பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கொல்கத்தாவின் ஜோகா குடிநீர், துப்புரவு மற்றும் தரத்திற்கான தேசிய மையத்தின் பெயரை, ‘டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் (SPM-NIWAS) பின்னோக்கிய தேதியிட்டு பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜோகா டைமண்ட் ஹார்பர் சாலையில், 8.72 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சித் திட்டங்கள் மூலம் பொது சுகாதார பொறியியல், குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முதன்மையான நிறுவனமாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இத்தகைய திறன்கள் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள முன்னணி பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பொருத்தமாக அமையும். அதன்படி, பயிற்சி உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம், மற்றும் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பொருத்தமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் பயிற்சியை எளிமையாக்கும் வகையில், நீர் தூய்மை மற்றும் சுகாதாரம் தொழில்நுட்பங்களின் சிறிய மாதிரிகள் நிறுவப்பட்டுள்ளன.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, முன்னணி தலைவராகவும், தேசிய ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றியவராகவும் திகழ்ந்தார். தொழில் மயமாக்கலுக்கான உத்வேகத்துடன், திகழ்ந்த அவர், சிறந்த அறிஞர், கல்வியாளர் என பன்முக திறமைகளுடன் விளங்கினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இளம் துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது புதிய நிறுவனத்திற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படுவது அவரது அர்ப்பணிப்புடன் கூடிய பணியை ஊக்குவிப்பதுடன், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்வேகத்தையும் வழங்கும். இந்த நிறுவனம் 2022 டிசம்பரில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
*********
TV/PLM/RS/RJ