கொரிய அதிபரின் மனைவி திருமதி. கிம் ஜங் சூக் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட கொரிய அதிபரின் மனைவி திருமதி. கிம் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நவம்பர் 6, 2018 அன்று உத்தரப் பிரதேச மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள தீபவுட்சவத்தில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும், அதே நாளில், அயோத்தியாவில், ராணி சூரிரட்னாவிற்காக (ஹியூ ஹுவாங்-ஓக்) அமைக்கப்படும் புதிய நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கிறார். அயோத்தியின் இளவரசி சூரிரட்னா மூலம் அயோத்தியாவிற்கும், கொரியாவிற்கும் இடையே ஆழமான வரலாற்று இணைப்பு உள்ளது. அவர் 48 சி.இ.-யில் கொரியாவிற்கு சென்று கொரிய அரசர் சுரோவை திருமணம் செய்து கொண்டார்.
இன்று நடைபெற்ற சந்திப்பில், பிரதமர் மோடியும் அதிபர் மனைவி கிம்மும் இந்தியா மற்றும் கொரியா இடையேயான ஆழமான நாகரிக மற்றும் ஆன்மீக இணைப்புகள் குறித்து விவாதித்தனர். மேலும், இரு நாடுகளுக்கு இடையே மனித வள பரிமாற்றத்தினை ஊக்குவிப்பது குறித்த தங்களின் கருத்துகளை பறிமாறிக்கொண்டனர்.
சியோல் அமைதி விருது பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு அதிபர் மனைவி கிம் வாழ்த்து தெரிவித்தார். இந்த புகழ் முழுவதும் இந்திய மக்களுக்கு உரியது என்று பிரதமர் கூறினார்.
ஜூலை 2018-ல் அதிபர் மூன் ஜே இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த பிரதமர், அவரது இந்த வருகை இந்தியா மற்றும் கொரியா இடையேயான கூட்டுறவிற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று கூறினார்.
******