்தபட்ச நிதி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு சமமான பங்கு – 10 சதவீத மதிப்பீடு

இந்த நிதி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மாநிலப் பேரிடர் நிவாரண ஆணையர் மூலமாக மாவட்ட ஆட்சியர்/மாவட்ட நீதிபதி/ நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வழங்கப்படும்.

3) தடுப்பு மருந்து தயாரிப்பு

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து என்பது தற்போதைய மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. அதிநவீனத் தடுப்பு மருந்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் இந்தியக் கல்வியாளர்கள், தொடக்க நிலை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினர் ஒன்று சேர்ந்துள்ளனர். கோவிட்-19 தடுப்பு மருந்து வடிவமைப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்போருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.100 கோடி வழங்கப்படும். தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வழங்கப்படும் இந்த நிதி, முதன்மை அறிவியல் ஆலோசகரின் மேற்பார்வையில் பயன்படுத்தப்படும்.