Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் தொடர்புடைய பல்வேறு துறையினருடன் பிரதமர் தொடர்ந்து கலந்துரையாடல்


கொவிட்-19ஐ கட்டுப்படுத்தும் இந்தியாவின் போராட்டத்துக்கு இடையே, பிரதமர் திரு.நரேந்திர மோடி இதுதொடர்பான பல்வேறு துறையினருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, திரு.மோடி இன்று பல்வேறு மின்னணு ஊடக குழுமங்களின் தலைவர்கள், இந்திய தொழில்துறையினர் ஆகியோருடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
வழக்கமான கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள்
கொவிட்-19 பரவாமல் கட்டுப்படுத்தும் வழிவகைகளைக் கண்டறியும் விதமாக, ஜனவரி மாதத்திலிருந்து பிரதமர் திரு.மோடி, அதிகாரிகளுடனும், அனைத்து தரப்பு மக்களுடனும், பல்வேறு சுற்று கூட்டங்களை நடத்தி, விவாதித்துள்ளார்.
பிரதமர் நாள்தோறும் இத்தகைய கூட்டங்களை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அமைச்சரவை செயலர், பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலர் ஆகியோரிடம் இருந்து அவ்வப்போது தகவல்களைப் பெற்று வருகிறார்.

அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமையிலான அமைச்சர்கள் குழுவும் பிரதமருக்கு அவ்வப்போது விளக்கி வருகிறது.

தலைமைக்கு எடுத்துக்காட்டு
மக்கள் சமூக இடைவெளியைப் பராமரிக்கும் வகையில் முன்மாதிரியாக, பிரதமர் ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

நாட்டு மக்களுக்கு உரை- மக்கள் ஊரடங்கு
கொவிட் 19ஐ முறியடிக்க நாட்டைத் தயார்படுத்தும் விதமாக, பிரதமர் கடந்த 19-ம்தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மக்கள் தாங்களாக முன்வந்து மார்ச் 22-ம்தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணிவரை 14 மணிநேர மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனோ வைரசை எதிர்த்துப் போராட, உறுதிப்பாடு மற்றும் கட்டுப்பாடு என்ற இரண்டு அம்ச மந்திரத்தை திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அளித்தார்.
பிரதமர் அவரது உரையில், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்து, மக்கள் அச்ச உணர்வுடன் அவற்றை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கொவிட் -19 பொருளாதார மீட்பு பணிக்குழு
தொற்றுநோயின் காரணமாக ஏற்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, நிதியமைச்சர் தலைமையில், கொவிட்-19 பொருளாதார மீட்பு பணிக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். இந்தப் பணிக்குழு சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும். அவற்றின் அடிப்படையில் ,சவால்களை எதிர்கொள்ளும் முடிவுகளை அந்தக்குழு எடுக்கும். சவால்களைச் சந்திக்கும் முடிவுகள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் இக்குழு உறுதி செய்யும்.
குறைந்த வருவாய்ப் பிரிவினரின் சேவைகளைப் பெறும், வர்த்தக சமுதாயத்தினர் மற்றும் உயர் வருவாய்ப் பிரிவினர், அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பணியிடங்களுக்கு வரமுடியாமல், அவர்களது சேவையை செய்ய இயலாத நிலையில், அவர்களது ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற சமயங்களில் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருந்து துறையினருடன் சந்திப்பு
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தடையின்றி விநியோகிக்கப்படுவதை பராமரிக்கும் முயற்சியாக, பிரதமர் மார்ச் 21-ம் தேதி மருந்து துறை பிரதிநிதிகளுடன் காணொலி மூலம், கலந்துரையாடினார். அவரது கலந்துரையாடலில், மருந்து தொழில் நிறுவனங்கள் கொவிட்-19க்கான ஆர்.என்.ஏ சோதனைக் கருவிகளை போர்க்கால அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாட்டிற்குள் அதனைத் தயாரிப்பதற்குத் தேவையான உதவிகளை அரசு அளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
அத்தியாவசிய மருந்துகள் விநியோகத்தைப் பராமரிப்பது முக்கியம் என்றும், கள்ளச் சந்தை மற்றும் பதுக்கலைத் தடுப்பது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மாநிலங்களுடன் சேர்ந்து பணியாற்றுதல்
மார்ச் 20-ம் தேதி பிரதமர் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அனைவரும் சேர்ந்து சவாலைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தொற்று பரவுவதை தீவிரக் கண்காணிப்பு, விழிப்பு நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்து , அதனைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் சேர்ந்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நாடு தற்போது தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய கட்டத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பீதி அடையத் தேவையில்லை என்று உறுதியளித்தார்.
இதுவரை மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், பிரதமர் நாட்டில் நிலவும் ஒட்டுமொத்த சூழலை தனிப்பட்ட முறையில் உன்னிப்பாகக் கவனித்து வருவது பற்றியும் முதலமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது.
விளக்க வீடியோ காட்சிகளைப் பார்த்து, பரிசோதனை வசதிகளை அதிகரித்து, பாதிப்புக்கு வாய்ப்புள்ள பிரிவினரைப் பாதுகாக்கும் வகையில் பெரும் ஆதரவு தேவை என்று முதலமைச்சர்கள் கேட்டுக் கொண்ட போது, பிரதமர் தமது ஆதரவு குறித்து உறுதியளித்தார். சுகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாடு, சுகாதார உட்கட்டமைப்பு ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். விலைவாசி உயர்வு, பொருட்கள் பதுக்கலைத் தடுக்க மாநில முதலமைச்சர்கள், தத்தம் மாநில வர்த்தக பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாட வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். அவர்கள் தங்களது தங்களது சமரச உத்தி, தேவைப்பட்டால், சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
ஒன்றுபட்ட சார்க் பிராந்தியம்
உலகின் மக்கள் தொகையில் அதிக அளவைக் கொண்டுள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் யோசனையைக் கூறிய முதல் தலைவராக பிரதமர் திகழ்ந்தார். இந்தியாவின் தலைமையில் சார்க் நாடுகளின் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது.
கொவிட்-19 அவசரகால நிதியத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்த திரு.மோடி, அனைத்து நாடுகளும் தாமாக முன்வந்து இதற்கு பங்களிக்கலாம் என்று கூறினார். இந்தியாவின் முதல்கட்ட தவணையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியையும் அவர் அறிவித்தார். உடனடி நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் உறுப்பு நாடுகள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
இந்த அவசரகால நிதியத்துக்கு நேபாளம், பூடான், மாலத்தீவுகள் போன்ற சார்க் பிராந்திய நாடுகளும் நிதி அளித்துள்ளன.
சர்வதேச முயற்சி
பிரிட்டிஷ் பிரதமர் திரு. போரிஸ் ஜான்சன், இஸ்ரேல் பிரதமர் திரு. பெஞ்சமின் நேதன்யாஹூ ஆகியோருடன் மார்ச் 12-ம் தேதியும், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் திரு. முகமது பின் சல்மானுடன் மார்ச் 17-ம்தேதியும் தொலைபேசி மூலம் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
தவிக்கும் மக்களுக்கு உறுதுணை
பிரதமர் தலைமையிலான இந்தியா, கொரோனோ வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனா, இத்தாலி, ஈரான் மற்றும் உலகின் பிறநாடுகளில் தவித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களை அங்கிருந்து அகற்றி அழைத்து வந்துள்ளது.