கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டக்காலம் முழுவதும் நாட்டில் நிலவிய தன்னலமற்ற, வலிமையான மனநிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி வெகுவாக பாராட்டினார். தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்த பிறகு பேசிய திரு மோடி, கடந்த வருடத்தில் இந்தியர்கள் தனி நபர்களாகவும், குடும்பமாகவும், தேசமாகவும் பல்வேறு விஷயங்களைக் கற்றறிந்து, பொறுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். தலைசிறந்த தெலுங்கு கவிஞரான திரு குரஜதா வெங்கட அப்பாராவின் வரிகளை அடிக்கோடிட்ட திரு மோடி, நாம் எப்பொழுதும் பிறருக்காக தன்னலமறியாமல் செயல்பட வேண்டும் என்று கூறினார். ஒரு தேசம் என்பது வெறும் மணல், தண்ணீர் மற்றும் கற்கள் அல்ல, “மக்களாகிய நாம்” என்பதற்கு உதாரணமாக செயல்படுவதே தேசமாகும். இந்த மனநிலையுடனே இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராடியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தொடக்கக் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது நண்பர்களும் உறவினர்களும் சென்று பார்க்க இயலாமல் தவித்ததையும், இது தொடர்பாக பொதுமக்களிடையே நிலவிய குழப்பத்தையும் பிரதமர் உணர்ச்சிபூர்வமாக நினைவுகூர்ந்தார். இந்த நோய், தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களது அன்னையர்களிடமிருந்து பிரித்து, வயது முதிர்ந்த பெற்றோர்களை மருத்துவமனைகளில் தனிமையில் இருக்கச் செய்தது. நோய் தொற்றுக்கு எதிராக போராடி உயிரிழந்த உறவினருக்கும் முறையான பிரியாவிடை வழங்க இயலவில்லை. இதுபோன்ற நினைவுகள் இன்றும் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன என்று உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்ட பிரதமர் கூறினார்.
அந்த இருள் சூழ்ந்த நாட்களிலும் ஒரு சிலர் நம்பிக்கையை ஏற்படுத்தியதாக பிரதமர் நினைவுகூர்ந்தார். மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர்கள், ஆஷா பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவலர்கள், இதர முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பிறரைக் காப்பாற்றி, அவர்கள் அளித்த பங்கை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். தங்கள் விருப்பத்தை விட மனிதநேயத்திற்கான கடமைக்கு அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள். இவர்களில் ஒரு சிலர் தங்கள் வீடுகளுக்கும் செல்லாமல் கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரையும் நீத்தனர் என்று பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மனச்சோர்வும், அச்சமும் நிலவிய சூழ்நிலையில் முன்களப் பணியாளர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், அவர்களது பங்கைப் போற்றும் வகையில் தற்போது முதலாவதாக அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் திரு மோடி கூறினார்.
—–