Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர், கொல்கத்தா துறைமுகத்தின்


கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (12.01.2020) கலந்துகொண்டார்.

கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டுவிழாவைக் குறிக்கும் விதமாக, துறைமுகத்தின் பழைய கப்பல் நிறுத்து தளத்தில் கல்வெட்டு ஒன்றை பிரதமர் திறந்து வைத்தார்.

நாட்டின் தண்ணீர் சக்தியின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் தாமும் பங்கேற்பது மிகுந்த பெருமிதமளிப்பதாக திரு.மோடி தெரிவித்தார்.

“அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களுக்கு சாட்சியமாக இந்தத் துறைமுகம் திகழ்கிறது. சத்தியாகிரகம் முதல், தூய்மைப்பணி வரையிலான நாட்டின் மாற்றங்களை இந்தத் துறைமுகம் கண்டுள்ளது. இந்தத் துறைமுகம் சரக்குகளை அனுப்புவோரை மட்டுமின்றி, இந்த நாட்டிற்கும் உலகிற்கும் பல்வேறு அடையாளங்களை விட்டுச் சென்ற அறிவாளிகளையும் பார்த்துள்ளது. தொழில், ஆன்மீகம் மற்றும் தற்சார்புக்கான இந்தியாவின் விருப்பங்களை இந்த கொல்கத்தா துறைமுகம் பிரதிபலிக்கிறது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, துறைமுக கீதத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

குஜராத்தின் லோத்தல் துறைமுகம் முதல், கொல்கத்தா துறைமுகம் வரையிலான இந்தியாவின் நீண்ட நெடிய கடற்கரைப் பகுதி, வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுவதோடு மட்டுமின்றி, உலகம் முழுவதற்கும் நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் இடமாகவும் திகழ்கிறது.

“நம்நாட்டின் கடற்கரைகள்தான் வளர்ச்சிக்கான நுழைவாயில்கள் என எங்களது அரசு நம்புகிறது. இதன் காரணமாகத்தான் துறைமுக இணைப்பு மேம்பாடு மற்றும் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவதற்கான சாகர் மாலா திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ரூ.6 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான 3,600 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 200-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதுடன், 125 திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. ஆற்று(நதி) நீர்வழி கட்டுமாணங்களை மேற்கொண்டதன் காரணமாக, கொல்கத்தா துறைமுகம் கிழக்கு இந்தியாவின் தொழில் மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேபாளம், பங்களாதேஷ், பூடான் மற்றும் மியான்மர் நாடுகளுடனான வர்த்தகத்தையும் எளிதாக்கியுள்ளது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுக சபை

கொல்த்தா துறைமுக சபைக்கு டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். “வங்கத்தின் புதல்வரான டாக்டர் முகர்ஜி, நாட்டின் தொழில்மயமாக்கலுக்கு அடித்தளமிட்டதுடன், சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலை, இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை, சிந்திரி உரத்தொழிற்சாலை மற்றும் தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் போன்ற வளர்ச்சித் திட்டங்களிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார். பாபா சாஹேப் அம்பேத்கரையும் நான் நினைவுகூறுகிறேன். டாக்டர் முகர்ஜியும், பாபா சாஹேப்பும், சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவிற்கு புதிய தொலைநோக்கு பார்வையை அளித்தனர்” என்று பிரதமர் தெரிவித்தார்.
கொல்கத்தா துறைமுக சபை ஓய்வூதியதாரர் நலன்

கொல்கத்தா துறைமுக சபையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போதைய பணியாளர்களுக்கான ஓய்வூதிய நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான கடைசித் தவணைத் தொகையான ரூ.501 கோடிக்கான காசோலையையும் திரு.நரேந்திர மோடி வழங்கினார்.

கொல்கத்தா துறைமுக சபையின் இரண்டு மிகமூத்த ஓய்வூதியதாரர்களான திரு.நாகினா பகத் மற்றும் திரு.நரேஷ் சந்திர சக்ரவர்த்தி (முறையே 105 மற்றும் 100 வயதைக்கடந்தவர்கள்) ஆகியோரை பிரதமர் கௌரவித்தார்.

சுந்தரவனப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவியர் 200 பேருக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் பிரிதிலதா மாணவர் குடியிருப்பு திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான, குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் உழைப்பு சுரண்டப்பட்ட மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு நிதி திட்டங்களுக்கு மேற்குவங்க மாநில அரசு ஒப்புதல் அளித்தவுடன், இந்தத் திட்டங்களின் பலன் மேற்குவங்க மாநில மக்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

நேதாஜி சுபாஷ் உலர் துறைமுக வளாகத்தில் உள்ள கொச்சி- கொல்கத்தா கப்பல் பழுதுபார்ப்புப் பிரிவின் மேம்படுத்தப்பட்ட கப்பல் பழுதுபார்ப்பு வசதிகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

சரக்கு போக்குவரத்தை சுமூகமாக மேற்கொள்ளவும், கால விரயத்தைத் தடுக்கவும் கொல்கத்தா துறைமுக சபையின் கொல்கத்தா கப்பல் நிறுத்து மையத்தின் மேம்படுத்தப்பட்ட ரயில்வே கட்டமைப்பு வசதிகள் மற்றும் முழுமையான சரக்குப்பெட்டக கையாளும் வசதியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

கொல்கத்தா துறைமுக சபையின் ஹால்டியா கப்பல்துறை வளாகத்தில் உள்ள 3-வது கப்பல் நிறுத்தும் தளத்தை இயந்திரமயமாக்கும் பணிகள் மற்றும் ஆற்றுமுகத்துவார மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

********