இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநில ஆளுநர்களுடன் கொவிட் –19 நிலைமை மற்றும் நாட்டில் நடந்து வரும் தடுப்பூசி இயக்கம் குறித்து காணொலி மூலம் உரையாற்றினார்.
கொவிட்டுக்கு எதிரான போரில், தடுப்பூசிகளுடன், நமது விழுமியங்களும், கடமை உணர்வும் நமது மிகப்பெரிய பலம் என்று பிரதமர் கூறினார். கடந்த ஆண்டு இந்தப் போரில் பங்கேற்ற குடிமக்களைப் பாராட்டிய அவர், பொதுமக்கள் பங்கேற்பில் வெளிப்பட்ட அதே கடமை உணர்வை இப்போதும் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். ஆளுநர்களின் பங்கு, அவர்களின் சமூகத் திறனைப் பயன்படுத்துவதன் மூலம், இதை அடைவதற்கு மிகவும் முக்கியமானதாகிறது என்று அவர் கூறினார். மாநில அரசுகளுக்கும், சமுதாயத்திற்கும் இடையில் நல்ல ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கு ஆளுநர்கள் முக்கியமான இணைப்பாக உள்ளார்கள் என்றார். மேலும், அனைத்து சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
நுண்ணிய கட்டுப்பாட்டை நோக்கி, மாநில அரசுகளுடன் சமூக நிறுவனங்கள் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதி செய்வதில் ஆளுநர்கள் தீவிரமான பங்காற்ற முடியும் என்று பிரதமர் பரிந்துரைத்தார். மருத்துவமனைகளில் அவசர ஊர்தி, வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜனின் திறன் அதிகரிப்பதை உறுதிப்படுத்த, அவர்களின் சமூக வலைப்பின்னல் உதவும் என்று அவர் கூறினார். தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்த செய்தியைப் பரப்புவதோடு, ஆயுஷ் தொடர்பான தீர்வுகள் குறித்த விழிப்புணர்வையும் ஆளுநர்கள் ஏற்படுத்தலாம்.
நமது இளைஞர்களும், நமது தொழிலாளர்களும், நமது பொருளாதாரத்தின் முக்கிய அங்கம் என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே, நமது இளைஞர்கள் கொவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்வது முக்கியம். இந்த `பொதுமக்கள் பங்கேற்புணர்வில்’, பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களை அதிக ஈடுபாட்டுடன் செயல்படச் செய்வதில் ஆளுநர்களின் பங்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் உள்ள வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும், என்றார். கடந்த ஆண்டைப் போலவே, தேசிய மாணவர் படையும் (என்.சி.சி), நாட்டு நலப்பணித் திட்டமும் (என்.எஸ்.எஸ்) இந்த ஆண்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். இந்தப் போரில், ஆளுநர்கள், `பொதுமக்கள் பங்கேற்புணர்வின்’ முக்கியமான தூணாக உள்ளனர் என்றும், மாநில அரசுகளுடனான அவர்களின் ஒருங்கிணைப்பு, மாநில நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவை நாட்டின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.
கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து விவாதித்த பிரதமர், வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் இந்தக் கட்டத்தில், கடந்த ஆண்டு அனுபவமும், மேம்பட்ட சுகாதாரத் திறனும், நம் நாட்டுக்கு உதவும் என்று கூறினார். ஆர்டிபிசிஆர் சோதனை திறன் அதிகரிப்பது குறித்து பேசிய பிரதமர், பரிசோதனை கிட் மற்றும் சோதனை தொடர்பான பிற பொருள்களைப் பொறுத்தவரை நாடு தற்சார்பு பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். இவை அனைத்தும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளின் விலையையும் குறைக்க வழிவகுத்தன. சோதனை தொடர்பான பெரும்பாலான தயாரிப்புகள் ஜெம் போர்ட்டலிலும் கிடைக்கின்றன என்று அவர் கூறினார். கண்காணிப்பு, தடமறிதல் மற்றும் சோதனை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார், மேலும், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை 60% முதல் 70% வரை அதிகரிக்க வேண்டும் என்றார். கூடுதலான மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
தடுப்பூசிகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். 10 கோடி தடுப்பூசிகளின் மைல்கல்லை எட்டும் வேகமான நாடாக இந்தியா மாறியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். கடந்த நான்கு நாட்களில் தடுப்பூசி திருவிழாவின் நேர்மறையான தாக்கத்தை குறிப்பிட்ட அவர், இந்த காலகட்டத்தில், தடுப்பூசி இயக்கம் விரிவுபடுத்தப்பட்டதாகவும், புதிய தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
கலந்துரையாடல்
குடியரசுத் துணைத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்திய பிரதமரையும், தொற்றுநோயை சமாளிக்கத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அவரது செயலூக்கமான நடவடிக்கைகளையும், குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். இந்தியாவிற்கும், முழு உலகிற்கும் தடுப்பூசி வழங்கிய அறிவியல் சமூகத்தின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார். பெருந்தொற்றின் போது, முக்கிய பங்காற்றிய சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பிற முன்கள ஊழியர்களின் பணிகள் குறித்தும் அவர் பேசினார்.
அந்தந்த மாநிலங்களில் அனைத்து கட்சி கூட்டங்களை வழிநடத்துவதன் மூலமும், சிவில் சமூக அமைப்புகளுடன் ஈடுபடுவதன் மூலமும் ஒருங்கிணைந்த முன்னணியைக் கொண்டுவர, குடியரசுத் துணைத் தலைவர் ஆளுநர்களுக்கு அழைப்பு விடுத்தார். கொள்கைகளைக் கடந்த இந்திய உணர்வு பின்பற்றப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக, ‘மாநிலத்தின் பாதுகாவலர்களான‘ ஆளுநர்கள், மாநில அரசுகளுக்கு வழிகாட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். கொவிட் நோயாளிகள் மற்றும் தடுப்பூசி இயக்கம் குறித்து மத்திய சுகாதார செயலாளர் விளக்கக்காட்சியுடன் எடுத்துரைத்தார். இந்த முயற்சியில், இந்தியா ஒரு செயலூக்கமான மற்றும் முன்கூட்டிய அணுகுமுறையை எவ்வாறு பின்பற்றியது என்பது குறித்த கண்ணோட்டத்தையும் அவர் வழங்கினார்.
ஆளுநர்கள், அந்தந்த மாநிலங்கள், வைரஸின் பரவலை எவ்வாறு எதிர்கொள்கின்றன மற்றும் தடுப்பூசி இயக்கத்தை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர், அதே நேரத்தில் மாநிலங்களில் சுகாதார வசதிகளின் குறைபாடுகளையும் குறிப்பிட்டனர். இந்த முயற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கான பரிந்துரைகளையும் அவர்கள் அளித்தனர். பல்வேறு குழுக்களின் முனைப்பான சமூக ஈடுபாட்டின் மூலம், `பொதுமக்கள் பங்கேற்புணர்வை’ எவ்வாறு அதிகரிக்க முடியும் என்ற திட்டங்களையும், ஆளுநர்கள் பகிர்ந்து கொண்டனர்.
PM interacts with the Governors on Covid-19 situation and Vaccination Drive in the country. https://t.co/9KwHDjmW43
— PMO India (@PMOIndia) April 14, 2021
via NaMo App pic.twitter.com/pnjE2QFccd