Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொவிட்-19 நிலை குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை

கொவிட்-19 நிலை குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை


கொவிட்-19 நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

அண்மைக் காலங்களில் பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டார். “ஒரு குடும்ப உறுப்பினராக, இந்தத் துயர தருணத்தில் நான் உங்களோடு இருக்கிறேன். பிரம்மாண்டமான இந்த சவாலை, உறுதித்தன்மை, தைரியம் மற்றும் முன்னேற்பாடுடன் நாம் அனைவரும் இணைந்து  எதிர்கொள்ள வேண்டும்”, என்று பிரதமர் கூறினார். கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துணை மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், காவல்துறையினரின் பங்களிப்பிற்கு அவர் மரியாதை செலுத்தினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிராணவாயுவின் தேவை அதிகரித்து வருவதை எதிர்கொள்வதற்காக, அரசு விரைவாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், பணியாற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். தேவை ஏற்படும் ஒவ்வொரு நபருக்கும் பிராணவாயு கிடைக்க, மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறையும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பிராணவாயு உற்பத்தியையும், விநியோகத்தையும் அதிகரிக்க பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய பிராணவாயு ஆலைகளை நிறுவுவது, புதிதாக ஒரு லட்சம் சிலிண்டர்களை வழங்குவது, தொழில்துறை பயன்பாட்டில் உள்ள பிராண வாயுவை அளிப்பது, பிராணவாயு ரயில் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

மிகக் குறுகிய காலத்தில் நமது விஞ்ஞானிகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர் என்று கூறிய பிரதமர், தற்போது இந்தியாவில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு இணையாக உலகிலேயே மிகக் குறைந்த விலையில் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டு நடவடிக்கையின் காரணமாகஇந்தியாவில் தயாரிக்கப்பட்டஇரண்டு தடுப்பூசிகளுடன் உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.

தடுப்பூசி சம்பந்தமாக நேற்று எடுக்கப்பட்ட முடிவு குறித்துப் பேசிய பிரதமர், மே 1-ஆம் தேதிக்குப் பிறகு, 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் பாதி அளவு, நேரடியாக மாநிலங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் செல்லும்.

உயிர்களைப் பாதுகாப்பதுடன் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொண்டு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் குறைக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம், நகரங்களில் உள்ள பணியாளர்களுக்குத் தடுப்பூசி விரைவில் கிடைக்கும். தொழிலாளர்களின் தன்னம்பிக்கையை மாநில அரசுகள் ஊக்குவித்து, அவர்கள் இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இயங்கும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு நம்பிக்கையூட்டுவதன் வாயிலாக, பணியாளர்களும், தொழிலாளர்களும் அதிகப் பயனடைவதுடன், அவர்களது பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே தடுப்பூசிகள் போடப்படும்.

முதல் அலையின் துவக்கக் காலத்தை விட  தற்போதைய சவாலை எதிர்கொள்வதற்கு நம்மிடம் மேம்பட்ட அறிவும், வளங்களும் இருப்பதாக பிரதமர் கூறினார். மக்களின் பங்களிப்போடு இந்தக் கொரோனா அலையையும் நம்மால் தோற்கடிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இளைஞர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், சுற்றியுள்ள இடங்களிலும் கொவிட் தொற்றை எதிர்கொள்ள சரியான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் கட்டுப்பாட்டு மண்டலங்கள், தடை உத்தரவுகள் மற்றும் பொது முடக்கங்கள் தவிர்க்கப்படும். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கும் சூழலை குழந்தைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன்றைய சூழ்நிலையில், பொதுமுடக்கத்திலிருந்து நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். மாநில அரசுகள், பொது முடக்கத்தைக் கடைசி உத்தியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்மிகச் சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாம் கவனம் செலுத்தி, நம்மால் இயன்ற அளவு பொது முடக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

******