கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இதுவரையில் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் 2020 மார்ச் 7-ஆம் தேதி பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, அமைச்சரவைச் செயலாளர் ராஜிவ் கௌபா, நிட்டி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் கே. பால், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் சுகாதாரம் பார்மசூட்டிகல்ஸ், மக்கள் விமானப் போக்குவரத்து, வெளியுறவு, சுகாதார ஆராய்ச்சி, உள்துறை, கப்பல் போக்குவரத்து, என்.டி.எம்.ஏ. துறைகளின் செயலாலர்களும், வேறு அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் எடுத்துரைத்தார். தமது துறை மூலமாகவும், இதற்கு ஆதரவான மற்ற அமைச்சகங்கள் மூலமாகவும், ஆயத்தநிலை மற்றும் சிகிச்சை வசதிகள் அளிப்பதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விளக்கிக் கூறினார். நாட்டுக்குள் வருபவர்களுக்குப் பரிசோதனை, சமுதாய அளவில் பரிசோதனை, ஆய்வகங்களின் தயார் நிலை, மருத்துவமனைகள் தயார்நிலை, மருந்துகள் கையிருப்பு, அவசர நிலை தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி பற்றியும் அவர் விளக்கினார்.
மருந்துகள் மற்றும் இதர உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு இருப்பதாக மருந்தியல் துறையின் செயலாளர் தெரிவித்தார்.
அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள், சர்வதேச எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு செய்வது, உரிய நடைமுறைகளின்படி சமுதாய அளவில் கண்காணிப்பு செய்வது, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்வது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வசதியாக மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வசதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று நிட்டி ஆயோக் உறுப்பினர் குறிப்பிட்டார். ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் பேசப்பட்டது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்து அமைச்சகங்களின் பணிகளையும் பிரதமர் பாராட்டினார். உருவாகி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இந்தியா தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த நோய் பற்றியும், இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். உலக அளவிலும், மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் சிகிச்சையில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றைப் பின்பற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். முடிந்த வரையில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். கொரோனா விஷயத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர். தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குப் போதுமான இட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த நோய் மேற்கொண்டு பரவாமல் தடுக்க தீவிர சிகிச்சைப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு சீக்கிரம் மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வருவதற்கான திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். பொது சுகாதார கண்ணோட்டத்தில், இந்தத் தொற்று நோயைக் கையாள்வதற்கான தீவிர சிகிச்சை வசதிகள் உரிய காலத்தில் கிடைப்பதற்கு முன்கூட்டியே, போதிய திட்டமிடல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
**********
Prime Minister reviews the situation on COVID-19 with concerned Ministries. https://t.co/2TQz3Mnwzx
— PMO India (@PMOIndia) March 7, 2020
via NaMo App pic.twitter.com/JQJioAoiJX