Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்திற்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி


சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்திற்குச் சென்றார். மடத்தில் உள்ள துறவிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புனிதத் தலமான இந்த பேலூர் மடத்திற்கு வருகை தரும் நாட்டு மக்களுக்கு, அது ஒரு யாத்திரையாக மட்டுமின்றி, தங்களது வீட்டிற்கு வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் என்றார். இந்தப் புனித தலத்தில் இரவுப்பொழுதில் தங்கியதை மிகுந்த கௌரவமாக கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி பிரம்மானந்தா மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற அனைத்து குருமார்களின் அடையாளத்தையும் இங்கு உணர்ந்ததாகவும் கூறினார்.

தமது முந்தைய பயணத்தின் போது, சுவாமி ஆத்மஸ்தானாநந்தாவின் ஆசிகளைப் பெற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், பொதுமக்களுக்கு எப்படி சேவையாற்ற வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

“இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது பணிகளும், அவர் காட்டிய பாதையும் நம் அனைவருக்கும் எப்போதும் வழிகாட்டுவதாக அமையும்”.
மடத்தில் தங்கியுள்ள இளம் பிரம்மச்சாரிகளுடன் சற்றுநேரம் இருக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக குறிப்பிட்ட அவர், தாமும் ஒருகாலத்தில் பிரம்மச்சாரிய மனநிலையைக் கொண்டிருந்ததாகக் கூறினார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், விவேகானந்தரின் குரல், விவேகானந்தரின் தோற்றம் போன்றவைதான் நம்மை இங்கு ஈர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்த புனித தலத்திற்கு வந்த பிறகு, அன்னை சாரதா தேவி வசித்த இடங்கள் நமக்கு தாயின் அன்பை தரும் இடமாக உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

“தெரிந்தோ, தெரியாமலோ நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் விவேகானந்தரின் உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாக உள்ளனர். காலம் மாறிவிட்டது, பல்லாண்டுகள் உருண்டோடிவிட்டன, ஒரு நூற்றாண்டும் கடந்து விட்டது, ஆனால் சுவாமிஜியின் உறுதிப்பாடு, இளைஞர்களை ஈர்த்து விழித்தெழச் செய்கிறது. அவரது இந்த முயற்சி இனிவரும் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஈர்ப்பதாகவே இருக்கும்”.
தங்களால் மட்டும் உலகை மாற்றிவிட முடியாது என்று கருதும் இளைஞர்களுக்கு, “நாம் ஒருபோதும் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல” என்ற எளிய மந்திரத்தையும் பிரதமர் தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த உறுதிப்பாட்டுடன் புதிய இந்தியாவைப் படைப்பதற்கான நடவடிக்கைகளை நாடு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உறுதிப்பாடு அரசாங்கத்தினுடையது மட்டுமல்ல என்றும் 130 கோடி இந்திய மக்களின், குறிப்பாக இளைஞர்களின் உறுதிப்பாடு என்றும் கூறினார்.
தமது கடந்த 5 ஆண்டுகால அனுபவங்கள், இளைஞர்களை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியடையும் என்பதில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா சுத்தமாக இருக்குமா, இருக்காதா, இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இந்த அளவுக்கு அதிகரிக்குமா என்பது ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. ஆனால், இந்த நாட்டின் இளைஞர்கள் இதற்கான கட்டளையை ஏற்று செயல்படுவதன் மூலம், மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
இளைஞர்களின் பொறுமை மற்றும் ஆற்றல்தான், இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வதற்கான அடிப்படையாக இருக்கும் என்று அவர் கூறினார். இளைஞர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றிற்கு தீர்வு காண்பதோடு, சவால்களையே சவாலாக எடுத்துக் கொள்பவர்கள். இந்த சிந்தனையைப் பின்பற்றி மத்திய அரசும், பல்லாண்டு காலமாக நாடு எதிர்நோக்கியிருந்த சவால்களுக்குத் தீர்வுகாண முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் தினமான இன்று, ஒவ்வொரு இளைஞரையும் சமாதானப்படுத்தி, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அவர்களை திருப்திப்படுத்துவதோடு, அவர்களின் மனதில் உள்ள குழப்பங்களைப் போக்குவது தமது பொறுப்பு என்று உணர்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டமல்ல, மாறாக குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் என்று அவர் தெளிவுபடுத்தினார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, மத நம்பிக்கை காரணமாக துன்புறுத்தப்பட்டு, அடக்கப்பட்ட மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை எளிதாக்குவதற்கான ஒரு திருத்தம்தான் என்றும் அவர் கூறினார். மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். இதுதவிர தற்போதும் கூட, எந்த மதத்தைச் சேர்ந்தவரும், அவருக்கு மத நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்திய அரசியல் சாசனத்தின்மீது நம்பிக்கை கொண்டிருந்தால், உரிய சட்ட நடைமுறைகளின்படி அவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம். வடகிழக்கு மாநிலங்களின் அமைவிடம் காரணமாக இந்த சட்டத்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், அரசு உரிய வழிமுறைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து தெளிவுபடுத்திய பிறகும், சிலர் அரசியல் காரணங்களுக்காக குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து மக்களிடையே தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார். குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தத்தால் சர்ச்சைகள் கிளம்பாமல் இருந்திருந்தால், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்பதை உலகம் அறிந்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உரிமை எந்த அளவிற்கு மீறப்பட்டுள்ளது என்பதையும் அறிந்திருக்க முடியாது. தங்களது முன்முயற்சி காரணமாகவே, கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வளவு குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பது குறித்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

நமது கலாச்சாரமும், நமது அரசியல் சட்டமும், குடிமக்களாக நமது கடமைகள், நமது பணிகளை நேர்மையாகவும், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு இந்தியரின் பணியும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பாதையைப் பின்பற்றினால், இந்தியாவை உலக அரங்கில் அதற்குரிய இடத்தில் நாம் காணலாம். இதையே ஒவ்வொரு இந்தியரிடமிருந்தும் சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்தார். அத்துடன் இதுவே இந்த அமைப்பின் சாராம்சமாகும். எனவே, அவரது கனவை நனவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

********