கோவா அரசின் வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.
தந்தேராஸ் பண்டிகையன்று, தேசிய அளவில், வேலைவாய்ப்பு விழா என்ற திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியிருந்தார். மத்திய அரசில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் பிரச்சாரத்தின் தொடக்கமாக இது அமைந்திருந்தது. அப்போது தொடங்கி குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா அரசுகளால் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரையாடியதோடு, இரண்டு நாட்களுக்கு முன்பு, புதிதாக பணியிலமர்த்தப்பட்டுள்ள 71,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கும் விழாவின்போது பல்வேறு அரசுத் துறைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய பணியாளர்களுக்கு இணைய வழியாக புத்தாக்க பயிற்சி வழங்கும் கர்மயோகி பிராரம்ப் இணையதளத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இன்றைய விழாவில் பேசிய பிரதமர், பணி நியமன கடிதங்களைப் பெற்றுக் கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கோவா அரசு மேற்கொண்டுள்ள மிக முக்கிய நடவடிக்கை இது என்று குறிப்பிட்டார். கோவா காவல்துறை மற்றும் இதர துறைகளில் வரும் மாதங்களில் மேலும் பல பணி நியமன முகாம்கள் நடைபெற உள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். “இதன் மூலம் கோவா காவல்துறை வலு பெறுவதோடு, மாநில மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு கிடைக்கும்”, என்றார் அவர்.
“கடந்த சில வாரங்களில் பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறுவதோடு, மத்திய அரசும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது”, என்று திரு மோடி கூறினார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இரட்டை எஞ்சின் அரசுகள் ஆளும் மாநிலங்கள், தங்கள் நிலைக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்யும் முயற்சிகளுக்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோவா மாநிலத்தின் வளர்ச்சிக்காக கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். மாநிலத்தில் நடைபெற்று வரும் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களைப் போலவே ரூ. 3000 கோடி மதிப்பில் மோபாவில் கட்டமைக்கப்பட்டு, விரைவில் திறக்கப்படவுள்ள விமான நிலையம், கோவாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் முக்கிய வேலைவாய்ப்பு ஆதாரமாக உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “மாநிலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, உள்கட்டமைப்பை வளர்ப்பது தான் ‘தன்னிறைவு கோவாவின்’ தொலைநோக்குப் பார்வை” என்று அவர் குறிப்பிட்டார். கோவா சுற்றுலா பெருந்திட்டம் மற்றும் கொள்கை குறித்துப் பேசிய பிரதமர், கோவாவின் வளர்ச்சிக்காக மாநில அரசு புதிய திட்டத்தை உருவாக்கி இருப்பதாகவும், இதன் மூலம் சுற்றுலா துறையில் முதலீடு செய்வதற்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் காரணமாக வேலைவாய்ப்பு பெருமளவு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். பாரம்பரிய விவசாயத்தில் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்காக கோவாவின் ஊரகப் பகுதிகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைப் பட்டியலிட்ட பிரதமர், நெல், தேங்காய், சணல், வாசனைப் பொருட்களின் உற்பத்தி, பழங்களைப் பதப்படுத்தும் பணியில் ஈடுபடும் விவசாயிகள், சுய உதவிக் குழுக்களுடன் நேரடியாக இணைக்கப்படுவதாகத் தெரிவித்தார். இது போன்ற முயற்சிகள் கோவாவில் புதிய வேலைவாய்ப்புகளையும், சுய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.
கோவாவின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றுமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர், “உங்கள் வாழ்வின் மிக முக்கிய 25 ஆண்டுகள் தற்போது தொடங்க இருக்கின்றன”, என்று கூறினார். வளர்ந்த இந்தியா என்ற தமது தொலைநோக்குப் பார்வையை முன்வைத்த பிரதமர், 2047-ஆம் ஆண்டின் புதிய இந்தியா என்ற இலக்கையும் குறிப்பிட்டு தம் உரையை நிறைவு செய்தார். “கோவாவின் வளர்ச்சியுடன், 2047- ஆம் ஆண்டின் புதிய இந்தியா என்ற இலக்கும் உங்கள் முன் உள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் கடமையின் பாதையில் முழு அர்ப்பணிப்புடனும், தயார்நிலையுடனும், தொடர்ந்து பயணிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”, என்று அவர் தெரிவித்தார்.
****
(Release ID: 1878456)
SM/RB/KRS
My remarks at Goa Rozgar Mela. Congratulations to the newly inducted recruits. https://t.co/GRqunDGI6w
— Narendra Modi (@narendramodi) November 24, 2022